உள்ளடக்கத்துக்குச் செல்

முப்பிணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதியியலில் முப்பிணைப்பு அல்லது மும்மைப் பிணைப்பு (Triple bond) என்பது இரண்டு அணுக்களுக்கு இடையேயான ஒரு வேதிப் பிணைப்பு வகையாகும். வழக்கமாக சகப்பிணைப்பு வகையிலான ஒற்றைப் பிணைப்புகளில் இரண்டு பிணைப்பு எலக்ட்ரான்கள் மட்டுமே பங்கேற்கும். ஆனால், முப்பிணைப்பில் ஆறு பிணைப்பு எலக்ட்ரான்கள் பங்கேற்கின்றன. இரண்டு கார்பன் அணுக்களுக்கிடையே காணப்படும் இத்தகைய முப்பிணைப்பைப் பொதுவாக ஆல்க்கைன்களில் காணமுடியும். இவைகளைத் தவிர சயனைடுகள் மற்றும் சமசயனைடுகள் போன்ற வேதி வினைக்குழுக்கள் இத்தகைய முப்பிணைப்புகளைக் கொண்டுள்ளன. இருநைட்ரசன் மற்றும் கார்பன் ஓராக்சைடு போன்ற ஈரணு மூலக்கூறுகளும் இவ்வகை முப்பிணைப்புகளைக் கொண்டுள்ளன. அடிப்படை வேதி வாய்ப்பாட்டில் இரண்டு அணுக்களுக்கு இடையேயான முப்பிணைப்பை அவற்றின் குறியீடுகளுக்கு இடையில் மூன்று சிறிய இணைகோடுகள் வரைந்து குறிப்பிடுவர்(≡) . முப்பிணைப்பை அடையாளப்படுத்த உதவும் கருவியாக அச்சுக்கலையிலும் இந்தக் குறியீடே பயன்படுகிறது[1][2][3].

முப்பிணைப்புகள் இரட்டைப் பிணைப்பு மற்றும் ஒற்றைப் பிணைப்புகளைவிட வலிமையானவையாகும். குறுகிய பிணைப்பு நீளம் கொண்ட முப்பிணைப்பின் பிணைப்பு வரிசை 3 ஆகும்.

அசிட்டிலீன், H−C≡C−H சயனோசன், N≡C−C≡N கார்பன் ஓராக்சைடு, C≡O
முப்பிணைப்பு உள்ள வேதியியல் சேர்மங்கள்

அ== பிணைப்பு உருவாதல் ==

இவ்வகையான முப்பிணைப்பை சுற்றுப்பாதை இனக்கலப்பு விளக்குகிறது. உதாரணத்திற்கு அசிட்டிலீனை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு கார்பன் அணுவும் இரண்டு sp சுற்றுப் பாதைகள் மற்றும் இரண்டு p சுற்றுப்பாதைகளைப் பெற்றுள்ளன. (1s2 2s2 2px1 2px2) இரண்டு sp சுற்றுப்பாதைகளும் 180 பாகை கோணத்தைக் கொண்டு நேரியலாக x அச்சை நிரப்புகின்றன. (காட்டீசியன் ஆள்கூற்று முறைமைத் திட்டம்). p சுற்றுப்பாதைகள் y மற்றும் z அச்சுகளுக்கு மேல் நேர்குத்தாக உள்ளன. இரண்டு கார்பன் அணுக்களும் ஒன்றையொன்று அணுகும்போது அவற்றின் sp சுற்றுப்பாதைகள் மேற்பொருந்தி சிக்மா பிணைப்புகளை sp-sp உருவாக்குகின்றன. அதேநேரத்தில் pz சுற்றுப்பாதையும் ஒன்றை ஒன்று அணுகி மேற்பொருந்தி pz-pz பிணைப்பு அதாவது பை பிணைப்பை உருவாக்குகின்றன. இதைப்போலவே அடுத்த இணையான pz சுற்றுப்பாதையும் மேற்பொருந்தி மேலும் ஒரு pz-pz பிணைப்பை உருவாக்குகிறது. இதனால் இறுதியாக ஒரு சிக்மா பிணைப்பும் இரு பை பிணைப்புகளும் உருவாகின்றன. வளைத்த பிணைப்பு மாதிரியில் மூன்று sp3 மடல்கள் ஒரு பை பிணைப்பின் தேவையில்லாமலேயே முப்பிணைப்பை உருவாக்கிவிடுகின்றன[4].

மேற்கோள்கள்

[தொகு]
  1. March, Jerry (1985), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.), New York: Wiley, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-85472-7
  2. Organic Chemistry 2nd Ed. John McMurry
  3. Pyykkö, Pekka; Riedel, Sebastian; Patzschke, Michael (2005). "Triple-Bond Covalent Radii". Chemistry - A European Journal 11 (12): 3511–20. doi:10.1002/chem.200401299. பப்மெட்:15832398. 
  4. Advanced Organic Chemistry Carey, Francis A., Sundberg, Richard J. 5th ed. 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பிணைப்பு&oldid=3613638" இலிருந்து மீள்விக்கப்பட்டது