பேரமீசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரமீசியம்
பரமீசியம் ஆரிலியா
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: அதிநுண்ணுயிரி
தொகுதி: சிலியோபோரா
வகுப்பு: சிலியேட்டு
வரிசை: பெனிகுலிடா
குடும்பம்: பாராமெசிடே
பேரினம்: பரமீசியம்
Müller, 1773
இனங்கள்

பரமீசியம் ஆரிலியா
பரமீசியம் பர்சாரியா
பரமீசியம் காடேட்டம்
பரமீசியம் டெட்ராரெலியா

பரமீசியம் (Paramecium) என்பது ஓரணுவுயிர் தொகுதியில் சாறு வாழ் உயிர்கள் வகுப்பைச் சார்ந்ததாகும்.[1] சேற்றில் தோன்றி வாழும் இவ்வகை உயிர்கள் (Infusoria) என அழைக்கப்படுகின்றன. இது மிதியடி வடிவச் சிற்றுயிர் ஆகும். பெரும்பாலான நீர் நிலைகளில் காணப்படும் இது பல மீன்களுக்கு உணவாகி அவற்றை வாழ வைக்கிறது. பரமீசியம் ஒரு மாதிரி விலங்காக பல ஆய்வுகளுக்கு ஆய்வகத்தில் பயன்படுத்தப்படுகிறது,[2]

பரமீசியத்தின் கட்டமைப்பு[தொகு]

Paramecium நுண்ணுயிரியின் கலக்கட்டமைப்பு: 1) உணவுப் புன்வெற்றிடம் 2) நுண் கரு 3) வாய்த் தவாளிப்பு 4) gullet 5) anal pore 6) சுருங்கும் புன்வெற்றிடம் 7) மாகரு 8) பிசிர்.

பரமீசியம் திட்டவட்டமான வடிவமைப்பைக் கொண்டது. குதியற்ற மிதியடியின் வடிவத்தைக் கொண்டுள்ள இது 0.25 மி.மீ வரை நீளமுடையது. இதனை வெறுங்கண்ணால் கூடப் பார்க்க முடியும். மினுமினுப்பான எண்ணற்ற நுண்மயிர்கள் இதன் உடலின் மேல் வளர்ந்துள்ளன. இதன் உடலின் முன்பாகம் குறுகியும் பின் பாகம் அகன்றும் காணப்படும். முன்பக்க நுனி அகன்றும் பின்பக்க நுனி கூர்மையாகவும் இருக்கும். பின்பக்க நுனியில் வால் போன்ற நீண்ட நுண்மயிர்கள் தோற்றமளிக்கும்.பின்னால் பெருகிய பல்லுயிரணு உயிர்களின் வால் அமைப்பிற்கான அடிப்படை ஓரணு உயிரான பேரமீசியத்தில் கணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பேரமீசியம் ஓரணு உயிர் என்ற போதும் பெரியதும் சிறியதுமான இரண்டு உட்கருக்களைக் கொண்டுள்ளது. பேரமீசியத்தின் உடல் உயிரணு ஊனீர்ப் படிவு என்னும் போர்வையால் மூடப்பட்டு உள்ளது. இப்போர்வையே சவ்வுறை எனப்படுகிறது. இந்தச் சவ்வுறையில் நுண்மயிர்கள், பிற உயிர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் குட்டை நுண்கோல்கள் முதலியவை உள்ளன.

சுவாசித்தல்[தொகு]

பரமீசியம் தன் உடல் முழுவதாலும் சுவாசிகிறது. காற்றிலுள ஆக்ஸிஜனை உட்கொண்டு கரியமில வாயுவை வெளியிடுகிறது. இதன் உடலில் பச்சையம் இல்லாததால் இது கரியமில வாயுவை உட்கொள்ள முடியாது.

பேரமீசியத்தின் இயக்கம்[தொகு]

இடைவிடாது நீரில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிர் பேரமீசியம் ஆகும். இதன் உடலைச் சுற்றியுள்ள நுண்மயிர்கள் துடுப்புகளைப் போல அசைந்து இயக்கத்திற்கு உதவுகின்றன். உணவைத் தேடிச் செல்லும் பேரமீசியம் தன் உடலின் நீண்ட அச்சைச் சுற்றிச் சுழன்றபடி நுண்மயிர்த் துடுப்புகளை அசைத்து அசைத்து நீரில் முன்னேறிச் சென்று தன் இயக்கத்தை நிகழ்த்துகிறது.

உணவூட்டம்[தொகு]

பாக்டீரியாவினை உண்ணும் பரமீசியம்

பரமீசியங்கள் நீர்நிலைகளில் கரைந்துள்ள புல்நுண்ணுயிர்கள் எனப்படும் பாக்டீரியங்களைப் புசிக்கின்றன. பாக்டீரியங்களைப் புசிப்பதன் மூலம் இவை நீர்நிலைகளைச் சுத்தப்படுத்துகின்றன. பேரமீசியங்கள் தாமும் பல மீன்களுக்கு இரையாகின்றன.
பரமீசியத்திற்கு வாய் இருக்கிறது. வாய்க்கு மேலே வாயருகுக் குழி ஒன்று உள்ளது. வாயருகுக் குழியில், நுண்மயிர்களை அசைப்பதன் மூலம் பல வகை உணவுத்துணுக்குகள் உட்செலுத்தப்படுகின்றன. வாயருகுக் குழியிலிருந்து உணவுப் பொருளானது, வாய்க்குச் செல்கிறது. வாயிலிருந்து உணவுக் குழலுக்குள் சென்று திரட்டப்பட்டு, கவள உருண்டை வடிவில், உணவு உயிரணு ஊனீரில் செலுத்தப்படுகிறது. பேரமீசியத்தின் உடலில் செரிப்புக் குமிழி உருவாகி அதனுள் உணவு சிறிது சிறிதாக செரிக்கபடுகிறது. செரிக்காத உணவுப் பொருள்கள் உடலின் பின்புறத்தே உள்ள மலத்துளை வழியே வெளியேற்றப்படுகின்றன.[3][4][5]

