மேரு மந்தர புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேரு மந்தர புராணம் என்பது ஒரு சமண சமயத்தைச் சார்ந்த தமிழ் நூலாகும். இது சமண சமயத்தின் சாரம் எனக் கருதப்படுகின்றது. நீலகேசி என்னும் நூலுக்கு உரை வகுத்தவரான வாமனாசாரியரே மேரு மந்தர புராணத்தின் ஆசிரியராவார்.


ஆசையே உயிர்களில் துன்பங்களுக்கு மூல காரணம் என்பதைத் தெளிவுபடுத்தி அதனை விலக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் எழுதப்பட்டதே இந் நூலாகும்.


வட நாட்டு மதுரையை ஆண்ட அரசனொருவனுக்கு மக்களாகப் பிறந்த மேரு, மந்தரன் என்னும் இருவர், சமணர்களின் பதின்மூன்றாவது தீர்த்தங்கரரான விமலதீர்த்தங்கரரின் சீடராகித் துறவறத்தை நாடி முத்தியடைந்தனர். இவ்விருவரின் பெயரில் அமைந்ததே இந்த மேரு மந்தர புராணம். எனினும் இந்நூல், இம் மேரு, மந்தரர்களில் பல முற்பிறவிகளில் நடந்த கதைகளையும் உட்படுத்தியுள்ளது. அப்பிறவிகளில் ஆசையினால் ஏற்பட்ட குரோதங்களையும் அவை பல பிறவிகளூடாகத் தொடர்ந்து துன்பம் விளைவித்தமை பற்றியும் எடுத்துக் கூறுகின்ற மேரு மந்தர புராணம் இது தொடர்பான சமணக் கருத்துக்களைத் தெளிவாக உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.


பிறவிகளுக்கு மூலமாக இருப்பதுவும், வினைகளை உருவாக்குவதும், உயிர்களின் வீடுபேற்றுக்குத் தடையாக இருப்பதும், எல்லா உயிர்களுக்கும் பகையாக உள்ளதும் ஆசையே என்னும் பொருள்படும் இப் பாடல் மேரு மந்தர புராணத்தின் 324 ஆவது பாடலாகும்.


மோகமே பிறவிக்கு நல் வித்து
மோகமே வினை தன்னை முடிப்பது
மோகமே முடிவைக் கெட நிற்பது
மோகமே பகை முன்னை உயிர்க்கெலாம்


இந் நூலில் உள்ள 86 ஆம் பாடலில் அணு பற்றிய அக்காலக் கருத்து பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.


ஊறுஇரண்டாகி நாற்றம் வண்ணமும் சுவையுமொன்றாய்
கூறுஇரண்டாக்க லாகா நுண்மைத்தாய் அளவைக்கெல்லாம்
பேறுதன்வழிய தாகி பிறஙி மூவுலமுற்றும்
ஆறுகந்தங்கட் காதியாகியது அணுவதாமே.


இதன்படி, இரண்டு ஊறுகள், ஒரு சுவை, ஒரு நிறம் ஆகியவற்றை உடைய அணுக்கள் இரண்டாகப் பிரிக்க முடியாத அளவு சிறியவை. தானாகவே என்றும் இருக்கும் இவை உலகில் உள்ள அனைத்துக்கும் மூலமாக உள்ளன என்பதாகும்.


உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரு_மந்தர_புராணம்&oldid=3376528" இருந்து மீள்விக்கப்பட்டது