பேச்சு:தைப்பொங்கல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைப்பொங்கல் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தைப்பொங்கல் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தைப்பொங்கல் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தைப்பொங்கல் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தைப்பொங்கல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

பொங்கல் - தமிழர் திருநாள்[தொகு]

பொங்கல் இந்துப் பண்டிகை என்று பிரதானமாக அடையாளப்படுத்துவது அவ்வளவு பொருத்தமில்லை என்று நினைக்கின்றேன். --Natkeeran 01:05, 8 ஜனவரி 2007 (UTC)

பொதுவாக இந்துப் பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறதெனினும் ஒரு தமிழர் பண்டிகையாகவே அண்மைக்காலங்களில் பார்க்கப்படுகிறது. கொழும்பில் தமிழர் அதிகம் வாழும் பகுதிக் கிறித்தவத் தேவாலயத்திலும் பொங்கப்படுவதைக் கண்டுவருகிறேன். ஆதலால் இந்துப் பண்டிகைகள் வார்ப்புருவை நீக்கப் பரிந்துரைக்கிறேன். --கலாநிதி 17:11, 8 ஜனவரி 2007 (UTC)
கலாநிதியின் கருத்துடன் உடன் படுகின்றேன். --Natkeeran 17:13, 8 ஜனவரி 2007 (UTC)

நற்கீரன், மேலே கருத்துத் தெரிவித்தது கலாநிதியல்ல. கோபிதான். எப்படிக் கலாநிதியின் பெயரில் கருத்துப் பதிவாகியதென்று விளங்கவில்லை. --கோபி 17:15, 8 ஜனவரி 2007 (UTC)

இலங்கையின் மலையக பகுதிகளில் பொங்கலன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படுவதோடு தேவாலயதுக்கு முன்னாள் பொங்கல் பொங்கி ஏனையவருடன் பரிமாரிக்கொள்வதும் வழக்கமாகும்.--டெரன்ஸ் \பேச்சு 17:20, 8 ஜனவரி 2007 (UTC)

உங்கள் அனைவரதும் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள், பொங்கல் கொண்டாடப்படும் முறை என்பன சைவ சமயத்தவர்களால் அநுட்டிக்கப்படும் முறைகளையே குறிக்கிறது. (இந்து வார்ப்புரு இங்கு இருப்பதில் எந்தத் தவறும் இல்லை எனவே எனக்குப் படுகிறது). இக்கட்டுரையில் டெரென்ஸ் தந்த செய்திகளையும் இணைப்பது நல்லது. இலங்கையில் சில பொது அமைப்புகள் ஆங்காங்கே பொங்கல் விழாக்களை நடத்துகின்றன. அத்துடன் பொங்கல் விழா சங்கிராந்தி, மகர சங்கிராந்தி என்ற பெயரில் இதே நாளில் இந்துக்களால் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது. (ஆனால் இது இந்துக்கள் அல்லாதவர்களாலும் அந்தந்த ஊர்களில் கொண்டாடப்படுகிறதா என்பது தெரியவில்லை). இத்தகவல்களுக்கு தனியான பக்கங்கள் தொடங்கலாம்.--Kanags 22:22, 8 ஜனவரி 2007 (UTC)

