பேச்சு:மென்மி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மென்மி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

நல்ல தகவல் செறிந்த கட்டுரை. பாராட்டுகள், செல்வா. -- சுந்தர் \பேச்சு 01:51, 17 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

நன்றி சுந்தர். ஆனால் அனைத்துமே ஆங்கில, டாய்ட்சு விக்கியில் இருந்து பெற்றதே. --செல்வா 13:45, 17 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

முதல் வரியில் கட்டுரைத் தலைப்பு ஆங்கிலத்திலும் இருக்க வேண்டுமா?[தொகு]

கட்டுரையின் தலைப்பை ஆங்கிலத்திலும் முதல் வரியில் தருவது பற்றி எனக்கும் உடன்பாடே. ஆனால், குழப்பம் தர வாய்ப்பில்லாத தலைப்புகளிலும் தரவேண்டுமா என்பதுதான் என் கேள்வி. ஏன் எனில் கட்டுரைத் தலைப்பில் உள்ள பிற மொழி விக்கிகளின் இணைப்பு இருப்பதால், குழப்பம் ஏதும் இருந்தால் உடனே அது என்ன என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால் Fermi என்று ஒரு கட்டுரை இருந்தால் கட்டாயம் முதல் வரியிலேயே பெர்மி (Fermi) என்று குறிப்பது நல்லது. சில நேரங்களில் ஆங்கிலத்தில் தர மறந்துவிடுவதும் உண்டு. --செல்வா 22:51, 17 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

செல்வா, நான் ஆங்கில அல்லது பிறமொழிப் பெயர்களைத் தமிழில் பெயர்த்துக் கட்டுரையிடும்போது, அதன் ஆங்கில மற்றும் பிறமொழிப் பெயரையும் குறிப்பிடுவது கட்டாயமாக இருக்க வேண்டும் என்றே கூற வந்தேன். அதற்காக, தூய தமிழ்ப் பெயர்களுக்கு ஆங்கிலப்பெயர்களைத் தரவேண்டும் எனச் சொல்லவில்லை. உதாரணமாக, மென்மி அல்லாது லெப்டான் என எழுதியுள்ளீர்கள். லெப்டானின் ஆங்கிலப் பெயரைத் தெரியாத ஒருவர் (குறிப்பாக ஈழத்து மாணவன் என்று வைத்துக் கொள்ளுங்கள்). அதனை Leptan என்றே தேடுவார். ஏனென்றால், ஈழத்தில் Lepton என்பதை மறந்தும் லெப்டான் என உச்சரிக்கப் போவதில்லை. (விக்கியை பற்றி அறிந்தவர் இடப்பக்கத்தில் ஆங்கில விக்கி இடையிணப்பு இருந்தால் ஆங்கில விக்கிக்குப் போய் அதன் சரியான ஆங்கிலத் தலைப்பைத் தேடுவார்). தமிழ் விக்கியில் பல தூய தமிழ் சொற்களுக்கு (உதாரணமாக, தமிழ் நாட்டு ஊர்களின் பெயர்கள்) தேவையில்லாமல் ஆங்கிலச் சொற்கள் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன. இது ஏனென எனக்குத் தெரியவில்லை. (எனது கண்களுக்குத் தெரியும் போது அவற்றை நான் நீக்கி வந்தேன்).--Kanags \பேச்சு 01:15, 18 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
துவக்கத்தில் தேடுபொறிகளில் சிக்குவதற்காக ஆங்கிலப் பெயர்களை அடைப்புக்குறிகளுள் முதல் வரியில் தடித்த எழுத்துக்களில் தந்தோம். -- சுந்தர் \பேச்சு 03:15, 18 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
நல்ல தமிழ்ப் பெயர் உடைய கட்டுரைகளிலும், துவக்கத்தில் மட்டும் தலைப்பை ஒரு முறை ஆங்கிலத்திலும் தரும் வழக்கம் தொடர்வது நன்று. தயவுசெய்து ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளில் நீக்க வேண்டாம். தமிழ்நாட்டின் பல இடங்களிலும் இன்னும் தமிழில் எழுத முடியாத நிலை இருக்கிறது. அவர்களுக்கும் தமிழ்ச் சொல் தெரியாவதர்களும் தேடுபொறிகள் மூலம் கட்டுரையைக் கண்டடைய உதவும்.--ரவி 04:59, 19 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
மேலும், லெப்டோனுக்கு மென்மி எனப் பெயர் தந்துள்ளீர்கள். மென்மையானது எதனையும் மென்மி எனலாமா? அல்லது இந்த லெப்டானுக்கு மட்டும் பொருந்துமா? அல்லது லெப்டான் மட்டும் தானா மென்மையானது? எப்படி இப்பெயரீடு சாத்தியமாகும்? பெயரிடுவதற்கு ஏதாவது வழிமுறைகள் உள்ளனவா? (தெரியாமலேயே கேட்கிறேன்:).--Kanags \பேச்சு 01:28, 18 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
P.N.பட்டி, S.கோடிக்குளம் இப்பிடி பல. என்ன இளவு இது. --Natkeeran 01:46, 18 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
நற்கீரன், தமிழ்நாட்டில் ஆட்களின் முதல் எழுத்துகள் மட்டுமல்ல, ஊர்களுக்கும் ஆங்கிலத்தில் முதல் எழுத்து வைக்கும் பழக்கம் கடந்த சில பத்தாண்டுகளாகவே இருக்கிறது. ஒரே பெயர் உடைய ஊர்கள் இருந்தால் அருகே உள்ள பெரிய ஊரின் முதல் எழுத்தை ஆங்கிலத்தில் இடுகிறோம். எல்லா இடங்களிலும் இப்படித் தான் பெயரிடுகிறார்கள் என்றும் சொல்ல இயலாது.--ரவி 04:59, 19 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]


