உள்ளடக்கத்துக்குச் செல்

பொகோர் அரண்மனை, பொகோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொகோர் அரண்மனை
Istana Bogor
பொகோர் தாவரவியல் பூங்காவிலிருந்து பொகோர் அரண்மனையின் தோற்றம்
Map
முந்திய பெயர்கள்Het Paleis te Buitenzorg
பொதுவான தகவல்கள்
இடம்ஜலான் ஐஆர்.எச்.ஜுவாண்டா, போகோர் டெங்கா
பொகோர், மேற்கு ஜாவா, இந்தோனேசியா
கட்டுமான ஆரம்பம்1744
புதுப்பித்தல்rebuilt 1856
கட்டுவித்தவர்டச்சு கிழக்கிந்திய கவர்னர் ஜெனரல்கள்

பொகோர் அரண்மனை (Bogor Palace) ( இந்தோனேசிய : இஸ்தானா போகோர், டச்சு : ஹெட் பேலிஸ் டெ பியூட்டென்சோர்க் ) இந்தோனேசியாவின் ஆறு ஜனாதிபதி மாளிகைகளில் ஒன்றாகும், இது மேற்கு ஜாவாவின் பொகோர் என்னும் நகரில் அமைந்துள்ள அரண்மனையாகும். இந்த அரண்மனை அதன் தனித்துவமான கட்டடக்கலை மற்றும் வரலாற்று அம்சங்களுக்காகவும், அருகிலுள்ள தாவரவியல் பூங்காக்களுக்காகவும் முக்கியமான இடத்தினைப் பெறுகிறது. பொகோர் அரண்மனை இந்தோனேசியாவின் பொறுப்பு ஜனாதிபதியாக இருந்த சுஹார்ட்டோவின் அனுமதியுடன் இஸ்தானா பொகோர் என்பவரால் 1968 ஆம் ஆண்டில் பொது மக்கள் சுற்றுலா குழுவாக வந்து பார்ப்பதற்காக பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது. (தனி நபர்களுக்கு அல்ல) அரண்மனையின் உள்ள தோட்டங்கள் 284,000 சதுர மீட்டர் (28.4 ஹெக்டேர் ) பரப்பளவில் அமைந்து காணப்படுகின்றன.

காலனித்துவ காலத்தின்போது, பொருத்தமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் அமைந்த கால நிலை காரணமாக பொகோர் அரண்மனை டச்சு கிழக்கிந்த கவர்னர் ஜெனரல்களின் விருப்பமான இல்லமாக அமைந்தது. இது மறைந்த ஜனாதிபதியான சுகர்னோவால் விரும்பப்பட்ட இடமாகவும் இருந்து வந்தது. மேலும் 1967 ஆம் ஆண்டில் அவர் பதவிப் பொறுப்பிலிருந்து வீழ்ச்சியடையும் வரை அலுவல்பூர்வ ஜனாதிபதி இல்லமாக பயன்பாட்டில் இருந்தது. பிப்ரவரி 2015 ஆம் நாள் வரை பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்த இந்த அரண்மனையை புதிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ பயன்படுத்தத் தொடங்கினார் அவர் ஜனாதிபதி அலுவலகத்தை மெர்டேகா அரண்மனையிலிருந்து பொகோர் அரண்மனைக்கு மாற்றம் செய்தார்.[1]

அரண்மனை ஓவியம், 1889
அரண்மனையின் உட்புறம் மற்றும் முதன்மை மண்டபம், 1921
அரண்மனையின் உட்புறம், 1921