பொங்கல் இந்து பண்டிகை என்று கூறுவது பொருந்தாது. இவ்விழா மதம் சாரா பொதுமக்கள் திருவிழா. கதிரவனைக் கொண்டாடும் (மழை, உயிரினங்கள் அனைத்தையும் நினைத்து, நன்றி கூறும் விதமாக அமைந்தது) விழா. தமிழர்கள் திருநாளாக சிறப்பாகக் கொண்டாடப்படும் பொதுமக்கள் அனைவரும் கொண்டாடும் விழா. தைமாதம் பிறப்பு விழா என்றும் சொல்லலாம், எனினும், மதம்-சாரா கொண்டாட்டத்திருவிழா. இந்துக்கள் தங்கள் முறைப்படி வழிபாடுகள் செய்தாலும், அடிப்படை அனைத்தும் மதம் சாராதவை. அடுத்ததாக, திருவள்ளுவர் நாளையும் விளக்கங்களுள் சேர்த்தல் வேண்டும். இது எப்பொழுதிலிருந்து திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடுகிறோM என்பதனையும் சொல்லுதல் வேண்டும். --செல்வா 22:58, 8 ஜனவரி 2007 (UTC)
வணக்கம் செல்வா, பொங்கல் தமிழர் பண்டிகை என்பதை அடையாளப்படுத்துவதே சரியானது. இந்த வார்ப்புருவை உருவாக்க ஆரம்பிக்கும் போது சைவசமயப் விழாக்களை உள்ளிடுவதற்காகவே ஆரம்பித்தேன். ஆனால் அநேகமான எமது சமய விழாக்கள் மற்ற இந்துக்களாலும் கொண்டாடப்பட்டுவருகின்றன. எனவே பொதுவில் இந்துப் பண்டிகைகளாக உருவாக்கிவிட்டேன். இந்த வார்ப்புருவின் பெயரை பொதுவில் பண்டிகைகள் (இந்து நாட்காட்டியில்) என்று மாற்றிவிடலாமா?--Kanags 23:14, 8 ஜனவரி 2007 (UTC)
கனக்ஸ், பெயரை மாற்றினால் பிற சமய பட்டிகைகளையும் உள்ளடக்க வேண்டி வரும். எ.கா. கிறிஸ்துமஸ். அது நீங்கள் வார்ப்புருவை உருவாக்கியதற்கான நோக்குகல்ல என்று நினைக்கின்றேன். --Natkeeran 01:11, 9 ஜனவரி 2007 (UTC)

நற்கீரன், வார்ப்புருவின் பெயரை மாற்றத் தேவையில்லை. அப்படியே இருக்கட்டும். (அநேகமான வார்ப்புருக்கள் ஆங்கிலப்பெயர்களிலேயே அமைந்துள்ளதைக் கவனியுங்கள்). பக்கங்களில் அது எப்படிக் காட்டப்படுகிறது என்பதே முக்கியம். வார்ப்புருவைப் பாருங்கள். அங்கு தேவையான மாற்றத்தைச் செய்துள்ளேன். இப்போதுள்ள் வார்ப்புருவில் மற்றைய சமய விழாக்கள் சேர்க்கப்படத் தேவையில்லை. அதற்கேற்ப தலைப்பை மாற்றியுள்ளேன். பெயரையும் மாற்றவேண்டுமானால் வழிமாற்றலாம்.--Kanags 01:50, 9 ஜனவரி 2007 (UTC)

ஓம் என்று இருந்தால் பரவாயில்லையா..!--Natkeeran 01:56, 9 ஜனவரி 2007 (UTC)

ஓம்:).--Kanags

ஓம் ஓம் --கலாநிதி 16:42, 9 ஜனவரி 2007 (UTC)

பொங்கலா தைப்பொங்கலா[தொகு]

தைப்பொங்கல் என்று அமைவது கூடிய பொருத்தம் அல்லவா. --Natkeeran 13:13, 5 ஜனவரி 2008 (UTC)

மேம்படுத்தல்[தொகு]

இந்தக் கட்டுரையை சற்று துப்பரவுப் படுத்தியுள்ளேன். இது பல வழிகளில் மேம்படுத்தக் கூடிய கட்டுரை. இயன்றவரை மேம்படுத்தி உதவவும். நன்றி. --Natkeeran 03:37, 12 ஜனவரி 2009 (UTC)

தகவல்கள் எடுத்து சேர்க்கப்பட வேண்டும்[தொகு]

பொங்கல் வர பத்து நாள் இருக்கும் போதே எங்கள் ஊரில் 'பரப்பரப்புத் தொற்றிக்கொண்டுவிடும். பெருவாரியான வீடுகள் ஓடு மற்றும் கூரை வேய்ந்த வீடுகள் என்பதாலும், மண் தரை என்பதாலும் வீட்டு வேலைகள் நிறைய இருக்கும்.


காவிரி பாசனம் என்பதால், முப்போகம் விளையும் பூமி. சோற்றுக்கு வஞ்சனை இல்லாத ஊரு, எங்க ஊரு. திருவாலங்காடு; கும்பகோணத்திற்கும் மாயவரத்திற்கும் இடையில் காவிரி ஆற்றை ஒட்டி இருக்கிறது.