கனகு, ஆங்கிலச்சொல்லை இலத்தீன் எழுத்துக்களில் பிறைக்குறிகளுக்குள் தருவதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. நான் ஒவ்வொரு முறையும் தர முயலுகின்றேன். மறந்தால், கட்டாயம் யாரேனும் சேர்த்துவிடுங்கள். லெப்டோன் என்று எழுதினால் தமிழ்நாட்டு மக்கள் leptone என்று தேடுவார்கள் (அல்லது leptohn?). ஆங்கிலத்தில், எழுத்துக்கூட்டலுக்கும் ஒலிப்புக்கும் இடையே உள்ள ஒழுக்கம், சீர்மை குறைவு என்பதால் குழப்பங்கள் வர வாய்ப்புள்ளது. லெப்டான் என்று எழுதினாலும் leptawn என்று இருக்குமோ என்று கருத வாய்ப்புள்ளது. எனவே தமிழ் எழுத்துக்களில் பிறமொழியில் உள்ள சொல்லை எழுதும்பொழுது அதன் ஒலிப்பைத் தமிழ் மொழி வழக்குக்கு உகந்தவாறு தருகிறோம். துல்லியம் கிட்டுவது அரிது. (தமிழில் இருந்து ஆங்கிலம் என்றாலும் ஆங்கிலத்தில் இருந்து தமிழ் ஒலிப்பு என்றாலும்). அடுத்ததாக நீங்கள் //மென்மையானது எதனையும் மென்மி எனலாமா? அல்லது இந்த லெப்டானுக்கு மட்டும் பொருந்துமா? அல்லது லெப்டான் மட்டும் தானா மென்மையானது? எப்படி இப்பெயரீடு சாத்தியமாகும்? பெயரிடுவதற்கு ஏதாவது வழிமுறைகள் உள்ளனவா?// என்று கேட்டுள்ளீர்கள். தமிழில் கரி என்றால் அடுப்புக்கரியையும் குறிக்கும் (கருமையாக இருப்பதால்), யானையையும் குறிக்கும். கருப்பாக இருக்கும் ஏதொன்றையும் குறிக்குமா என்றால், பொருள் கொள்ளும் வழமை இருந்தால் கட்டாயம் குறிக்கும் என்று சொல்லலாம். இதற்கு பொருள்கோண்மை (பொருள் கொள்ளும் முறைமை) என்று பெயர். ஒரு பொருளின் ஒரு சிறப்பு இயல்பு அல்லது ஒரு பொது இயல்பு பற்றி பெயர் சூட்டுவது பலமொழிகளில் உள்ளவாறே தமிழிலும் உள்ள முறை. Lepton என்னும் சொல் கிரேக்க மொழியில் உள்ள λεπτος (leptos) என்னும் சொல்லில் இருந்து பெற்றது. λεπτος (leptos) என்றால் thin, small, delicate என்று இங்கே தந்துள்ளார்கள். எனவே மெலிந்த இளைத்த எல்லாவற்றுக்கும் Lepton என்று கூறலாமா என்று கேட்க முடியுமா? கருப்பாய் இருப்பதால் கரும்பு என்கிறோம், ஆனால் கருப்பாய் இருக்கும் எல்லாவற்றுக்கும் கரும்பு என்று கூறமாட்டோம். கூறும் வழக்கம் இல்லை. எனினும், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சூழல் அல்லது கருத்து உள்வாங்கலிலால் ஒருவர் வேறு ஒன்றுக்கும், கருப்பாய் இருப்பதால் கரும்பு என்று பெயர் சூட்டி