மணிக்கூட்டுக் கோபுரம், முல்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முல்தான் மணிக்கூட்டுக் கோபுரம் (Clock Tower Multan) அல்லது கண்டா கர் முல்தான் ( உருது: گھنٹہ گھر ) பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தானின் நகர அரசாங்க தலைமையகம் ஆகும். [1]

முல்தான் மணிக்கூட்டு கோபுரம்

வரலாறு[தொகு]

பிரித்தானிய இந்தியாவில் பிரித்தானியப் பேரரசின் காலத்தில் கி.பி 1884இல் முல்தானின் மணிக்கூட்டுக் கோபுரம் கட்டப்பட்டது. 1883ஆம் ஆண்டின் நகராட்சிச் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, பிரித்தானியர்களுக்கு நகரத்தை இயக்க அலுவலகங்கள் தேவைப்பட்டன. அவர்கள் பிப்ரவரி 12, 1884இல் முல்தானில் இந்த கட்டிடத்தை கட்டத் தொடங்கினர். இந்தக் கட்டிடத்தை முழுமையாகக் கட்ட 4 ஆண்டுகள் ஆனது. இது அகமது கான் சடோசாயின் அவேலியின் இடிபாடுகளின் மீது கட்டப்பட்டது. இது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் முல்தானின் முற்றுகையின் போது முற்றிலும் அழிக்கப்பட்டது. இக்கட்டிடத்துக்கு அந்த நேரத்தில் இந்தியத் தலைமை ஆளுநராக இருந்த ரிப்பன் பிரபுவின் பெயரால் 'ரிப்பன் மாளிகை' என்று பெயரிடப்பட்டது. இந்தியாவின் முன்னாள் தலைமை ஆளுநரான (1872– 73) நார்த்ரூக்கின் பெயரால் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு 'நார்த்ரூக் கோபுரம்' என்று பெயரிடப்பட்டது. இந்த கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு அலுவலகங்கள் 1888 இல் மாற்றப்பட்டன.1947இல் பாக்கித்தான் சுதந்திரம் பெற்ற பிறகு கட்டிடம் 'ஜின்னா மாளிகை' என்று பெயரிடப்பட்டு, அலுவலக கூட்டங்கள், கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் இங்கு நுழைய அனுமதிக்கப்பட்டனர். காலப்போக்கில், இந்த கட்டிடம் அலுவலகங்களுக்கு போதுமானதாக இல்லை. ஒரு சிறிய மண்டபம் கூட கூட்டங்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே அலுவலகங்கள் இங்கிருந்து மாற்றப்பட்டன. இப்போது இந்த வரலாற்று கட்டிடத்தை ஒரு அருங்காட்சியகமாக மாற்ற யோசனை உள்ளது.

Sunset - Ghanta Ghar, Multan.jpg

மணிக்கூட்டு கோபுரத்தின் கடிகாரம்[தொகு]

27 அக்டோபர் 2011 அன்று, மணிக்கூட்டுக் கோபுரத்தின் மூன்று கடிகாரங்கள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பாக்கித்தானிய சீர் நேரத்தைக் காட்டத் தொடங்கின. இது +5கிரீன்விச் இடைநிலை நேரமாகும். இந்த முயற்சியை ராடோ கடிகார நிறுவனம் செய்தது. கடிகாரத்தின் இயந்திரமும் ஊசிகளும் மாற்றப்பட்டன. அதே நேரத்தில் கடிகாரத்தின் முக்கிய அச்சு மாறாமல் இருந்தது. இது சூரிய ஆற்றலில் இயங்குகிறது. கடிகாரம் 1985இல் வேலை செய்வதை நிறுத்தியது.

முல்தான் அருங்காட்சியகம்[தொகு]

முல்தான் நகர நிர்வாகம் தற்போது இக்கட்டிடத்தை முல்தான் அருங்காட்சியகமாகச் செயல்படுத்த திட்டமிட்டு, நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முல்தானை தளமாகக் கொண்ட நிறுவனமான ஐடியாஃபிஸ்ட் அருங்காட்சியகத்திற்கான முப்பரிமாண மாதிரியை வடிவமைத்து, எதிர்காலத்தில் அருங்காட்சியகத்திற்கான உண்மையான முப்பரிமாண படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். முப்பரிமாண மாதிரி கட்டுமானத்தில் உள்ளது.

சான்றுகள்[தொகு]

Ghanta Ghar Clock Repaired

ஆள்கூறுகள்: 30°11′55″N 71°28′04″E / 30.19861°N 71.46778°E / 30.19861; 71.46778