உள்ளடக்கத்துக்குச் செல்

மார்க் டுவெய்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க் டுவைன்
பிறப்புசாமுவேல் லேங்ஹோர்ன் கிளமென்ஸ்
(1835-11-30)நவம்பர் 30, 1835
புளோரிடா, மிஸ்ஸௌரி, ஐக்கிய அமெரிக்கா
இறப்புஏப்ரல் 21, 1910(1910-04-21) (அகவை 74)
ரெட்டிங், கானெக்டிகட்
தொழில்எழுத்தாளர், விரிவுரையாளர்
தேசியம்அமெரிக்கர்
வகைபுனைக்கதை, வரலாற்றுப் புனைக்கதை, சிறுவர் இலக்கியம், புனை அல்லாத கதை, பயண இலக்கியம், நையாண்டி, கட்டுரை, மெய்யியல் இலக்கியம், சமூக வர்ணனை, இலக்கியத் திறனாய்வு
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி அட்வென்சர்ஸ் ஆஃப் ஹக்கில்பெர்ரி ஃபின், தி அட்வென்சர்ஸ் ஆஃப் டாம் சாயர்
கையொப்பம்
தொகுப்பு மார்க் டுவெய்ன் (1909)

சாமுவேல் லேங்ஹோர்ன் கிளமென்ஸ்; மார்க் டுவெய்ன் (Mark Twain) எனும் புனைபெயரால் நன்கு அறியப்படுபவர்; இவர் அமெரிக்க நகைச்சுவையாளரும், விரிவுரையாளரும், எழுத்தாளரும் ஆவார். இவர் எழுதிய டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer), ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள் (Adventures of Huckleberry Finn) ஆகியன குறிப்பிடத்தக்கவை. அவற்றில், ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள் அமெரிக்காவின் சிறந்த நாவலாகும். வில்லியம் ஃபாக்னர் டுவைய்னை "அமெரிக்க இலக்கியத்தின் தந்தை" என்று அழைத்தார்.[1] இவர் வளர்ந்த இடமான ஹன்னிபல், மிஸ்ஸௌரியே இவரின் கதை களத்திற்கு உருவம் கொடுத்தது, முதலில் இவர் ஒரு அச்சகத்தில் ஊதியம் இல்லா வேலையாளாக பணிபுரிந்தார். பின்னர், எழுத்து அமைப்பராக தன் மூத்த அண்ணன் ஒரியனின் பத்திரிக்கையில் பணிபுரிந்தார். அவருடைய அறிவும் நையாண்டியும், அவருக்கு நிறைய நண்பர்களை சம்பாதித்து கொடுத்தது. அவருடன் நாட்டின் அதிபர், கலைஞர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஐரோப்பிய உயர் பதவி வகித்தவர்கள் என அனைவரும் நட்பு பாரட்டினர்.

அவர் தன் பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை வெவ்வேறு முதலீடுகள் செய்வதன் மூலம் இழந்தார். உதாரணமாக பெய்ஜி அச்சுக்கோர்ப்புப்பொறி (Paige Compositor) தயாரிப்புகளில் அவர் செய்த முதலிடு அதன் தோல்வியால் அவருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. மேலும் வங்கிகள் இவரை திவாலான நபராக அறிவிப்பு செய்தன. பின்னர் அமெரிக்க தொழிலதிபர் ஹென்றி கட்டல்ஜ்டன் ரோஜர் என்பவரின் உதவியால் நிதிப்பிரச்சினைகளிலிருந்து படிப்படியாக மீண்டு வந்தார். அவர் ஹாலி வால் மீன் வானத்தில் தோன்றிய போது பிறந்தார், அவ்வால் மீன் மீண்டும் வரும் போது நான் மறித்து போவேன் என கணித்தார். அது போல ஹாலி வால் மீனின் அடுத்த தோன்றலில் அவர் இறந்தார். மார்க் டுவெய்ன் மிகச்சிறந்த அமெரிக்க நகைச்சுவை கலைஞர் என போற்றப்படுகிறார்.[2]

இளமைக்காலம்

[தொகு]

