மலையாளப்புழா தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலையாளப்புழா தேவி கோயில்

மலையாளப்புழா தேவி கோயில் இந்தியாவின் கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மலையாலப்புழாவில் அமைந்துள்ள ஒரு பத்ரகாளி கோயிலாகும். 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் என்று நம்பப்படுகிறது. [1]

மூலவர்[தொகு]

கோயிலில், தாரிகா என்ற அரக்கன் கொல்லப்பட்ட உக்கிரமான வடிவில் பத்ரகாளி காட்சியளிக்கிறார். 5.5 அடி உயரமுள்ள மூலவர் சிலை கட்டு சர்க்கரா யோகத்தால் ஆனதாகும். இந்தத் சிலையை தவிர, கருவறைக்குள் ஒன்று அபிஷேகத்திற்கும் மற்றொன்று ஸ்ரீபலிக்கும் என்ற வகையில் மேலும் இரண்டு சிலைகள் உள்ளன. [2] மலையாளப்புழா தேவி அனைத்து பக்தர்களுக்கும் வளமையை நீட்டிக்க வரங்களை வழங்குவதாக நம்பப்படுகிறது. பக்தர்கள் எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ளவும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கவும், வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கவும், வியாபாரம் செழிக்கவும் அம்மனை வழிபடுகின்றனர். இந்த நம்பிக்கைகள் காரணமாக தொலைதூரத்திலிருந்து கோயிலுக்கு பக்தர்கள் வருகின்றனர். இந்த மூலவர் இடாத்தட்டில் பகவதி என்றும் அழைக்கப்படுகிறார்.

புராணம்[தொகு]

ஒரு முறை வட திருவிதாங்கூரின் நம்பூதிரி இனத்தைச் சேர்ந்த இருவர் மூகாம்பிகை கோயிலில் தியானம் செய்துகொண்டிருந்தனர். அவர்களிடம் ஒரு பத்ரகாளி சிலை இருந்தது. நீண்ட நேரம் தியானத்திற்குப் பிறகு, அவர்கள் பத்ரகாளியிடம் இருந்து அந்தச் சிலைக்கு அவளது நிரந்தர இருப்பிற்கான அதிசயத்தைப் பெற்றனர். நம்பூதிரிகள் சிலையுடன் யாத்திரையைத் தொடர்ந்தனர். வயதான காலத்தில் அவர்களால் யாத்திரையைத் தொடர முடியா நிலையில் பத்ரகாளி அவர்கள் முன் தோன்றி, மலையாலப்புழாதான் சிலையை நிறுவ உகந்த இடம் என்று கூறினார். அதன்படி அவர்கள் அங்கு சென்று சிலையை நிறுவினர். [2]

துணைத்தெய்வங்கள்[தொகு]

இக்கோயிலில் பார்வதி தேவி, தன் மடியில் குழந்தை கணபதிக்கு உணவளிக்கும் தனித்துவமான சிலை உள்ளது. கருவறையின் நுழைவாயிலில் வீர பத்ரரின் சிலை உள்ளது. இங்கு பிரம்மா ராட்சசர்கள், நாகராஜா, சுயம்பு சிவலிங்கம் உள்ளிட்ட துணைத்தெய்வங்கள் உள்ளன. இக்கோயிலில் அழகிய சுவர் ஓவியங்களும், கலைநயமிக்க கல் சிற்பங்களும் உள்ளன.

திருவிழா[தொகு]

கோயிலின் ஆண்டு விழா 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கும்ப மாசத்தில் (பிப்ரவரி - மார்ச்) திருவாதிரை நட்சத்திரத்தில் விழா தொடங்குகிறது. நான்காவது மற்றும் ஐந்தாம் நாளில் கதகளி நடத்தப்பெறுகிறது. இக்கோயிலின் நடை தரிசனத்திற்காக காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள ரயில் நிலையம்[தொகு]

அருகிலுள்ள முக்கிய நிலையமான செங்கனூர் ரயில் நிலையம் இங்கிருந்து சுமார் 33 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள விமான முனையமான திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் 107  கி.மீ. தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "സാമൂഹിക-സംസ്ക്കാരിക ചരിത്രം". Malayalappuzha gram panchayat.
  2. 2.0 2.1 "മലയാലപ്പുഴ ദേവീ ക്ഷേത്രം". Malayal a Manorama. Archived from the original on 2013-08-01.

வெளி இணைப்புகள்[தொகு]