வழக்கம் ஏற்படுத்தும் வாய்ப்பு கட்டாயம் உள்ளது. கெட்டியாய் இருப்பதால் காழ் என்றால் விதை என்று பெயர். அந்தக் கெட்டி என்னும் கருத்தில் இருந்து கடுமையான இறுக்கமான வெறுப்பு கொண்டிருந்தால் காழ்ப்பு என்று வேறு ஒரு சொல் ஏற்படுகின்றது. இப்படியாக பொருள் கொள்ளும் முறைமை ( பொருள்கோண்மை), பொருள் மருவும், பொருள் விரியும், பொருள் குறுகும், பொருள் திரியும் முறைமைகள் உண்டு (நறுமணம், நறவம் (தேன்), நாற்றம் என்னும் என்று இருந்தது நன்மணம் நறுமணமாக இருந்தது இன்று நாற்றம் என்றால் தீநாற்றம் என்று பொருள் திரிந்துள்ளது). அடுத்ததாக ஏன் தமிழில் மென்மி என்றோ வேறு தமிழ்ச்சொற்களாலோ வழங்க முற்படுகின்றோம்? ஏன் லெப்டான் என்றே எழுதலாகாது? கட்டாயம் லெப்டான் என்று வழங்கலாம். ஆனால் தமிழ் மொழியானது இலத்தீன், கிரேக்க மொழிகளைப் போல் ஒரு செம்மொழி. தொன்றுதொட்டு , பொருள் ஒருவாறேனும் விளங்குமாறு சொல்லாக்கங்கள் செய்தே நம் மொழி வழங்கி வந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மீன்கள், விலங்குகள், செடி-கொடிகள் ஆகியவற்றுக்கு எவ்வாறு பொருட்செறிவோடு சொற்கள் யாத்து வழங்கி வந்துள்ளனர் என்று எண்ணிப் பாருங்கள். இது தமிழின் தொன்மரபு. செம்மரபு. இக்காலத்திலும் காக்க வேண்டியது நம் பொறுப்பு. நம் முறை இன்றளவும் செம்மொழியாக வாழ்மொழியாக இருக்க வழி வகுத்தது. ஆங்கிலேயர்கள் ஏன் கிரேக்க மொழியில் இருந்தும், இலத்தீன் மொழியில் இருந்தும் சொற்களைப் பெறுகின்றனர்? அம்மொழிகள் செம்மரபுகள் கொண்டிருந்தன, அவை சொல்வளம் கொண்டிருந்தன, முறைப்படி சொல்லாக்கும் வழிகள் கொண்டிருந்தன. அவற்றின் வழித்தோன்றல்களான ஆங்கிலம் அவற்றில் இருந்து சொற்களைப் பெறுகின்றது. ஆங்கிலத்தில் sun என்ற ஒரு சொல்லுக்குத் தமிழில் 20 சொற்களுக்கும் மேல் உள்ளதே, ஏன்? தமிழில் பொருள் கொள்ளும் மரபு நெடியது. சொல்வளம் பெரிது. சொல்லாக்கும் மரபு செழிப்பானது. ஆங்கிலத்தில் Solar, Helios என்று பிறமொழிச்சொற்கள் கொண்டுதான் பெரும்பாலும் கலைச்சொற்கள் ஆக்கி வந்துள்ளார்கள். கிரேக்க இலத்தீன் மொழிக்குப் பிறகு பிரான்சிய மொழியைப் பின்பற்றி சொற்கள் ஆக்கிக்கொண்டனர். கடந்த ஒரு 100 ஆண்டுகளாக புதிய கலைச்சொல்லாக்கங்கள் (தம் மொழியில் இருந்தும் இனமான பிற மொழிகளில் இருந்தும் ஆக்கி வருகின்றனர்), பெருமளவில் பெருகியுள்ளன. ஆனால் தமிழில் இம்மரபு