உள்ளடக்கத்துக்குச் செல்

போர்த்துக்கலின் ஆறாம் யோவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறாம் யோவான்
João VI
அரசர் டோம் ஆறாம் யோவான் ஓவியம்;
ஓசே லியான்ட்ரோ டி கார்வல்லோ, c. 1818
போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஐக்கிய இராச்சியத்தின் அரசர் பின்னர்
போர்த்துகல்,அல்கார்வெசு அரசர்
ஆட்சிக்காலம்20 மார்ச் 1816 – 10 மார்ச் 1826
முன்னையவர்மாரியா I
பின்னையவர்பெட்ரோ IV
பிரேசில் பேரரசர் (பட்டத்தில் மட்டுமே)
ஆட்சிக்காலம்15 நவம்பர் 1825 – 10 மார்ச் 1826
பிறப்பு(1767-05-13)13 மே 1767
லிஸ்பன், போர்த்துகல்
இறப்பு10 மார்ச்சு 1826(1826-03-10) (அகவை 58)
லிஸ்பன், போர்த்துகல்
புதைத்த இடம்
துணைவர்கார்லோட்டா ஜோக்குய்னா
குழந்தைகளின்
பெயர்கள்
மாரியா தெரசா
பிரான்சிஸ்கோ அன்டோனியோ
மாரியா இசபெல்
பெட்ரோ IV
இன்பன்ட்டா மாரியா பிரான்சிஸ்கா
இன்பன்ட்டாஇசபெல் மாரியா
மிகுவல் I
இன்பன்ட்டா மாரியா ட அசுன்சாவோ
இன்பன்ட்டா ஆனா டி யேசசு மாரியா
பெயர்கள்
யோவான் மாரியா ஓசே பிரான்சிஸ்கோ சேவியர் டி பவுலா லூயிசு அன்டோனியோ டொமிங்கோசு ராபியெல்
மரபுபிரகன்சா குடும்பம்
தந்தைபோர்த்துகலின் மூன்றாம் பீட்டர்
தாய்முதலாம் மாரியா
மதம்உரோமானியக் கிறித்துவம்

யோவான் VI (போர்த்துக்கேயம்: Dom João VI; 13 மே 1767 – 10 மார்ச்சு 1826) போர்த்துகல், பிரேசில், அல்கார்வெசு ஐக்கிய இராச்சியத்தின் அரசராக 1816 முதல் 1822 வரை இருந்தவர். நடைமுறைப்படி அவராட்சி புரிந்த ஐக்கிய இராச்சியம் கலைக்கப்பட்டாலும் சட்டப்படி 1822 முதல் 1825 வரை இதன் அரசராகத் தொடர்ந்தார்;1825இல் ஏற்பட்ட இரியோ டி செனீரோ உடன்பாட்டின்படி பிரேசிலிய விடுதலையை ஏற்றுக் கொண்டார். எஞ்சிய போர்த்துக்கல்,அல்கார்வெசின் அரசராக 1826இல் தமது மறைவு வரை தொடர்ந்தார். இரியோ டி செனீரோ உடன்பாட்டின்படி புதிய விடுதலை பெற்ற நாட்டின் அரசராக சட்டப்படியும் நடைமுறைப்படியும் பிரேசிலிய முதலாம் பெட்ரோ இருப்பினும் யோவான் அதன் அரசராக தமது மறைவு வரை பட்டத்தில் மட்டும் இருந்தார்.

1767இல் லிசுபனில் போர்த்துகலின் மூன்றாம் பீட்டர் அரசருக்கும் அரசி முதலாம் மாரியாவிற்கும் மகனாகப் பிறந்தார். துவக்கத்தில் போர்த்துகலின் அரியணை வாரிசல்லாத இளவரசராக (இன்பன்ட்) இருந்தார்; 1788இல் அவரது அண்ணன் ஓசே தனது 27வது அகவையில் பெரியம்மை தாக்கி மரணமடைந்தபோது பட்டத்திற்குரிய இளவரசரானார்.