"சரி...! வாங்க எங்க ஊருக்கு போவோம்..."

மண் போடும் படலம். வீட்டில் உள்ள தட்டு முட்டு சாமனெயெல்லாம் வெளியே கொண்டு வந்து போட்டு விடுவார்கள். சாணம் மொழுகி சும்மா... ஜில்லுன்னு இருந்த தரையெல்லாம் கரண்டியைக் கொண்டு சுரண்டி புது மண் போடுவார்கள். இதற்காகவே ஊரைவிட்டு வெளியே இருக்கும் களங்களில் (மண் மேடுகளில்) கூடை கூடையாய் மண் எடுப்பார்கள்.

மண்ணை வீட்டின் வெளியே கொட்டி தண்ணீர் விட்டு, நல்லா சாணி மிதிப்பது போல் மிதித்து (ஊரில் உள்ள குஞ்சு குளவாங்களையெல்லாம் இறக்கி விட்டுவிடுவார்கள். அதுங்க 'தையா தக்கான்னு' குதிக்கும்.) எங்கள் பக்கம் களி மண் என்பதால் (களி மண் நீரை சேமிக்கும் திறன் கொண்டது), நன்றாக குழைந்து வரும். மண் பிசையும் போதே அதில் உள்ள சிறு கற்கள், சிலாம்பு, தூசி, ஓட்டாஞ் சில்லு ( அதாங்க... மண் பானை ஓடு) எல்லாம் எடுத்து விடுவார்கள்.

மண்ணை சிறு சிறு அளவில் எடுத்து, வீட்டின் தரையில் பூசிக் கொண்டு வருவார்கள். நன்றாக காய்ந்து வரும் பொது, கை அளவில் உள்ள கூழாங்கற்களை கொண்டு தரையை தேய்ப்பார்கள். தேய்க்கத்... தேய்க்க தரை வழ வழன்னு., அப்படியே... மொசைக் தரைபோல மாறும். அதுவரை தப்பித் தவறி கூட ஒரு பய ஊட்டுக் குள்ளாற நடக்க முடியாது. அப்படி ஒரு கட்டுப்பாடு இருக்கும்.

கடைசியா ஒரு கோட்டிங் உண்டு. சாணிய நல்லா 'திக்' கா கரைச்சி தரையை மொழுகி எடுப்பார்கள். சாணி ஒரு நல்ல கிரிமி நாசினி.

பிற்பாடு அரிசியை ஊறவைத்து, ஆட்டுகல்லில் ஆட்டி , வீடு முழுவதும் அரிசி கோலம் போடுவார்கள். எந்த வீட்டு திண்ணையிலாவது ஒக்காந்திங்கன்னா கை காலெல்லாம் வெள்ளையாகிவிடும்.

நான் சொல்வது 25 / 30 வருடங்களுக்கு முந்தைய கதை. இப்போது எல்லாம் மாடி அல்லது சிமண்ட்டு தரை வீடுதான். இரவு 8மணிக்கு மேல் எவனும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. 'மானாட மயிலாட' பார்த்துக் கொண்டு காற்றாட உட்கார்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்! எல்லாம் விவசாயிகள் என்பதால் ஊரை சுத்தி வயல் வெளிதான். பின்ன..! தஞ்சை மாவட்டம் எப்படி இருக்கும்? வெள்ளை அடிக்கும் படலம்.

