முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபூபக்கர் முகம்மது அப்னு சக்காரியா ராசி
காலம்நடுக்காலம்
பகுதிபாரசீகக் கல்விமான்
பள்ளிபாரசீக அறிவியல்
முக்கிய ஆர்வங்கள்
வேதியியல், மருத்துவம், உயிரியல், அறிவியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
மதுசாரம் கண்டுபிடித்தமை, கந்தகக் காடியை முதன் முதலாக உருவாக்கியமை, பெரியம்மை, சின்னம்மை நோய்கள் குறித்து விரிவாக எழுதியமை, கண் மருத்துவத்தில் முன்னோடி, கனிம, கரிம வேதியியலில் முக்கிய பங்களிப்பு, பல மெய்யியல் நூல்கள் எழுதியமை.

ராசிஸ் என அறியப்பெற்ற முகம்மது இப்னு சக்காரியா அல்-ராசி (அரபு மொழி: أبو بكر محمد بن يحيى بن زكريا الرازيAbu Bakr Mohammad Bin Yahia Bin Zakaria Al-Razi)(பாரசீக மொழி: محمد زکریای رازیMohammad-e Zakariā-ye Rāzi, ஆகத்து 26, 865 – 925), என்பவர் ஒரு பாரசிக வேதியியலாளர், மெய்யிலாளர், மருத்துவர், விமர்சகர், பல்துறை வித்தகர். அக் காலத்தில் வாழ்ந்த சிறந்த மருத்துவர்களில் ஒருவராக இவர் மதிக்கப்படுகிறார். சமயத்தையும், குறிப்பாக இசுலாமை நோக்கி இவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.[1][2]

இவர் வாழ்ந்த காலப்பகுதி உலக மருத்துவத்துறையின் பிரகாசமான காலம் என அழைக்கப்படுகிறது. ராஸெஸ் (Rhaazes) என்று ஐரோப்பாவில் அறிமுகமான இவர் ஈரானின் தெஹ்ரான் நகரில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை உள்ளூரில் பெற்றுக்கொண்ட அவர் பக்தாத் நகரிலிருந்த வைத்தியசாலையின் பிரதம வைத்தியராகப் பொறுப்பேற்றார். அப்பாஸியக் கலிபா முக்தபீயின் காலத்தில் தேசிய வைத்திய அதிபராகப் பதவியுயர்வு பெற்றார்.

அல்ராஷி மருத்துவத்துறையில் மாத்திரமன்றி கணிதவியல், இரசாயனவியல், உளவியல், தத்துவவியல் போன்ற பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். இத்துறைகளில் இருநூற்று இருபதுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் நூற்றிநாற்பது நூல்கள் மருத்துவம் பற்றியதாகும். அல்ஹாவி, அல்ஜூதரி வல் ஹஸ்பா, கிதாப் திப்பில் மன்சூர், கிதாபுல் அஸ்ரார் என்பன இவரது பிரசித்தம் பெற்ற நூல்களாகும்.

இருபது பாகங்களைக் கொண்ட மிகப் பெரிய மருத்துவ நூலான அல்ஹாவி நோய்களைப் பற்றியும், அவற்றுக்கான சிகிச்சை முறைகளைப் பற்றியும் விரிவாக ஆராய்கின்றது. இந்நூலின் பத்துப் பாகங்கள் இன்றும் கிடைக்கின்றன. கி.பி. 1279 ஆம் ஆண்டில் முதலாம் சார்ல்ஸ் மன்னனின் உத்தரவிற்கிணங்க இந்நூல் கொண்டினன்ஸ் (Continence) என்ற பெயரில் இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் இது பாடநூலாக பயன்படுத்தப்பட்டதென்று ஐரோப்பிய ஆய்வாளர் ஜே.டி.பேர்ணாட் (J.D.Bernad) தனது "வரலாற்றில் விஞ்ஞானம்" என்ற நூலிலே குறிப்பிடுகின்றார். ஜேர்மனிய வரலாற்றாசிரியரான ஜோஸப் ஹெல் தனது "அரபு நாகரிகம்" என்ற நூலில் அல்ராஷி பத்துப்பாகங்களில் ஒரு மருத்துவ கலைக்களஞ்சியத்தையே உருவாக்கியுள்ளார் என்று பாராட்டியுள்ளார்.

அல்ஜூதரி வல் ஹஸ்பா (சின்னமுத்துவும் பெரியம்மையும்) என்னும் இவரது மற்றொரு நூல் அம்மை நோய்கள் பற்றி எழுதப்பட்ட முதல் ஆவணமாகக் கருதப்படுகின்றது. இந்நூல் பதினைந்தாம் நூற்றாண்டளவில் இலத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜேர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

இவரது மற்றொரு நூலான "கிதாப் திப்பில் மன்சூர்" கிரேக்கம், பிரெஞ்சு போன்ற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகளே முஸ்லிம்களது மருத்துவ விஞ்ஞானம் ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. இவரது மருத்துவ சாதனைகளை கெளரவப்படுத்தும் முகமாக இவரின் உருவப்படம் இன்று பாரிஸ் பல்கலைக்கழகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் பொது மருத்துவத்துறையில் மாத்திரமன்றி பிரயோக மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

கண்மருத்துவம், சத்திரசிகிச்சைத்துறை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்த இவர் சத்திரசிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ஒருவித நூலிழையத்தை மிருகங்களின் குடலிலிருந்து கண்டுபிடித்தார். "வென்ரோஸா" என்னும் நோயை முதன்முதலாக அடையாளம் கண்டு, அதற்கு ஒட்டுண்ணி காரணம் எனக் கண்டுபிடித்தவரும் இவரே. மேகநோய் பற்றியும் உடல்நோய் பற்றியும் இவர் ஆராய்ந்து வெளியிட்ட கருத்துக்கள் அதிசயக்கத்தக்கன. குரல்வளைக்குள் குழாயினை உட்செலுத்தி சிகிச்சை செய்தல், கடின பிரசவத்தின் போது கையை உட்செலுத்தி குழந்தையைத் திருப்பி விடுதல், வயிற்றையும் கர்ப்பப்பையையும் பிளந்து குழந்தையை எடுத்தல் போன்ற முறைகளையும் அறிமுகம் செய்தார். வெளியில் உள்ள ஒளி கண்களில் ஊடுருவிச் செல்வதாலேயே கண்களால் பார்க்க முடிகிறது என்னும் தத்துவத்தை முதலில் நிறுவியவரும் இவரே.

மேற்கோள்கள்[தொகு]

  1. Robinson, Victor (1944), The story of medicine, New York: New Home Library
  2. Porter, Dorothy (2005), Health, civilization, and the state: a history of public health from ancient to modern times, New York: Routledge (published 1999), p. 25, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-20036-9