உள்ளடக்கத்துக்குச் செல்

மனோன்மணி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது மனோன்மணி திரைப்படத்தைப் பற்றிய கட்டுரை. மனோன்மணி எழுத்தாளர் குறித்து படிக்க மனோன்மணி (எழுத்தாளர்)

மனோன்மணி
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
கதைபி. என். சுந்தரம்பிள்ளை, டி. வி. சாரி
இசைடி. ஏ. கல்யாணம்,
கே. வி. மகாதேவன்
நடிப்புபி. யு. சின்னப்பா
செருகளத்தூர் சாமா
டி. எஸ். பாலையா
டி. ஆர். ராஜகுமாரி
விநியோகம்சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்
வெளியீடுநவம்பர் 7, 1942
நீளம்19000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மனோன்மணி (Manonmani) 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரி [1] மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாபநாசம் ராஜகோபாலய்யர், எஸ். வேல்சாமி கவி ஆகியோரின் பாடல்களுக்கு கல்யாணம், கே. வி. மகாதேவன் ஆகியோர் இசையமைத்திருந்தனர். கே. வி. மகாதேவன் இசையமைத்த முதல் தமிழ்த் திரைப்படம் இதுவாகும்.[2]

திரைக்கதை

[தொகு]

தத்துவப் பேராசிரியரும் புலவரும் திருவிதாங்கூர் அரசு அதிகாரியுமான ராவ்பகதூர் பெ. சுந்தரம் பிள்ளை (1855-1897) 1892 இல் எழுதிய மனோன்மணீயம் என்ற நூலைத் தழுவி இப்படத்துக்கான கதை எழுதப்பட்டது.[2][3] டி. வி. சாரி திரைக்கதைக்கான வசனத்தை எழுதினார்.[3]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

புருசோத்தமன் (பி. யூ. சின்னப்பா) சேரநாட்டை ஆண்டு வருங்காலத்தில், அவனின் பகைவனான பாண்டிய மன்னன் சீவகன் (கே. கே. பெருமாள்) தனது மந்திரி குடிலனின் (ஆர். பாலசுப்பிரமணியம்) சதியாலோசனைப்படி, திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டு, தனது மகள் மனோன்மணியுடன் (டி. ஆர். ராஜகுமாரி) குடிலனின் கைப்பொம்மையாக வாழ்ந்து வருகிறான். பாண்டியனின் நன்மையை விரும்பும் குலகுரு சுந்தரமுனிவர் (செருகளத்தூர் சாமா) அவனுக்குப் பலவகையிலும் துணையாக இருந்து வருகிறார். மனோன்மணி கனவில் சேர மன்னனைல் கண்டு காதல் கொள்ளுகிறாள். அதுபோலவே சேரனும் மனோன்மணியைக் கனவிற்கண்டு காதல் கொள்கிறான். ஆனால் ஒருவருக்கொருவர் இன்னார் யார் என்று தெரியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் சுந்தரமுனிவரின் ஆலோசனைப்படி, மனோன்மணியைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சேரனுக்குத் தூதனுப்ப முடிவு செய்யப்படுகிறது. ஆனால், குடிலனின் வஞ்சக யோசனைப்படி, அவனின் மகன் பலதேவனை (டி. எஸ். பாலையா) தூதனாக அனுப்புகிறார்கள். அவன் அங்கு சென்று, சேரனைத் தூண்டிவிட்டு சண்டைக்கிழுக்கிறான்.[3]

போர் மூண்டது. முதல் நாள் போரில் பாண்டியனின் படை தோல்வியடைகிறது. பாண்டியனின் சேனாதிபதி நடராஜனால் (டி. ஆர். மகாலிங்கம்) பாண்டிய மன்னன் சீவகன் காப்பாற்றப்படுகிறான். மனோன்மணியை சுரங்க வழியில் கொண்டுபோவதென சுந்தரமுனிவர் கூறிய யோசனையை குடிலன் மாற்றி அப்பொழுதே திருமணம் செய்தனுப்ப முடிவு செய்து மாப்பிள்ளையாகத் தனது மகன் பலதேவனை நிச்சயிக்க, ஏற்பாடுகள் நடக்கிறது.[3]