போர்த்துக்கேய அரியணையில் ஏறுமுன்னரே அவர் பிரகன்சா கோமான், பெஜா கோமான், பிரேசிலின் இளவரசர் ஆகிய பட்டங்களை பெற்றிருந்தார். 1799இல் அரசியும் அவரது அன்னையுமான முதலாம் மாரியா மனநோய்வாய்ப்பட்டபோது அரசப் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தார். 1815இல் போர்த்துகல்,பிரேசில்,அல்கார்வெசு ஐக்கிய இராச்சியம் உருவானபோதும் அதனை அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தார். இறுதியில் அன்னையின் மறைவிற்குப் பிறகு போர்த்துகல் பேரரசின் அரசராகப் பொறுப்பேற்றார்.

முழுமையான முடியாட்சிக் காலத்தின் கடைசி பிரதிநிதியாக விளங்கிய ஆறாம் யோவான் தமது ஆட்சியில் கிளர்ச்சிமிக்க காலத்தை சந்தித்தார். அவரது ஆட்சியில் அமைதியே இல்லாதிருந்தது. பெரும் அரசுகளான எசுப்பானியா, பிரெஞ்சுப் பேரரசு மற்றும் அதன் வழித்தோன்றல் முதலாம் பிரஞ்சு பேரரசு, பெரிய பிரித்தானியா (1801இலிருந்து, பெரிய பிரித்தானியா,அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்) தொடர்ந்து போர்த்துக்கல்லின் விடயங்களில் குறுக்கிட்டு வந்தன. நெப்போலியனின் படைகள் போர்த்துக்கலை படையெடுத்தபோது அத்திலாந்திக்குப் பெருங்கடலுக்கு அப்பாலுள்ள தென் அமெரிக்காவிற்கு தப்பியோடி பிரேசிலில் இருந்து ஆட்சி புரிந்தார். பிரேசிலிலும் தனிநபர் விடுதலையாளர்களின் எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி வந்தது. புதிய பிரச்சினைகளை எதிர்நோக்க ஐரோப்பாவிற்கு திரும்பும்படியானது. அவரது மணவாழ்க்கையும் அமைதியானதாக இல்லை. அவரது மனைவி கார்லோட்டா தொடர்ந்து கணவருக்கு எதிராக தனது பிறந்த நாட்டினருக்கு (எசுப்பானியா) துணை புரிந்து வந்தார். அவரது மகன், பெட்ரோ, பிரேசிலின் விடுதலையை அறிவித்து அவரது ஆட்சிப்பரப்பை குறைத்தார். மற்ற மகன் மிகுவல் தந்தைக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டார். தற்கால ஆய்வுகள் அவரது மரணம் ஆர்சனிக் நஞ்சூட்டலால் நிகழ்ந்திருக்கலாம் எனக் காட்டுகிறது.

இத்தனை பிரச்சினைகளுக்கும் நடுவிலும் தமக்கெனத் தனி இடம் பெற்றவர் ஆறாம் யோவான். முக்கியமாக பிரேசிலில் புதிய பொருளாதாரத்திற்கு வேண்டிய பல அமைப்புக்களை நிறுவினார். தற்கால பிரேசிலுக்கு அடித்தளம் அமைத்தவராக பலாய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும் லூசோ-பிரேசிலிய வரலாற்றில் இவரை ஓர் நகைச்சுவை நபராகவே சித்தரிக்கின்றனர்; சோம்பேறித்தனமான, அரசியல் நுட்பமற்ற, முடிவெடுக்க இயலாதவராக, உடற்பருமன் மிகுந்தவராக சித்தரிக்கின்றனர்.

உசாத்துணை

[தொகு]
  • (போர்த்துக்கேயம்) Gomes, Laurentino (2007). 1808 — How a mad queen, a coward prince and a corrupt court fooled Napoleon and changed the History of Portugal and Brazil. Planeta.

மேற்சான்றுகள்

[தொகு]