மண் போட்டு முடிந்ததும், சுண்ணாம்பு (கிளிஞ்சல் -கடல் மட்டி) வாங்கி ஒரு வாளி போன்ற பெரிய பாத்திரத்தில் போட்டு சுடு தண்ணீர் ஊற்றுவார்கள். தண்ணீர் பட்டதும் அது 'குபு குபு'ன்னு பொங்கத் தொடங்கும். அதை பார்க்க, சின்ன பசங்களாகிய எங்களுக்கு ஒரே ஆச்சரியமா இருக்கும். வெந்த சுண்ணாம்போடு வஜ்ஜிரம் கலப்பார்கள். அது மாட்டு கொழுப்பாலானது. கட்டி கட்டியாக ஒரே நாத்தம் அடிக்கும். அதை வாங்கி தனியே அடுப்பில் வைத்து காய்ச்சி,பிசின் போல் ஆகிவிடும். வெந்த சுண்னாம்போடு கலந்து சுவருக்கு வெள்ளை அடிப்பார்கள். அப்போதுதான் சுண்ணாம்பு சுவரில் ஒட்டும். பெரிசுங்க வெந்த சுண்ணாம்பை (வஜ்ஜிரம் கலப்பதற்கு முன்பு) எடுத்து, தங்களது சுண்ணாம்பு 'டப்பியில்' அடைத்துக் கொள்வார்கள். அது ஒரு மாசத்துக்கு ஓடும். வெற்றிலையையும் ஊர் வாயையும் மெல்ல...!


சுவற்றுக்கு சுண்ணாம்பு அடிக்க தேங்காய் மட்டை பெஸ்ட். அதை சுத்தியலால் தட்டி, புருஸ் (கிராமத்து பிரஷ்) போன்று செய்துகொள்வார்கள். கூடவே நீலம், பச்சை, செவப்பு, கருப்பு,மஞ்சள் போன்ற கலர்களை வாங்கிவந்து சுண்ணாம்போடு கலந்து வீட்டின் முகப்பில் படம் வரைவதும் உண்டு. இதில் தேர்தல் சின்னங்கள் முக்கிய இடம் பிடிக்கும். சூரியன், இரட்டை இலை, கை போன்ற சின்னங்கள் வரைந்து இருக்கும். அரிவாள் சுத்தி, கதிர் அருவா இதெல்லாம் அதிகம் இருக்காது. எங்கள் ஊரில் கம்யூனிஸ்ட்கள் குறைவு. எல்லோரிடத்திலும் நிலம் இருப்பதால் கம்யூனிஸ்ட்டுகளுக்கு அங்கு வேலையில்லை. என்ன.. நிலத்தின் அளவு ஆளாளுக்கு வேறுபடும். கம்யூனிஸ்ட்டுகள் நாகைப்படினத்தில் அதிகம்.

தேர்தல் சின்னங்கள் வரைய தேங்காய் காம்புதான் நல்லது. பிரஷ் போலவே சின்னதாக வரைய ஏதுவாக இருக்கும்.


தை பொங்கல்.

இதை 'பெரும் பொங்கல்' ன்னும் சொல்லுவாங்க. தை முதல் நாள். ஊரே திருவிழா கோலம் கொண்டு இருக்கும். மண்ணின் திருவிழா. தமிழனின் தனி விழா இந்த பொங்கல் விழா.

பொங்கலுக்கு சிறப்பே கரும்பும் வாழையும்தான். பொங்கலுக்கு இரண்டு நாளுக்கு முன்பே 'கொடாப்பு' போடுவார்கள். கொடாப்பு என்பது வாழைத்தாரை (வாழைப் பழம்) பழுக்க வைப்பதுதான். எல்லோரது வீட்டிலும் வாழை மரம் உண்டு என்பதால். வாழைத் தாரை யாரும் கடையில் வாங்குவதில்லை.

தரையில் பள்ளம் தோண்டி, சுற்றிலும் வாழை சருகைக் (காய்ந்த வாழை இலை) வைத்து, அதில் நடுவில் வாழைக்காயை வைத்து, மேலே வாழைச் சருகை பரப்பி, ஒரு பானையை கவிழ்த்தாற்போல் வைத்து மண்ணை கொண்டு மூடி மொழுகி விடுவார்கள். இப்போது மண் பாணையின் சிறு பகுதி மட்டும் வெளியில் தெரியும். அதில் ஒரு ஓட்டையைப் போட்டு நெறுப்பு வைத்து காலையிலும், மாலையிலும் ஊதுவார்கள். அந்த மண் பாணை முழுவதும் வாழைச் சருகு இருக்கும். அதனால் நெறுப்புக் கொண்டு ஊத..ஊத புகை உள்ளே பரவி காயை பழுக்கவைக்கும். இரண்டு நாள் கழித்து கொடாப்பை பிரித்தால் வாழைக்காய் செங்காயாக பழுத்து இருக்கும். எடுத்து கொடியில் அடுக்கி விட்டால் பொங்கல் அன்று காலையில் பழம் பழுத்து விடும். எல்லோர் வீட்டிலும் வாழை பழம் கிடைக்கும் என்பதால், 'வகை - தொகை' யில்லாமல் சாப்பிட்டு விட்டு கொல்லைப் புறத்திற்கு ஓடுபவர்கள் அந்த நேரத்தில் சற்று...அதிகம்!!.

