உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் விக்ரமாதித்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலாம் விக்ரமாதித்தன் (Vikramaditya I கன்னடம்: ವಿಕ್ರಮಾದಿತ್ಯ 1) (ஆட்சிக்காலம் 655-680 ) என்பவன் ஒரு சாளுக்கிய மன்னனாவான் இவன் இரண்டாம் புலிகேசியின் மூன்றாம் மகன். இவன் உடைந்த நாட்டை மீண்டும் ஒன்றுபடுத்தினான்.

ஆரம்ப நெருக்கடிகள்[தொகு]

இரண்டாம் புலிகேசி இறந்த பிறகு சாளுக்கிய அரசு குழப்ப நிலைக்கு உள்ளானது. பேரரசுக்கு அடங்கிய சிற்றரசுகள் தங்கள் சுதந்திரத்தை அறிவித்தன. பேரரசின் இரண்டு பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த புலிகேசியின் மகன்கள் தனி அரசு அமைப்பதாக அறிவித்தனர். விக்ரமாதித்யன் தனது தாய்வழி தாத்தாவான மேலைக் கங்க மன்னன் பூவிக்ரமன் உதவியுடன், தன்னை பல்லவர் படையெடுப்பில் இருந்து பாதுகாத்து, நாட்டை மீண்டும் ஒன்றுபடுத்தினான்.

பதின்மூன்று ஆண்டுகள் வாதாபியைக் கைப்பற்றிப் பல்லவர்கள் தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்தனர். அவர்களின் ஆக்கிரமிப்பிற்கு விக்ரமாதித்யன் முற்றுப்புள்ளி வைத்தான். இவன் தனது சகோதரர்களையும், பேரரசிடமிருந்து சுயாட்சி கோரிய தலைவர்களையும் தோற்கடித்து பின்னர் தன்னை, சாளுக்கிய (655) மன்னனாக அறிவித்துக்கொண்டான். இவன் தனக்கு உதவியாக இருந்த தன் தம்பியான ஜெயசிம்மவர்மனை தென் குஜராத்தின் லதா பகுதிக்கு ஆளுநராக நியமித்தான்.

பல்லவர்களிடம் தொடர் போர்கள்[தொகு]

பல்லவன் இரண்டாம் மகேந்திரவர்மன், அவனுக்குப்பின்னர் அவனது மகன் பரமேசுவரவர்மன் போன்றோர்களை எதிர்க்க விக்ரமாதித்தன் பல்லவர்களின் எதிரியான பாண்டியன் அரிகேசரி பாராங்குச மாறவர்மனுடன் (670 - 700) கூட்டணி அமைத்தான்.

பல்லவன் பரமேசுவரவர்மனின் ஆட்சியின் துவக்கத்தில் விக்ரமாதித்யன் படைதிரட்டிக்கொண்டு பல்லவ தலைநகரான காஞ்சிபுரம் நோக்கி முன்னேறினான். விக்ரமாதித்யன் படைகள் காவிரி கரையிலுள்ள உரையூரில் பாளையமிட்டிருந்தன. சாளுக்கிய படைகளை எதிர்த்து பல்லவன் பரமேசுவரவர்மன் ஒரு பெரிய படையைத் திரட்டி, விலந்தி என்ற இடத்தில் போரிட்டான்(670). சாளுக்கிய கூட்டுப்படைகளுக்கு மேலைகங்க மன்னனான பூவிக்கிரமன் தலைமைதாங்கி போரிட்டான். பல்லவ மன்னன் இந்த போரில் வெற்றி பெற்றான்.

இதன் பின்னர் பல்லவன் பரமேசுவரவர்மன் தனது படைகளை சாளுக்கிய நாட்டைக் கைப்பற்ற அனுப்பி வைத்தான். பல்லவ படைகளை எதிர்த்து விக்ரமாதித்யனின் படைகள் ( 674) புருவாலனூர் என்ற இடத்தில் களம் கண்டன. போரில் பல்லவர்கள் சாளுக்கிய படைகளை தோற்கடித்தனர். சாளுக்கிய படைகளுக்கு விக்ரமாதித்யனின் மகன் வினையாதிதன் மற்றும் பேரன் விஜயாதித்தன் ஆகியோர் தலைமைதாங்கினர். பல்லவர்களின் படைகள் சாளுக்கிய நிலத்தை ஆக்கிரமித்தன. சாளுக்கியர் ஆண்டுதோரும் பல்லவருக்கு கப்பம் செலுத்த ஒப்புக்கொண்டனர்.

முதலாம் விக்ரமாதித்யன் மேற்கு கங்க இளவரசி கங்கமகாதேவியை மணந்து கொண்டான்.

மரணம்[தொகு]

விக்ரமாதித்யன் 680-ல் இறந்தான். பின் அவனது மகன் வினையாதித்தன் சாளுக்கிய சிம்மாசனத்தில் அமர்ந்தான்.

மேற்கோள்[தொகு]

  • Nilakanta Sastri, K.A. (1935). The CōĻas, University of Madras, Madras (Reprinted 1984).
  • Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).
  • Dr. Suryanath U. Kamat (2001). Concise History of Karnataka, MCC, Bangalore (Reprinted 2002).


"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_விக்ரமாதித்தன்&oldid=2487919" இலிருந்து மீள்விக்கப்பட்டது