மேற்தோல் (தாவரவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலையின் கூட்டுஉயிரணுத் தொகுப்பு

தாவரப் பாகங்களை மூடியிருக்கும் ஓரடுக்கு திசுக்களே மேற்தோல் என தாவரவியலில் அழைக்கப்படும். இது வெளிச்சூழலில் இருந்து தாவர உட்பாகங்களைப் பாதுகாக்கும். நீர் மற்றும் வாயுப் பரிமாற்றத்தை பொதுவாகக் கட்டுப்படுத்துவதோடு வேரின் மேற்றோலானது நீர் மற்றும் கனியுப்புக்களை உள்ளெடுக்கும் செயற்பாட்டையும் செய்யும்.

தாவர உடலில் அவற்றின் இருப்பிடத்தைப் பொருத்து இல்லாமல். ஒரே விதமான பணியை மேற்கொள்கின்ற பல கூட்டுஉயிரணுத்(tissue) தொகுப்புகள் சேர்ந்த தொகுதி, கூட்டுஉயிரணுத் தொகுப்பு(tissue system) அல்லது திசுத்தொகுப்பு என அழைக்கிறோம். சாக்ஸ் (Sachs) என்பவர் 1875 ஆம் ஆண்டு தாவரங்களில் உள்ள உயிரணுத்தொகுப்புகளை, மூன்று வகைகளாகப் பிரித்துள்ளார். அவை புறத்தோல் கூட்டுஉயிரணுத் தொகுப்பு (Epidermal tissue system), வாஸ்குலார்(vascular) கூட்டுஉயிரணுத் தொகுப்பு, அடிப்படை கூட்டுஉயிரணுத் தொகுப்பு என்பனவாகும்.

புறத்தோல் கூட்டுஉயிரணுத் தொகுப்பு[தொகு]

இலையின் ஒட்டுமொத்த உட்புற வரைபடம்

தாவரங்களின் வெளியுறையாக, புறத்தோல் கூட்டுஉயிரணுத் தொகுப்பு காணப்படுகிறது. புறத்தோல் கூட்டுஉயிரணுத் தொகுப்பானது, புறத்தோல், புறத்தோல் துளைகளையும், புறத்தோல் தூவிகளையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. புறத்தோல் பொதுவாக, உயிரணு இடைவெளிகள் இன்றி, நெருக்கமாக அமைந்த ஓரடுக்கு பாரன்கைமா(parenchyma) உயிரணுக்களால் ஆனது. ஆனால் புறத்தோலில் இடையிடையே, புறத்தோல் துளைகள் காணப்படுகின்றன. இலைகளில் காணப்படுகின்ற இலைத்துளைகளை சூழ்ந்து, இரண்டு சிறப்பான உயிரணுக்கள் காணப்படுகின்றன. அவை காப்பு உயிரணுக்கள் எனப்படும்.

புறத்தோலில் காப்பு உயிரணுக்களில் மட்டுமே, பசுங்கணிகங்கள் காணப்படுகின்றன. மற்ற புறத்தோல்உயிரணுக்கள் பசுங்கணிகங்களைக் கொண்டிருப்பதில்லை. புறத்தோல் உயிரணுக்களின், வெளிப்புற உயிரணுச்சுவரின் மீது கியூட்டிக்கிள்(cuticle) என்ற அடுக்கு காணப்படுகிறது. புறத்தோலில் காணப்படுகின்ற, இரண்டு காப்புஉயிரணுக்களால் சூழப்பட்ட, மிகச்சிறிய துளைகள் புறத்தோல் துளைகள் அல்லது இலைத்துளைகள் எனப்படும். கரும்பு போன்ற சில தாவரங்களில் காப்பு உயிரணுகளைச் சூழ்ந்து சில சிறப்பான உயிரணுக்கள் காணப்படுகின்றன. இவை மற்ற புறத்தோல் உயிரணுக்களிலிருந்து வேறுபட்டவை ஆகும். இவை துணைக்கருவிச் உயிரணுக்கள் (Accessory cells) என அழைக்கப் படுகின்றன.

டிரைக்கோம்கள்(Trichomes), வேர்தூவிகள் ஆகியவை புறத்தோல் தூவிகள் ஆகும். புறத்தோலிலிருந்து தோன்றும் ஒரு உயிரணுவால் ஆன அல்லது பல உயிரணுக்களாலான வளரிகள் 'டிரைக்கோம்கள்' எனப்படும். 'டிரைக்கோம்கள்' கிளைத்தோ அல்லது கிளைக்காமலோ காணப்படுகின்றன. வேரின் புறத்தோலில் (Rhizodermis) இருவகையான புறத்தோல் உயிரணுக்கள் உள்ளன. அவை நீண்ட உயிரணுக்கள் என்றும், குட்டை உயிரணுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. குட்டைஉயிரணுக்கள் 'டிரைக்கோபிளாசுட்டு'கள்(Trichoblast) எனப்படும். இவைகளிலிருந்து தான், வேர் தூவிகள் உருவாகின்றன.

புறத்தோல் கூட்டுஉயிரணுத் தொகுப்பின் பணிகள்[தொகு]

  1. தண்டுத் தொகுப்பில் (Shoot system) உள்ள புறத்தோல் கூட்டுஉயிரணுத் தொகுப்பில், கியூட்டிக்கிள்(cuticle) இருப்பதனால் அதிகப்படியான நீரிழப்பு தடை செய்யப்படுகிறது.
  2. புறத்தோலானது உட்புற கூட்டுஉயிரணுத் தொகுப்பிளைப் பாதுகாக்கிறது.
  3. புறத்தோல் துளைகள் நீராவிப்போக்கினையும், வளிப்பரிமாற்றத்தினையும் திறம்பட செய்ய ஈடுபடுகின்றன.
  4. விதைகள் பரவுதலிலும், கனிப்பரவுதலிலும் மேற்கூறப்பட்ட 'டிரைக்கோம்கள்' உதவிபுரிகின்றன.
  5. வேர்தூவிகள் மண்ணிலிருந்து நீரையும், கனிம உப்புக்களையும் உறிஞ்சுகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்தோல்_(தாவரவியல்)&oldid=2745651" இருந்து மீள்விக்கப்பட்டது