நெடியது. இன்று கடுகளவுக்கும் ஐயம் இல்லாமல் ஆங்கிலமே பெருவளமுடைய மிகு செம்மொழி. ஆனால் இது போலவே ஒருகாலத்தில் இலத்தீனும், கிரேக்க மொழியும், சமசுகிருத மொழியும் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு வலுவுடன் இருந்து வந்துள்ளன. ஆனால் அன்றுதொட்டு இன்றுவரை தமிழ் செம்மொழியாய் இருந்து வந்துள்ளது. எனவே தமிழில் கலைச்சொற்கள் ஆக்கும் வழக்கு நெடியது. இன்றும் போற்றி வளர்த்தெடுத்துச் செல்வது நம் தலைமுறையின் கடமை. இன்றைய சூழலிலே, தொழில் நுட்ப வளர்ச்சியிலே 10 மில்லியன் சொற்கள் என்றாலும் இணையான பிற மொழிச்சொற்களை நொடிப்பொழுதில் பெற்றுக்கொள்ளலாம். எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் மரபுவழி வந்த நாம் காரணம் பற்றியே சொல்லாக்கங்கள் செய்து வருகிறோம், அதுவே நல்லது, ஆனால் சில விலக்குகளுடன் இம்முறையைக் கொள்வோம். லெப்டான் என்றுதான் இருக்க வேண்டும் என்றால் எனக்கு மறுப்பு ஏதும் இல்லை. மென்மி என்று இருந்தால் நல்லது, குறையொன்றும் இல்லை என்பதே என் நினைப்பு. இலவம் பஞ்சு, இலேசாக, இலகுவாக, இலவசமாக, இளைத்த, இளகிய, இளப்பம் என்றெல்லாம் leptos என்பதற்கு பொருளும் ஒலிப்பும் நெருக்கமான சொற்களும் உண்டு. எனவே இலவன், இளப்பன், இலவம், இலவி, இலத்தன் (இலத்தன் என்பது எலக்ட்ரான் = இலத்திரன் என்னும் இலங்கை வழக்கை ஒத்தும் இருப்பது நோக்கத்தக்கது) என்பது போன்ற சொற்களும் ஆக்கலாம். ஆகவே பொருள் சுட்டுமாறு தமிழில் சொற்களை ஆக்கி வழங்குவது நம் அடியாழமான இயல்பு. தமிழின் தொன்மரபு. நன்மரபு. --செல்வா 12:39, 18 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

செல்வா, தங்களின் விரிவான பதில் கண்டு மகிழ்ச்சி. நிறைய விடயங்களை அலசியிருக்கிறீர்கள். தெரியாத பலவற்றைத் தெரிந்து கொண்டேன். உங்கள் விளக்கங்களை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.--Kanags \பேச்சு 22:12, 18 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
நன்றி கனகு.--செல்வா 02:49, 19 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

படம்[தொகு]

இதுக்கு பொருத்தமான ஒரு படம் இட்டால் நன்று. --Natkeeran 22:55, 18 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மென்மி&oldid=812725" இலிருந்து மீள்விக்கப்பட்டது