சாமுவேல் லாங்கோர்ன் கிளமென்ஸ், புளோரிடா, மிசூரியில் 1835ஆம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் ஜான் மார்ஷல் கிளமென்ஸ், டென்னசியைச் சேர்ந்த ஒரு வணிகர். தாயார், ஜேன் லம்ப்டன் கிளமென்ஸ். இவர் குடும்பத்தின் ஏழு பிள்ளைகளுள் ஆறாவதாகப் பிறந்தார். எனினும், நால்வர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். இவருடன் சகோதரர்கள் ஒரியன், ஹென்றி மற்றும் சகோதரி பமீலா ஆகியோர் மட்டுமே உயிருடன் இருந்தனர். மார்க்கின் நான்காவது வயதின் போது தன் குடும்பத்தினர் ஹன்னிபல் எனும் துறைமுக நகரத்திற்கு குடிபெயர்ந்தனர், இவ்விடமே டாம் சாயரின் சாகசங்களில் வரும் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் எனும் கற்பனை நகரத்திற்கு உருவம் கொடுத்தது. 1847ல் மார்க்குக்கு 11 வயது இருக்கும் போது மார்க்கின் தந்தை நிமோனியாவால் இறந்து போனார். அதற்கு பின்னர் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட மார்க் அச்சகம், அண்ணனுக்கு உதவி என வேலைகள் செய்த பின், நியூயார்க், ஃபிலாடெல்பியா, செயின்ட் லூயிஸ் மற்றும் சின்சின்னாடியில் அச்சகராக பணி செய்தார். நூலகத்தில் தன் அறிவை வளர்த்துக் கொண்டார். அதன் பின்னர் சிறிது காலம் நீராவி கப்பலின் கேப்டனாக இருந்தார். இச்சமயமே அவருக்கு மார்க் டுவெய்ன் எனும் பெயர் ஏற்பட்டது. அவர் சிறிது காலம் சுரங்க தொழிலாளியாக பணியாற்றினார், பின் டெரிடொரியல் என்டர்பிரைஸ் எனும் பத்திரிக்கையில் வேலை செய்தார். பின்னர் மார்க் ஒரு நாள் குவாக்கர் சிட்டிக்கு பயணம் செய்யும் போது தன் வருங்கால மைத்துனர் சார்லஸ் லாங்க்டனை கண்டார். சார்லஸ் லாங்க்டன் தன் தங்கை ஒலிவியாவின் புகைபடத்தை காட்ட மார்க் காதல் வயப்பட்டார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஈர்ப்பு

[தொகு]
அடிமரிக்காவின் ஹார்ட்போர்டு கனெக்டிகட் எனுமிடத்திலுள்ள டுவெய்னின் இல்லம்
மார்க் டுவெய்னின் இல்லத்திலுள்ள நூலகம். இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட கைகலால் இழைக்கப்பட்ட சுவர்சட்டகங்கள் மற்றும் கணப்பு , மற்றும் ஸ்காட்லாந்திலிருந்து வாங்கப்பட்ட கைகளால் செய்யப்பட்ட மேசைவிரிப்பு
1894 ன் ஆரம்ப காலகட்டத்தில் நிக்கோலா தெஸ்லாவின் அறிவியல் ஆய்வுக்கூடத்தில் டுவெய்ன்

அறிவியல் மற்றும் அறிவியல் சோதனைகளில் டுவெய்ன் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ஆஸ்திரிய இயற்பியல் விஞ்ஞானியான நிக்கோலா தெஸ்லாவிடம் மிக நெருக்கமான மற்றும் நீண்டகால நட்பை உருவாக்கினார். இருவரும் ஒன்றாக தெஸ்ராவின் ஆய்வகத்தில் அதிக நேரம் செலவிட்டார்கள்.

டுவெய்ன் மூன்று கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமைச் சான்றிதழ் பெற்றிருந்தார். ஆடைகளில் அளவுக்குத் தக்கவாறு அமைத்துக் கொள்ளக் கூடிய வார் பட்டை மற்றும் வரலாற்றுத் துணுக்கு விளையாட்டு ஆகியவை அதில் அடங்கும்.[3][4]. மிக வணிக முக்கியத்துத்துடன் வெற்றியடைந்தது அவர் கண்டிறிந்த சுயமாக ஒட்டும் தன்மையுள்ள முதல்பதிவுப் புத்தகம் (self-pasting scrapbook) ஆகும். அப்புத்தகத்தில் பசை தடிவப்பட்டு காய்ந்த நிலையில் இருக்கும். புகைப்படங்கள் அல்லது எவற்றையாவது ஒட்டுவதற்கு முன்னர் அவ்விடத்தை ஈரப்படுத்தி பின்னர் ஒட்டி பயன்படுத்த வேண்டும். இப்பத்தகங்கள் 25,000 பிரதிக்கு மேல் விற்றன.[3]

அரசர் ஆர்த்தரின் அவையில் யாங்கி (A Yankee in King Arthur's Court) என்ற டுவெய்னின் புதினம் 1889 ல் வெளிவந்தது. அதில் சமகாலத்திய காலப் பயணம் மேற்கொள்பவர் அமெரிக்காவில் அவருடைய அறிவியல் அறிவைப் பயன்படுத்தி நவீன தொழில்நுட்பத்தைப் இங்கிலாந்து ஆர்தர் அரசருக்கு அறிமுகப்படுத்துவது போன்று எழுதியுள்ளார். இவ்வகையான கதையமைப்பு பின்னர் வெளிவந்த அறிவியல் புணைவுக்கதைகளில் மரபாக கடைபிடிக்கப்பட்டது.