மற்றொன்று கரும்பு; காவிரிக்கு வடக்கே கரும்பு பயிரிடுவார்கள். சில சமயங்களில் அருகில் உள்ள திருக்கொடிகாவலுக்கு சென்றும் கரும்பு வாங்குவோம். பொங்கலுக்கு பயன்படுத்துவதை 'பன்னிக் கரும்பு' என்போம். எங்கள் வீட்டில் ஒன்று இரண்டு வாங்கும் பழக்கம் இல்லை. வாங்கினால் ஒரு கட்டுதான். அப்படி ஒரு சனக் கூட்டம்.

எங்க ஊர்ல ஒரு ஏடா கூடம் ( ஒரு பெருசு) இருக்கும். பொங்கல் சமயத்திலேயே நாலஞ்சி கரும்ப எடுத்து பரண்ல போட்டு வச்சிடும். பொங்கல்லாம் முடிஞ்சி எல்லா பய வூட்லேயும் கரும்பு தீர்ந்திடுச்சின்னு தெரிஞ்சதும் எடுத்து ஆர அமர வாசல்ல சாக்க (கோணி) விரிச்சிப் போட்டு திங்க ஆரம்பிக்கும். அப்ப நடக்கும் பாருங்க ஒரு கூத்து.... போற வர பய புள்ளங்கையெல்லாம் அவர் கரும்பு சாப்பிடுறத பார்த்துட்டு வீட்டில அழுது, கரும்பு வேணும்ன்னு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிடும். எங்கேருந்து குடுப்பான் அப்பன்காரன் 'கரும்பும் -மாம்பழமும்' சீசன் முடிஞ்சா கிடைக்காதுன்றது அந்த குழந்தைகளுக்கு தெரியாதில்ல. அப்புறமென்ன அங்கே ஒரே அமளி-துமளிதான்.

புது அரிசி, புதுப் பானை, புது அடுப்பு என பொங்கல் வைக்க எல்லாமே புதுசுதான். சிலர் வீட்டிற்கு வெளியே பொங்கல் வைப்பார்கள், சிலர் வீட்டு முற்றம் அல்லது வராண்டாவில் பொங்கல் வைப்பார்கள். பொங்கலுக்கு மண் பானையைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். வசதி உள்ளவர்கள் வெங்கலப் பானையை பயன்படுத்துவார்கள்.

மொத்தம் இரண்டு அடுப்பு செய்வார்கள், ஒன்று வெண் பொங்கலுக்கு மற்றொன்று சர்க்கரை பொங்கலுக்கு. அரிசி, காய்கறிகளை படையளிட்டப் பிறகுதான் பொங்கல் வைப்பார்கள்.

பெரும்பாலும் மஞ்சள் கொத்து எல்லோரது வயல் வரப்பிலும் / தோட்டத்திலும் இருக்கும். இஞ்சி கொத்து கடையில் வாங்கிக் கொள்வர்கள். பொங்கல் பொங்கும் போது "பொங்கலோ... பொங்கல்..." என்று சில்வர் தட்டில் தட்டிக் கொண்டு குடும்பமே உற்சாக குரல் எழுப்பும். பெரும்பாலும் வெண் பொங்கல் தான் முதலில் பொங்கும். அதுதான் சுபீட்சம் என்றும் சொல்வார்கள்.