சுரங்கவழியைக் கண்டுவரச்சென்ற குடிலன், தூரத்தில் சேரனைக்கண்டு, அருகிற்சென்று, பாண்டியனைப் பிடித்துக் கொடுப்பதாகவும், இந்நாட்டைத்தனக்கு முடிசூட்டும்படியும் வேண்ட, சேரன் வெற்றியை வஞ்சக வழியில் பெறமனமில்லாமல், குடிலனை விலங்கிட்டு அச்சுரங்க வழியாகவே பாண்டியன் அரண்மனைக்கு அழைத்து வருகிறான். மணக்கோலத்திலிருக்கும் மனோன்மணி, தன் உயிர்ச் சிநேகிதி வாணியுடன் (ஏ. சகுந்தலா) கண்கலங்கி பலதேவனுக்கு மாலையிடும் நேரம், சேரன் அங்கு வருகிறான். மனோன்மணி அவனே தனது கனவில் தோன்றிய காதலனெனக் கண்டு மாலையிடுகிறாள்.[3]

நடிகர்கள்

[தொகு]
நடிகர்கள்
நடிகர்பாத்திரம்
பி. யூ. சின்னப்பாபுருசோத்தமன்
செருகளத்தூர் சாமாசுந்தரமுனிவர்
டி. எஸ். பாலையாபலதேவன்
ஆர். பாலசுப்பிரமணியம்குடிலன்
டி. ஆர். மகாலிங்கம்நடராஜன்
கே. கே. பெருமாள்சீவகன்
என். எஸ். கிருஷ்ணன்மணி
காளி என். ரத்தினம்சுப்பன்
எல். நாராயணராவ்சகடர்
பி. ஜி. வெங்கடேசன்உழவன் 1
பபூன் சண்முகம்உழவன் 2
எஸ். எஸ். கொக்கோவசந்தன்
டி. ஆர். பி. ராவ்கந்தன்
சாண்டோ நடேசம்பிள்ளைஅருள்வரதன்
எம். ஈ. மாதவன்மலையாளி
நடிகையர்
நடிகைபாத்திரம்
டி. ஆர். ராஜகுமாரிமனோன்மணி
ஏ. சகுந்தலாவாணி
டி. ஏ. மதுரம்செல்லம்மா
சி. டி. ராஜகாந்தம்கோமதி
பி. ஆர். மங்களம்காந்திமதி
ஜே. எம். ஜி. சாரதாசெவிலி
ஜி. சரசுவதிசண்பகம்

தயாரிப்பு

[தொகு]
தயாரிப்பில் ஈடுபட்டோர்
பெயர்பணி
டி. ஆர். சுந்தரம்இயக்குநர்
எஸ். வேல்சாமி கவிஉதவி இயக்குநர்
ராவ்பகதூர் பி. சுந்தரம் பிள்ளைமூலக்கதை
டி. வி. சாரிவசனம்
பாபநாசம் ராஜகோபாலையர்,
எஸ். வேல்சாமி கவி
பாடல்கள்
இசைகல்யாணம், கே. வி. மகாதேவன்
பின்னணி இசைகல்யாணம் குழுவினர்

பாடல்கள்

[தொகு]

பாபநாசம் ராஜகோபால் ஐயர், வேல்சாமி கவி ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு டி. ஏ. கல்யாணம், கே. வி. மகாதேவன் ஆகியோர் இசையமைத்தனர்.[3]