1990 ல் அமெரிக்காவின் ரெட்டிங் கனெக்டிகட் எனுமிடத்தில் அமைந்துள்ள டுவெய்னின் இல்லத்திற்கு புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் வருகைபுரிந்து இவரைப் படம்பிடித்தார். அப்படத்தின் சிலகாட்சிகள் 1909 ஆம் ஆண்டு வெளிவந்த இருசுருள் குறும்படமான அரசனும் ஆண்டியும் (The Prince and the Pauper) என்ற படத்தில் பயன்படுத்தப்பட்டது. இதுவே மார்க் டுவெய்னின் தற்போது மீதமிருக்கும் திரைப்பட காட்சிகளாகும்.[5]

இல்லற வாழ்வு

[தொகு]

1868 முழுக்க ஒலிவியாவும் மார்க்கும் பொருந்தி இருந்தனர்.ஆனால் ஒலிவியா முதலில் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை, பின்னர் இரு மாதங்கள் கழித்து மார்க்கும், ஒலிவியாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பிப்ரவரி 1870ல் அவர்களது திருமணம் எல்மிரா, நியூயார்க்கில் நடைபெற்றது. இவர்களுக்கு பிறந்த மகன் லாங்க்டன் 19 மாதங்களில் தொண்டை அலற்சி நோயினால் இறந்து போனான். அதன் பிறகு அவர்களுக்கு பிறந்த குழந்தைகள், சூசி(1872-1896), கிளாரா(1874-1962) மற்றும் ஜீன்(1880-1909). இவ்விருவரின் திருமணமும் 34 வருடங்கள் ஒலிவியாவின் மறைவு (1904) வரை தொடர்ந்தது.

நிதி பிரச்சனைகள்

[தொகு]

டுவெய்ன் எழுத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை விட அதிகமான தொகையை வெவ்வேறு முதலீடுகள் செய்வதன் மூலம் இழந்தார்; அவற்றில் பெரும்பாலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும், தொழில்நுட்பத்திற்கும் செலவிடப்பட்டது குறிப்பாக பைஜ் எழுத்துவகை அமைப்பு இயந்திர கண்டுபிடிப்புகாகச் செலவிடபட்டது. டுவெய்ன் தன் பதிப்பக இல்லத்தின் மூலமும் பணத்தை இழந்தார். பின்னர் அவர் உலகம் முழுவதும் சுற்றி சொற்பொழிவாற்றி அதன் மூலம் வந்த பணத்தைக் கொண்டு 1900ல் தன் கடனை அடைத்தார்.

பிற்பகுதி வாழ்க்கையும் மறைவும்

[தொகு]

1896ல் தன் மகள் சூசி மூளை தண்டு சவ்வு காய்ச்சலால் இறந்து போன பின் டுவெய்ன் மிகுந்த மன வருத்ததிற்கு ஆளானார். அதை தொடர்ந்து 1904ல் ஒலிவியாவின் மரணமும், டிசம்பர் 24,1909ல் மகள் ஜீனின் மரணமும் தன்னை வெகுவாக பாதித்தது. பின் தன் நெருங்கிய தோழன் ஹென்ரி ராஜர்ஸும் இறந்தார். 1906ல் டுவெய்ன் தன் சுயசரிதத்தை நார்த் அமெரிக்கன் ரீவ்யூவில் எழுதத் தொடங்கினார். அப்போது தன் தோழி இனா கூல்ப்ரித் தன் உடமைகள் அனைத்தும் அப்போது ஏற்பட்ட சான் ஃப்ரான்ஸிஸ்கோ நிலனடுக்கத்தில் இழந்து வைட்டதாக கூறவே டுவெய்ன் தன் கையெழுத்திட்ட புகைப்படங்களை விற்று அதன் மூலம் பணம் திரட்டி கொள்ள கூறினார். கூல்ப்ரித்துக்கு மேலும் உதவ ஜார்ஜ் வார்டன் ஜேம்ஸ் என்பவர் டுவெய்னை புது புகைப்படம் எடுக்க வந்தார், முதலில் டுவெய்ன் மறுத்தாலும் பின்னர் ஒப்புக்கொண்டு அப்படங்கள் மட்டுமே சிறந்ததாக வந்து இருப்பதாக தெரிவித்தார். டுவெய்ன் 1908ல் சிறுமிகளுக்கான கடித சங்கம் ஒன்றை ஆரம்பித்தார். அது ஏஞ்ச்ல் ஃபிஷ் மற்றும் அகுவேரியம் சங்கம் என அழைக்கப்பட்டது; அதில் உள்ள சிறுமிகள் 10 - 16 வயது வரையே இருப்பர் அவர்களை அவர் தம் பேர்த்திகளாகவே நினைத்துக் கொண்டார். அவர்களுடன் டுவெய்ன் கடிதங்களை பகிர்ந்து கொள்வார், அவர்களை கேளிக்கை நிகழ்ச்சிகள், சினிமாவுக்கு அழைத்து செல்வார், அவர்களுடன் விளையாடவும் செய்வார். 1908ல் இச்சங்கம் தன் வாழ்வின் தலைச்சிறந்த மகிழ்ச்சியை தருவதாக கூறினார். 1907ல் டுவெய்ன் பதினோறு வயதுடைய டோரத்தி க்விக் எனும் சிறுமியை சந்தித்தார் அசிறுமியுடனான நட்பு தன் மறைவு வரை தொடர்ந்தது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகம் 1907ல் டுவெய்னுக்கு கடிதங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்தது. 1909ல் டுவெய்ன் கூறியதாவது:

நான் 1835ல் ஹாலி வால்மீன் தோன்றிய போது பிறந்தேன். அது மீண்டும் அடுத்த வருடம் வருகிறது, அப்போதே நானும் மறைய விரும்புகிறேன். இல்லையெனில் அதுவே என் வாழ்வின் மிக பெரிய ஏமாற்றம் ஆகி விடும். கடவுள் கூறினார், சந்தேகமே இல்லாமல்: 'இரு அபூர்வமான விஷயங்கள், ஒன்றாகவே தோன்றின, ஒன்றாகவே மறையட்டும். தன் கணிப்பின் படியே மிகச் சரியாக ஏப்ரல் 21, 1910ல் ஹாலி வால்மீன் பூமிக்கு மிக அருகில் நெருங்கியதற்கு அடுத்த நாள் டுவெய்ன் மறைந்து போனார்.

டுவெய்ன் மறைந்த செய்தியை கேட்ட அப்போதைய ஜனாதிபதி வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட் கூறியதாவது: மார்க் டுவெய்ன் மகிழ்ச்சியையும், உண்மையான அறிவார்ந்த இன்பத்தையும் லட்சக்கணக்கானவர்களுக்கு கொடுத்தவர், அவரின் படைப்பு பிற்காலத்தில் வரும் லட்சக்கணக்கானவர்களுக்கும் இன்பத்தை தரும்.. அவர் நகைச்சுவை அமெரிக்கத்தனமானதாக இருக்கலாம் ஆனால் அவர் நிறைய பல்வேறு நாட்டு மக்களாலும் பாரட்டப்பட்டவர்.. அவர் அமெரிக்க இலக்கியத்தின் ஒரு நிலையான பகுதியை உருவாக்கி உள்ளார்.[6][7] டுவெய்ன் நியூயார்க்கில் உள்ள ப்ரெஸ்பைடெரியன் சர்ச்சில் தன் குடும்பம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தானும் அடக்கம் செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jelliffe, Robert A. (1956). Faulkner at Nagano. Tokyo: Kenkyusha, Ltd.
  2. "Obituary (New York Times)". பார்க்கப்பட்ட நாள் 2009-12-27.
  3. 3.0 3.1 "Mark Twain Granted His First Patent on December 19, 1871". United States Patent and Trademark Office. -18-12-2001. Archived from the original on அக்டோபர் 16, 2020. பார்க்கப்பட்ட நாள் 16 ஜூன் 2017. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
  4. J. Niemann, Paul (November 2004). Invention Mysteries (Invention Mysteries Series). Horsefeathers Publishing Company. pp. 53–54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9748041-0-X.
  5. The Only Footage of Mark Twain in Existence - Smithsonian.com, பார்க்கப்பட்ட நாள் 2017-01-13
  6. Esther Lombardi. "Mark Twain (Samuel Langhorne Clemens)". பார்க்கப்பட்ட நாள் 2006-11-01.
  7. "Mark Twain is Dead at 74. End Comes Peacefully at His New England Home After a Long Illness.". The New York Times. 22-04-1910. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_டுவெய்ன்&oldid=3924154" இலிருந்து மீள்விக்கப்பட்டது