உள்ளடக்கத்துக்குச் செல்

காழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூக்கும் தாவரம் ஒன்றின் காழ், உரியம் என்பவற்றின் முதனிலை ,இரண்டம் நிலை அமைப்புகளைக் காட்டும் குறுக்கு வெட்டு[1]

காழ் (xylem) என்பது கலன் தாவரங்களில் காணப்படும் கொண்டுசெல்லல் இழையங்களில் ஒன்றாகும். (மற்றையது உரியம்). காழ் இழையம் நீர், கனியுப்பு என்பவற்றைக் கடத்தும்.

கட்டமைப்பு

[தொகு]
சில காழ்க் கலங்களின் குறுக்கு வெட்டு முகம். காழ் நார்கள் காட்டப்படவில்லை.
சில காழ்க் கலங்களின் குறுக்கு வெட்டு முகம். காழ் நார்கள் காட்டப்படவில்லை.
சில காழ்க் கலங்களின் குறுக்கு வெட்டு முகம். காழ் நார்கள் காட்டப்படவில்லை.

காழ் இழையம் அதன் கட்டமைப்பில் நான்குவகையான கலங்களைக் கொண்டிருக்கும்.[2]

காழ்க்கலன் நீர், கனியுப்பு என்பவற்றைக் கடத்தும் முக்கிய பாகமாகக் காணப்படும். காழில் காழ்க்கலன் மூலகத்தினூடாகவும், குழற்போலிகளினூடாகவும் பிரதானமாக நீர் கடத்தப்படுகின்றது. குழற்போலிகளை விட கலன் மூலகத்தின் நீர்க்கடத்துதிறன் அதிகமாகும் [3]. அவற்றின் வடிவத்தைக் கொண்டு கலன் மூலகத்தையும், குழற்போலியையும் வேறுபடுத்தலாம். கலன் மூலகம் விட்டம் கூடிய குட்டையான இறந்த கலமாகும். இவை ஒன்றன் மேலொன்று அடுக்கப்பட்டு, குறுக்குச் சுவர் அழிவடைந்து நீண்ட தொடர்ச்சியான காழ்க்கலன் உருவாகும். காழ்க்கலன் மூலகம் பூக்கும் தாவரங்களில் மாத்திரம் காணப்படும் கட்டமைப்பாக உள்ளது. குழற்போலிகள் கூர்ப்பில் முன்னரே உருவான நீர் கடத்தும் கல வகைகளாகும். இவை நார்களை ஒத்த கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இவற்றுக்கிடையே குழிகள் மூலம் நீர் கடத்தப்படுகின்றது. அனைத்து கலன் தாவரங்களிலும் குழற்போலிகள் உள்ளன. குழற்போலிக் கலங்கள் அதிகளவான குழிகளைக் கொண்ட நீண்ட முனை கூம்பிய இறந்த கலங்களாகும்.

காழில் நார்கள் கட்டமைப்பு ஆதாரம் வழங்கும் இறந்த கலங்களாக உள்ளன. புடைக்கலவிழையக் கலங்கள் [2] நிரப்பும் இழையமாகவும், உணவுச் சேமிப்பாகவும், ஆரை வழி நீர்க்கடத்தலுக்காகவும் உள்ளது. காழில் புடைக்கலவிழையத்தைத் தவிர ஏனைய மூன்று கல வகைகளும் இறந்த கலங்களாகும்.

காழின் உற்பத்தியின் அடிப்படையில் இரு வகையான காழிழையங்கள் உள்ளன:

  • முதற் காழ் (Primary xylem): இது தாவரத்தில் உச்சிப் பிரியிழையத்திலிருந்து தோற்றுவிக்கப்படும் முதலிழையத்தைச் சார்ந்த கலனிழைய வகை ஆகும். துணை வளர்ச்சி நடைபெறாத தாவரங்களில் முதற்காழ் மாத்திரமே நீரைக் கடத்தும்.
  • துணைக் காழ் (Secondary xylem): தாவரத்தில் கலன் மாறிழையத்திலிருந்து தோற்றுவிக்கப்படும் காழ் வகையாகும். இது தாவரத் துணையிழையத்தின் வகைகளில் ஒன்றாகும். இது தாவரத் தண்டின் விட்டத்தை அதிகரிக்கக் காரணமாகும் இழையமாகும். துணை வளர்ச்சி உடைய மரங்களிலும் தடித்த தண்டுடைய செடிகளிலும் துணைக் காழ் உருவாகின்றது. காழ் உள்ளாதியானதால் துணைக்காழ் உருவாக்கப்பட்டு வர பழைய துணைக் காழிழையமும், முதற்காழும் தண்டின் மையத்தில் அழுத்தப்பட்டுத், தடிப்படைந்து வைரமான மரம் உருவாகும். இப்பகுதியே தளபாட உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