பொகோர் அரண்மனை வளாகத்தில் முன்பு பியூட்டென்சோர்க் ( சான்ஸ் ச ci சி, அதாவது: டச்சு மொழியில் அக்கறை இல்லாமல் ) என்ற ஒரு மாளிகையான காலனித்துவ காலத்தைச் சேர்ந்த கட்டிடம் இருந்தது. இது 1745 ஆம் ஆண்டு முதல் டச்சு ஆளுநர்கள் தங்கும் இடமாக இருந்தது. படேவியாவின் வெப்பம் மற்றும் நோய் ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பதற்காக அவர்கள் இங்கு வந்து தங்கினர். புதிய அரண்மனைக்கான இருப்பிடம் பரோன் வான் இம்ஹாஃப் என்பவரால் 10 ஆகஸ்ட் 1744 ஆம் நாளன்று "கம்போங் பரோ " என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தில் அவர் ஒரு மாளிகையை கட்ட உத்தரவிட்டார். இருந்தாலும் அவருடைய ஆட்சிக்காலம் நிறைவுற்ற 1750 ஆம் ஆண்டு வரை கட்டடக் கட்டுமானப் பணி நிறைவேறவில்லை. அதனால் அக்கட்டட கட்டுமானப் பணி ஜேக்கப் மொசால் என்பவரால் தொடரப்பட்டது.[2][3]

கவர்னர் ஜெனரல் ஹெர்மன் வில்லெம் டேன்டெல்ஸின் (1808 - 1811) காலத்தில் அரண்மனையின் விரிவான புதுப்பித்தல் பணி நடைபெற்றது. அரண்மனை மேலும் இரண்டு தளங்களைக் கொண்டு விரிவுபடுத்தப்பட்டது. முன்பு அமைந்திருந்த கட்டமைப்பின் கிழக்கு மற்றும் மேற்கில் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டது.[2]

1811 ஆம் ஆண்டில் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ் ஜாவாவுக்கு வெற்றிகரமான படையெடுப்பு நடத்தினார். அப்போது பிரிட்டன் காலனியைக் கைப்பற்றியதோடு 1816 ஆம் ஆண்டு வரை அதனைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது. பொகோர் மலைகளின் மிதமான காலநிலை காரணமாக ராஃபிள்ஸ் பியூட்டென்சோர்க் அரண்மனையை தனது இல்லமாக அமைத்துக் கொண்டிருந்தார், அதே நேரத்தில் படேவியாவில் உள்ள ரிஜ்ஸ்விஜ்க் அரண்மனையில் தொடர்ந்து சபைக் கூட்டங்களை நடத்தி வந்தார். அவர் தங்கியிருந்த காலத்தில் பியூட்டென்சோர்க் அரண்மனையின் தோட்டத்தை ஒரு ஆங்கிலப் பாணித் தோட்டமாக மாற்றி அமைத்தார். இது பிற்கால தாவரவியல் பூங்காவிற்கு ஒரு உத்வேகமாக அமைந்தது.[3][4]

பின்னர் வந்த புதிய கவர்னர் ஜெனரலான பரோன் வான் டெர் கபெலன் (1817-1826) முதன்மைக் கட்டிடத்தின் மேல் அமைந்திருந்த கூரையில் ஒரு சிறிய குவிமாடத்தைச் சேர்த்து அரண்மனை மைதானத்திற்கு அடுத்து தாவரவியல் பூங்காவை நிறுவினார். இருந்தாலும், 1834 ஆம் ஆண்டில், சலாக் மலையின் எரிமலைச் சீற்றத்தினை அடுத்த பூகம்பம் காரணமாக பியூட்டென்சோர்க்கின் பழைய அரண்மனை பெரிதும் சேதம் அடைந்தது.[5] பின்னர் பாழடைந்த அரண்மனை இடிக்கப்பட்டு 1856 ஆம் ஆண்டில் அதன் தற்போதைய வடிவத்தில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்டது — இந்த முறை கட்டும்போது மேலும் பூகம்பங்களை எதிர்கொள்கின்ற வகையில் முன்னெச்சரிக்கையாக முன்பிருந்த இரு மாடிகளுக்கு பதிலாக ஒரே ஒரு மாடி மட்டுமே கட்டப்பட்டது.[3]

1870 ஆம் ஆண்டு முதல் 1942 ஆம் ஆண்டு வரை பொகோர் அரண்மனை டச்சு கவர்னர் ஜெனரலின் உத்தியோகபூர்வ இல்லமாக இருந்தது, இருந்தபோதிலும் மாநில விவகாரங்கள் தொடர்ந்து படேவியாவில் நடத்தப்பட்டு வந்தன. ஆரம்ப காலம் முதல் இந்த அரண்மனையில் டச்சு கிழக்கிந்தியாவின் 44 கவர்னர் ஜெனரல்கள் இந்த அரண்மனையில் வசித்து வந்துள்ளனர். இந்தோனேசிய சுதந்திரத்திற்குப் பிறகு, அரண்மனையின் பல அம்சங்கள் 1952 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டு அரண்மனை புதுப்பிக்கப்பட்டது. அடுத்து இந்த அரண்மனை ஜனாதிபதி சுகர்னோவின் பிரதான இல்லமாக மாறியது, ஆனால் பின்னர் சுஹார்டோ பதவிக்கு வந்த பிறகு அதனைப் புறக்கணித்தார்.[2][3]