வெண் பொங்கலை 'நண்ட சோறு' ன்னு சொல்வாங்க. அதில உப்பு இருக்காது. வெறும் பச்சரிசியைப் போட்டு பொங்கி இருப்பார்கள். அதற்கு ஊத்திக் கொள்ள 'கதம்ப குழம்பு' (பகவான் குழம்பு) கொடுப்பார்கள். இதில் முள்ளங்கி, வாழைக்காய், அவரைக் காய், சேப்பங்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு,பரங்கிக் காய், செளவ் செளவ், கத்திரிக்காய், உருளை இப்படி பலதரப்பட்ட காய்கறிகளை கொண்டு இந்த குழம்பு தயாராகும். இதை தாளிக்க மாட்டார்கள். சர்க்கரைப் பொங்கல் வழக்கம் போல்தான். (அது அடுத்த நாள் காலையில் தான் நல்லா இருக்கும்! )இதெல்லாம் எனக்கு பிடிக்காது என்பதால், பெரும் பொங்கல் அன்று முக்கால் வாசி நேரம் அரை வயிறுதான்.


பெரும் பொங்கலன்று (முதல் நாள்) பொங்கலை சூரியனுக்கு படையளிடுவார்கள். இரண்டு முறத்தில் இலை விரித்து அதில், ஒன்றில் வெண் பொங்கல், மற்றொன்றில் சர்க்கரை பொங்கல் வைத்து, இரண்டு வாழைப் பழத்தை தோலை உரித்து வைத்து, தேங்காய் உடைத்து மூன்று முறை உயரே தூக்கி சூரியனிடத்தில் காட்டுவார்கள். பிறகு குடும்பம் சகிதமாய் சூரியனுக்கு வணக்கம் (நமஸ்காரம்) செய்வார்கள்

மாட்டு பொங்கல்.

விடியற்காலையிலேயே மாட்டை மேய்ச்சலுக்கு இழுத்துச் சென்றுவிடுவார்கள். அதுநாள் வரை ரயிலடி, திடல் போன்ற பகுதிகளில்தான் மாடு மேய்க்க முடியும். ஆனால், மாட்டு பொங்கலுக்கு மட்டும் விதிவிலக்கு. மாட்டை எங்கு வேண்டுமானலும் மேய்க்கலாம்.வயல் ஓரங்களில், வரப்புகளில் என்று எங்கு பார்த்தாலும் மாடு மேய்ந்துக் கொண்டு இருக்கும். ஊர் தலையாரி பார்த்தாலும் ஒன்றும் சொல்லமாட்டார்.

மாடு மேய்ந்த பின்னர் குளம், ஆறுகளில் மாடுகளை குளிப்பாட்டி பொட்டு வைத்து கொம்புகளை கூர் சீவி கலர் பெயிண்ட் அடிப்பார்கள். கழுத்தில் கட்ட (மாட்டுக்கு தான்...!) கழுத்துக் கயிறு, மூக்கனாங்கயிறு, தாம்பு கயிறு என்று பார்த்து பார்த்து வாங்குவார்கள். கூடவே நெட்டிமாலை, பூ மாலை, நெற்கதிர் மாலை என்று மாட்டுக்கு சோடிப்பு ஒரு பக்கம் நிகழும்.

மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்து, கோலம் போட்டு பரங்கி பூ வைப்பார்கள். கொட்டகையின் ஒரு மூலையில் சாணியால் ஒரு தொட்டில் கட்டி (கையளவிற்கு) அதில் ஆலம் (மஞ்சள்-சுண்ணம்பு) கரைத்து ஊற்றுவார்கள். அதில் பரங்கி பூ, செவ்வந்திப் பூ, தும்பைப் பூ போன்ற பூக்களைக் கொண்டு அலங்கரித்து விளக்கு ஏற்றி வைப்பார்கள். கூடவே.. ஒரு நெற் கதிரை மண்ணோடு பிடிங்கி அந்த தொட்டிற்கு அருகில் வைப்பார்கள்.

இப்படி ஒரு ஏற்பாடு நடக்க... மறுபக்கம் கறி,மீன்,கோழி, கருவாடு வாங்க ஒரு கூட்டம் கிளம்பிவிடும். பொதுவாக கிராமங்களில் இதைப் போன்ற விசேஷ நாட்களில் ஆட்டு கறி கூறு போடுவார்கள். நல்லா பெரிய வாழை இலையில் தண்ணி ஏத்தாத கறியை கூறு போட்டு விற்பார்கள். சுத்தமான கறி. நல்லா கடா ஆடா பார்த்து போட்டுத் தள்ளுவார்கள்.