Caption text
இல.பாடல்பாடியோர்இராகம்-தாளம்
1.தேவி திவ்ய சஞ்சீவிடி. ஆர். ராஜகுமாரி-
2.காட்சியே நல்ல காட்சியேடி. ஆர். ராஜகுமாரி, ஏ. சகுந்தலா-
3.என் நெஞ்சமெனும் நஞ்சமலர் செஞ்சுடரே வாஏ. சகுந்தலா, டி. ஆர். மகாலிங்கம்-
4.என்னாசைக்கினிய இந்திரன் இவர்தானோகாளி என். ரத்தினம்நாட்டியபதம், சங்கராபரணம்
5.யாருக்கு வேண்டுவதிங்கே - வீரம்பி. யு. சின்னப்பா-
6.பாவையே மாரனும் பார்வதிநாதன்டி. ஆர். ராஜகுமாரி, ஏ. சகுந்தலா-
7.காதல் காதலென நீயேன் சதா கதறுகிறாய்டி. ஆர். ராஜகுமாரி-
8.கண்டேன் கண்டேன் என் காதல் கனியைக் கண்டேன்பி. யு. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரி-
9.கண்டது முதல் ஞிங்களே கண்டதுசி. டி. ராஜகாந்தம்மலையாளம், தெலுங்கு, இந்தி தமிழ் மொழிகளில்
10.மோகன மாமதனா - என் ஆசையின் ரூபமெல்லாம் இவனோபி. யு. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரிபுன்னகவராளி
11.ஊராரின் காசினாலே ஜோராகினோம்சி. டி. ராஜகாந்தம், காளி என். ரத்தினம்-
12.ஆனந்தம் ஆனந்தமே - பரமானந்தம்டி. ஆர். ராஜகுமாரிநடனப் பாடல்
13.உந்தனுக்கோர் இணையானவர் உலகிலில்லைபி. யு. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரி-
14.என் வேந்தா இது கேட்பாய்செருகளத்தூர் சாமா-
15.ஊன்னு ஒரு வார்த்தை சொல்லம்மாஎன். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம்-
16.வஞ்ச உலக வாழ்வினைக் கண்டால்மாசிலாமணிதெருப்பாடகி
17.வானமுதே மான் விழியேபி. யு. சின்னப்பா-
18.பாவி மவே சீமையிலே ஆளை முழுங்கும் பஞ்சமடாபபூன் சண்முகம், பி. ஜி. வெங்கடேசன்குடியானவர் பாடல்
19.விற்கொடி பறக்கும் எங்கள் வேந்த சேர ராஜனேகுழுவினர்-
20.மன்னன் இவன் யாரோடி. ஆர். ராஜகுமாரி-
21.எற்றிப்பகை ஓட்டுவோம்பாண்டியன் சிப்பாய் குழுவினர்-
22.கூடிக் கொண்டாடுவோம் கொண்டாடுவோம்கே. கே. கிருஷ்ணவேணி-
23.மன்னா நீ பதராதேசெருகளத்தூர் சாமாகரகரப்பிரியா
24.மோகனங்க வதனி - உனையே காணும் பாக்யம் வருமோபி. யு. சின்னப்பாகானடா
25.ஆதியிலோர் யானையதேடி. ஆர். ராஜகுமாரி-
26.அன்பேநிறை சல்லாபம் உன்னாலடைந்த லாபம்என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம்-

வரவேற்பு

[தொகு]

மனோன்மணி திரைப்படம் ரூ.200,000 செலவில் தயாரிக்கப்பட்டது. அக்காலத்தில் இது மிகப்பெரிய தொகையாகும்.[2][3] இத்திரைப்படத்துக்கான கதாநாயகன், கதாநாயகியைப் பரிந்துரைக்குமாறு தயாரிப்பாளர் டி. ஆர். சுந்தரம் பொதுமக்களிடம் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் கோரிக்கை விடுத்தார். பெரும்பான்மை மக்களின் விருப்புக்கமைய பி. யு. சின்னப்பாவும், டி. ஆர். ராஜகுமாரியும் முக்கிய பாத்திரங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2] திரைப்படமும் வசூலில் பெரு வெற்றி பெற்றது.[2] பி. யு. சின்னப்பாவின் மனைவி ஏ. சகுந்தலா கதாநாயகியின் தோழியாக நடித்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோன்மணி_(திரைப்படம்)&oldid=4271466" இலிருந்து மீள்விக்கப்பட்டது