வசதிகள்

[தொகு]
பக்கவாட்டிலிருந்து முதன்மை நுழைவாயிலின் தோற்றம்

தோட்டத்தின் மைதானத்தில் பல கட்டிடங்கள் அமைந்துள்ளன. அவற்றுன் மிகப்பெரியவை கெடுங் இந்துக் (முதன்மை அரண்மனை) மற்றும் அதன் இரண்டு பிரிவுகள் ஆகும். முதன்மை அரண்மனை கட்டிடத்தில் அரசின் தலைமை அலுவலர் அலுவலகம், நூலகம், விருந்தகம், தியேட்டர் அறை, அமைச்சர்களின் காத்திருப்பு அறை, தெரடாய் அறை எனப்படுகின்ற வசிக்கும் அறை மற்றும் கருடா அறை எனப்படுகின்ற முதன்மையான வரவேற்பு மண்டபம்) ஆகியவவை உள்ளன.[3]

முதன்மைக் கட்டிடத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இரண்டு கட்டிடங்கள் உள்ளன. கிழக்குப் பகுதியில் உள்ள கட்டடம் காலனித்துவ காலத்தில் வெளிநாட்டு அரசாங்க உயர் அலுவலர் தங்குவதற்கான விருந்தினர் மாளிகையாகப் பயன்படுத்தப்பட்டது. மேலும் கவர்னர் ஜெனரலின் தனிப்பட்ட விருந்தினர் தங்கவும் பயன்படுத்தப்பட்டது. மேற்குப் பகுதி இரண்டு அறைகளைக் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று மாநிலத்தைப் பார்வையிட வரும் முக்கிய விருந்தினருடன் வரும் அமைச்சர்களுக்கு விருந்தினர் மாளிகையாகவும், மற்றொன்று மாநாடு நடத்தப்பெறுகின்ற அறையாகவும் பயன்படுத்தப்படுகின்றன. காலனித்துவ காலகட்டத்தின்போது இந்தப் பகுதி ஆளுநர் ஜெனரலின் பணியாளர்களால் பயன்படுத்தப்பட்டது.[3]

பிற அரண்மனைகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Asril, Sabrina (February 22, 2015). "Pindah ke Istana Bogor, Jokowi Dianggap Lakukan Pemborosan Anggaran". Kompas.com. http://nasional.kompas.com/read/2015/02/22/09421091/Pindah.ke.Istana.Bogor.Jokowi.Dianggap.Lakukan.Pemborosan.Anggaran. பார்த்த நாள்: February 23, 2015. 
  2. 2.0 2.1 2.2 Sejarah Berdirinya Istana Bogor பரணிடப்பட்டது பெப்பிரவரி 19, 2015 at the வந்தவழி இயந்திரம், bogorsehat.com
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 ISTANA-ISTANA KEPRESIDENAN REPUBLIK INDONESIA பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம், setneg.go.id
  4. Lady Sophia Raffles (1835). Memoir of the life and public services of Sir Thomas Stamford Raffles. Vol. 1. pp. 140–141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1175036674. பார்க்கப்பட்ட நாள் February 19, 2015.
  5. adk, rus (March 1, 2015). "Kisah Jokowi, Istana Bogor, dan Ratu Pantai Selatan" இம் மூலத்தில் இருந்து மார்ச் 4, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304052109/http://www.jpnn.com/read/2015/03/01/289888/Kisah-Jokowi,-Istana-Bogor,-dan-Ratu-Pantai-Selatan. பார்த்த நாள்: March 6, 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொகோர்_அரண்மனை,_பொகோர்&oldid=3252529" இலிருந்து மீள்விக்கப்பட்டது