ருத்திரபிரயாகை கார்த்திகேய சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kartik Swami Temple, Rudraprayag
கார்த்திகேய சுவாமி கோயில்

கார்த்திகேய சுவாமி கோயில் என்பது இந்தியாவின், உத்தரகண்ட் மாநிலம் ருத்திரபிரயாகை மாவட்டத்தில் ருத்திரபிரயாகை-போகாரி சாலையில் கனக் சௌரி கிராமத்திற்கு அருகில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3050 மீட்டர் உயரத்தில் உச்சியில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். கார்த்திகேய சுவாமி கோயிலானது, சிவபெருமானின் மூத்த மகனான கார்த்திகேயனுக்காக (வட இந்தியாவில் முருகன் சிவனின் மூத்த பிள்ளையாக கருதப்படுகிறார்) கட்டப்பட்டது. அவர் தன் தந்தையின் மீதான பக்திக்கு சான்றாக தனது எலும்புகளையும் உடலையும் அவருக்கு காணிக்கை ஆக்கினார். இந்நிகழ்வு இங்கு நடந்திருக்கலாம் என பக்தர்களால் நம்பப்படுகிறது. தென்னிந்தியாவில் கார்த்திகேய சுவாமியை முருகன் என்று அழைக்கப்படுகிறார்.

கோயிலில் தொங்கவிடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான மணிகளின் ஒலி அங்கிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவுவரைக் கேட்கிறது. கார்த்திகை பூர்ணிமா நாளில் இங்கு வந்து மணியைக் கட்டி சுவாமி தரிசனம் செய்தால், பக்தர்களில் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. தினமும் மாலை சந்தியா கால ஆரத்தி நடக்கிறது. சில சமயங்களில் கோவிலில் ஏற்பாடு செய்யப்படும் மஹா-பந்தர் அல்லது பிரமாண்ட விருந்தானது பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்கும் ஒரு சிறப்பு அம்சமாகும்.

தொன்மம்[தொகு]

Kartik Swami Temple, Rudraprayag
கார்த்திகேய சுவாமி கோவில், ருத்திரபிரயாகை

கர்வால் இமயமலையில் கார்த்திகேயனுக்காக கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்குப் பின்னால் ஒரு தொன்மம் உள்ளது. இந்து தொன்மங்களின்படி, சிவபெருமான் தன் மகன்களான விநாயகப் பெருமானுக்கும் கார்த்திகேயனுக்கும் ஒரு போட்டி வைக்கிறார். யார் முதலில் உலகை ஏழுமுறை சுற்றி வருகிறாறோ அவர் அனைவராலும் முதலில் வணங்கப்படும் பெருமையைப் பெறுவார் என்கிறார். இதைக் கேட்ட கார்த்திகேயன் தன் வாகனத்தில் உலகை வலம் வர புறப்படுகிறார். அதே நேரத்தில் விநாயகப் பெருமான் தன் பெற்றோரான சிவனையும், பார்வதியையும் ஏழு முறை வலம் வந்து, அதுவே உலகை வலம் வந்ததாக பொருள் என்கிறார். விநாயகனின் செயலால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கே அனைத்து பூசைகளிலும் முதல் மரியாதை கிடைக்கும் பாக்கியத்தை வழங்குகிறார். பிறகு நடந்ததை அறிந்த கார்த்திகேயன் கோபம் கொள்கிறார். மேலும் தனது பயபக்தியின் அடையாளமாக தனது உடலையும் எலும்புகளையும் தன் தந்தைக்கு காணிக்கை ஆக்குகிறார். [1] வெண்ணிற எலும்புகளெள்ளாம் ஒன்றாகி சுயம்புவடிவ காத்திகேய சுவாமியாகி தேவர்களுக்கெல்லாம் காட்சியளிக்காறார். சிவபெருமான் முருகனின் திருவிளையாடலைப் புரிந்து கொண்டு, அவரை அவ்விடத்திலேயே பக்தர்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குமாறு பணித்தார். அதன்படியே வெண்ணிறச் சுயம்புத் திருமேனியுடன் (வெண்பலிங்குக் கல்) கார்திகேய சுவாமி அருள்பாலிக்கிறார்.[2]

அழகு[தொகு]

कार्तिक स्वामी मंदिर रुद्रप्रयाग से चौखम्बा का दृश्य
கார்த்திகேய சுவாமி கோயிலில் இருந்து சௌகம்பாவின் காட்சி ருத்திரபிரயாகை

கார்த்திகேயர் சுவாமி கோயிலை அடைய, கனகச்சௌரி கிராமத்திலிருந்து மலைப்பாதையில் சுமார் 3 கிலோமீட்டர் (1.9 மைல்) நடந்து செல்ல வேண்டும். மலையேற்றத்தின் போது திரிசூல், நந்தா தேவி, சௌகம்பா போன்ற சிகரங்கள் உட்பட இமயமலைத் தொடரின் விரிந்த காட்சிகளைக் காண இயலும். இது தாவரங்கள், விலங்கினங்களுக்கு மத்தியில் புனித யாத்திரை மேற்கொள்ளதக்க ஒரு நல்ல பயணமாக இருக்கும். [3] இங்கிருந்து சூரிய உதயத்தையும் சூரியன் மறைவையும் கண்டு களிக்க முடியும். குளிர் காலத்தில் இக்கோயில் பனியால் மூடியிருக்கும்.[2]

பயணம்[தொகு]

அக்டோபர் முதல் சூன் வரையிலான காலம் இங்கு பயணிக்க ஏற்ற காலமாகும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் வரும் பௌர்ணமி நாட்கள் குறிப்பாக கார்த்திகை பௌர்ணமி நாட்களில், சூன் மாத்தில் 11 நாட்கள் நடக்கும் கலச யாத்திரை நிகழ்விலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். கோயிலானது நாள்தோறும் காலை 6 மணி முதல் மாலை 8 மணிவரை திறந்திருக்கும்.[2]

இந்தக் கோயிலுக்கு டோராடூன் தொடருந்து நிலையத்தில் இருந்து 220 கி.மீ தொலைவில் உள்ள ருத்திரப்பிரயாகை நகரம் சென்று, அங்கிருந்து கனக் சௌரி சிற்றூர் வரை (ஏறக்குறைய 40 கி.மீ. தொலைவு) சாலை வழியாக பயணிக்கவேண்டும். அங்கிருந்து ஒரு நுழைவாயில் வழியாக 3.5 கி.மீ மலைப்பாதையில் நடந்து செல்லவேண்டும். மலைப்பாதையில் 3 கி.மீ. தொலைவை அடைந்த பிறகு, சுமார் அரை கி.மீ. தொலைவுக்கு செங்குத்தான படிக்கட்டுகளில் நடந்து சென்றால் இக்கோயிலைக் காணலாம்.[2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Uttarakhand: क्रौच पर्वत पर छिपा है भगवान कार्तिक का रहस्यमयी भंडार". Zee News हिन्दी. https://zeenews.india.com/hindi/religion/uttarakhand-mysterious-store-of-lord-karthik-is-hidden-on-the-crouch-mountain-till-today-only-two-people-were-able-to-see-it/926160. 
  2. 2.0 2.1 2.2 2.3 "ருத்ரப் பிரயாகை கார்த்திக் சுவாமி கோயில், கே. சுந்தர்ராமன்". இந்து தமிழ். 2023-யூலை-27. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Uttarakhand: कार्तिक स्वामी स्थान". उत्तराखण्ड हब.