தொழில்கள்

[தொகு]

காழில் நீரைக் கடத்த உதவும் விசைகள்

[தொகு]

காழில் நீரைப் புவியீர்ப்புக்கு எதிராக மேல் நோக்கிக் கொண்டு செல்லப் பல விசைகள் பங்களிக்கின்றன. காழில் பிரதான கடத்தும் கலங்கள் இறந்தவையென்பதால் காழில் நீர்க்கடத்தலுக்கு தாவரத்தின் அனுசேப சக்தி பயன்படுத்தப்படுவதில்லை. எனவே காழில் நீர் உயிர்ப்பற்ற கொண்டுசெல்லல் முறையிலேயே பின்வரும் விசைகளின் உதவியுடன் நடைபெறுகின்றது:

  • ஆவியுயிர்ப்பு இழுவை: தாவரத்தின் இலைகளில் ஆவியுயிர்ப்பு மூலம் தொடர்ச்சியாக நீர் இழக்கப்படுவதால், அங்கு கரையச் செறிவு அதிகரித்து நீரழுத்தம் குறைவடைகின்றது. வேரில் நீரழுத்தம் அதிகமென்பதால் காழினூடாக நீர் நீரழுத்தம் கூடிய பகுதியிலிருந்து நீரழுத்தம் குறைந்த பகுதிக்குச் செல்கின்றது. ஆவியுயிர்ப்பு இழுவையே காழினூடாக நீர் மேல் நோக்கிக் கொண்டு செல்லலுக்குப் பங்களிக்கும் பிரதான விசையாகும். ஆவியுயிர்ப்பு இழுவையானது கிணற்றிலிருக்கும் நீரை பம்பி மூலம் மேலே இழுத்தலுக்கு ஒப்பானது. இங்கு இழுவைக்குத் தேவையான சக்தியை ஆவியுயிர்ப்பு வழங்குகின்றது. நீரின் பிணைவு விசை ஆவியுயிர்ப்பு இழுவையினால் மேலிழுக்கப்படும் தொடர்ச்சியான நீர் நிரல் உடைவடையாமல் காக்க உதவுகின்றது.
  • வேரமுக்கம்: ஈரமான மண்ணின் நீரழுத்தம் வேரின் நீரழுத்தத்தை விட அதிகமாகும். எனவே பிரசாரணத்தினால் நீர் வேரினுள் உட்புகுவதால் ஏற்படும் விசை காரணமாக வேரமுக்கம் உருவாகின்றது. வேரமுக்கம் மிகவும் அதிகமானால் நீர் இலைகளினூடாகக் கசிவடையலாம்.
  • மயிர்த்துளை விசை: நீரின் ஒட்டற்பண்பு காரணமாக மயிர்த்துளைக் குழாய்களினூடாக எந்தவொரு உந்துதலும் இன்றி நீர் மேலெழலாம். இங்கு காழின் கலன் மூலகங்களும், குழற்போலிகளும் அவற்றின் மிகச்சிறிய விட்டம் காரணமாக மயிர்த்துளைக் குழாய்களாகச் செயற்படுகின்றன. எனினும் காழில் நீர்க்கடத்தலில் மயிர்த்துளை விசை குறைவான பங்களிப்பையே புரிகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Winterborne J, 2005. Hydroponics - Indoor Horticulture
  2. 2.0 2.1 Encyclopædia Britannica
  3. Peter A. Raven, Ray F. Evert, Susan E. Eichhorn (1999). Biology of Plants. W.H. Freeman and Company. pp. 576–577. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57259-611-2. {{cite book}}: Cite has empty unknown parameter: |nopp= (help)CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காழ்&oldid=2745249" இலிருந்து மீள்விக்கப்பட்டது