கழிவுநீக்கம்[தொகு]

செரிக்கப்படாத உணவுப் பொருள்கலை வெளியேற்ற மலத்துளை இருப்பதைத் தவிர வேறு வெளியேற்றக் குமிழிகளும் பேரமீசியத்தில் அமைந்துள்ளது ஒரு சிறப்பம்சமாகும். பேரமீசியத்தின் உயிரணு ஊனீரில் இரு வெள்ளிக் குமிழிகள் உள்ளன. இவை அடிக்கடி சுருங்கக்கூடியவை. இவற்றைச் சுற்றி விண்மீன் போன்றுல்ல ஆரைச் சீர் வடிகால்கள் உள்லன. உயிரணு ஊனீரில் சேரும் தேவையற்ற நீரும், நீர்ப்பொருள்களும் இந்த வடிகால்களில் நிரம்பி, பின் சுருங்குவதன் மூலம் வெளியேற்றப்படுகின்றன. இரண்டு வெள்ளிக் குமிழிகளும் ஒன்றன்பின் ஒன்றாகச் சுருங்கி, உடலுக்குத் தேவையில்லாத பொருள்களை வெளியேகொட்டுகின்ற அமைப்பு பேரமீசியத்தின் உடலில் காணப்படுகிறது.

பரமீசியங்களின் இனப்பெருக்கம்[தொகு]

பரமீசியங்களில் இனப்பெருக்கம் இரண்டு வகைகளில் நிகழ்கிறது.

  1. கலவியில்லாப் பிளவுமுறை இனப்பெருக்கம் .
  2. கலவி முறை இனப்பெருக்கம்.

பிளவு முறை[தொகு]

நன்கு வளர்ந்த பேரமீசியம் சாதகமான சூழ்நிலையில் பல்குகிறது. அப்போது அதன் உள்லேயுள்ள இரண்டு உட்கருக்களும் பாதியாகப் பிளவுறுகின்றன. கருக்கள் பிளவுறும் நிலையில் பேரமீசியத்தின் நடு உடலில் சுருக்கம் ஏற்பட்டு ஏறக்குறைய சமமான இரண்டு பகுதிகளாகத் தனித்தனியே ஓர் உயிரணுவைக் கொண்டவாறு பிரிந்து இனப்பெருக்கம் நிகழ்கிறது.

கலவிமுறை[தொகு]

இரண்டு பரமீசியங்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதன் மூலம் கலவி முறையில் இனப்பெருக்கம் நிகழ்கிறது. பேரமீசியங்கள் தங்கள் வாயருகுக் குழிகளை ஒன்றோடொன்று பொருத்திக் கொள்ளும் போது பெரிய உட்கருக்கள் கரைந்து சிறிய உட்கருக்கள் பல தடவை பிளவுபடுகின்றன. ஒன்றின் உட்கருப்பகுதிகள் இன்னொன்றின் உடலுக்குள் புகுகின்றன. இந்தக் கலவிக்குப்பின் குறிப்பிட்ட அவ்விரு பேரமீசியங்களில் புதிய உட்கருக்கள் பெரியதும் சிறியதுமாக உருவாகி இனப்பெருக்கத்திற்கு வித்திடுகின்றன.

பேரமீசியத்தின் தூண்டல், துலங்கள் இயல்பு[தொகு]

பரமீசியங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, அப்பாத்திரத்தின் ஒரு பகுதியை மட்டும் சூடேற்றினால், 24 செ. முதல் 28° செ வெப்ப நிலையில் எல்லா பேரமீசியங்களும் ஒன்று திரண்டு நிற்கும். 30° செ -36 °செ -ல் பேரமீசியங்கள் அந்தப் பகுதியிலிருந்து விலகி குளிர்ச்சியான பகுதி நோக்கி விரையும். இதனால் 10°செ- 28° செ வரையுள்ள வெப்ப நிலையில் மட்டுமே பேரமீசியங்கள் உயிர் வாழ வல்லவை என்பதும் வெப்பத் தூண்டலுக்கேற்பத் துலங்கும் பண்புடையவை என்றும் தெரிகிறது. மேலும், பேரமீசியங்களின் நடுவே ஓர்உப்புத் துண்டைப் போட்டால் அவை விலகிப் போய்விடுகின்றன. ஆனால் ஒரு பாக்டீரியப் படலத்துணுக்கைப் போட்டால் அவை சூழ்ந்து மொய்த்து உண்ணுகின்றன. இதன் மூலம் பேரமீசியங்கள் புறத்தூண்டலுக்கேற்பச் செயல்படும் தன்மை கொண்டவை என்று தெரியலாம்.

உசாத்துணை[தொகு]

ஆணைவாரி ஆனந்தன். 'பல்துறை அறிவியல்' மணியம் பதிப்பகம் வெளியீடு. 1989.

மேலும் காண்க[தொகு]

http://en.wikipedia.org/wiki/Paramecium
http://microbewiki.kenyon.edu/index.php/Paramecium
http://101science.com/paramecium.htm
http://www.bio.umass.edu/biology/conn.river/parameci.html பரணிடப்பட்டது 2012-01-09 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரமீசியம்&oldid=3809427" இருந்து மீள்விக்கப்பட்டது