வீட்டில் மீன் குழம்பு, கறி குழம்பு, கறி வறுவல்,கருவாட்டு குழம்பு, எரா தொக்கு, இரத்தப் பொறியல் (ஆடுதான்...) , முட்டை மசாலா என்று வீடே ஒரு மினி முனியாண்டி விலாசா மாறிடும். அன்று இறந்தவர்களுக்குப் படைப்பதால், இப்படி 'தட-புடல்' ஏற்பாடு. அவர்களுக்கு பிடித்த(?) அயிட்டமா போட்டுத் தாக்குவார்கள்.

இதெல்லாம் இருந்து 'சரக்கு' இல்லனா எப்படி...?

சட்டியில கறி வேகும் போதே பய புள்ளைங்க (இளவட்டங்கள்) உசார் பன்னிடும். வறுத்ததையும், பொறித்ததையும் தனியே டிபன் பாக்சில் போட்டு 'எஸ்கேப்' ஆகிவிடுவார்கள். எடத்துக்கா பஞ்சம்... தோப்பு ,தொரவு, ஆத்தாங்கரை, வயல் வெளின்னு 'ஜமா' கிளம்பிடும். இனி இரண்டு நாளைக்கு அவனுங்களுக்கு தலையில தண்ணி தெளிச்ச மாதிரிதான்.

சரக்குல மிக்சிங்குக்கு சாதா தண்ணியெல்லாம் கிடையாது 'இளநி' தான். பின்ன... தென்னந்தோப்புல குடிச்சா அப்படிதான். ஆட்டு கறி, மீன் வறுவல், கோழி குழம்புன்னு எல்லோரது வீட்டிலிருந்தும் எடுத்து வருவதால் 'சைடு டிஷ்' க்கு பஞ்சம் இருக்காது.

சில நேரங்களில் 'பார்ட்டி' காவேரிக்கரையின் வாழைத் தோப்புகளில் நடைபெறும். அப்போதெல்லாம் சைடு டிஷ் மரத்திலேயே கணிந்த வாழைப் பழம் தான். தலைவாழை இலையை விரிச்சி பழங்களையும், மிளகா பிஞ்சிகளையும் கொட்டி விடுவார்கள். (அதெல்லாம் ஒரு காலம்)

வட்டார வழக்கு

பொதுவா நெல்லை, கோவை, மதுரை போன்ற வட்டாரங்களில் பேசப் படும் 'வட்டார மொழி' நமக்குத் தெரியும். பேசும் போதே நாம் கண்டுப் பிடித்துவிடலாம். இது எந்த பகுதியைச் சார்ந்தது என்று. ஆனால் (அன்றைய ஒருங்கிணைந்த) தஞ்சை மாவட்டங்களில் கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி போன்ற சரகங்களில் பேச்சுத் தமிழில் பெரிதாக வேறுபாடு தெரியாது. அங்கு பேசப்படும் மொழி அமைப்பு 'நாடகத் தமிழ்'. அதைத்தான் நாம் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துகிறோம். அதனால் எங்கள் பகுதிகளில் 'பிரத்தியேகமான சொல்லாடலை' காண முடியாது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். (தமிழக கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழும் 'கர்னாடக சங்கீதம்' தோன்றியது இந்த பகுதிகளில்தான் என்பதையும் அறிக.... )

ஆனால் தஞ்சை மாவட்டத்தின் தெற்கே ஒரத்தானாடு, பேராவூரணி, நாகை மாவட்டத்தின் தெற்கே திருத்துரைப்பூண்டி,வேதாரண்யம் போன்ற பகுதிகளிலும் திருவாரூர் மாவட்டத்தின் மேற்கே வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர் போன்ற பகுதிகளிலும் நாம் பேச்சு வழக்கில் சற்று வித்தியாசத்தை காணமுடியும்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நாகையும், கலைஞர் ஆட்சி காலத்தில் திருவாரூரும், தஞ்சை மாவட்டத்திலிருந்து நிர்வாக ரீதியாக மூன்றாகப் பிரிக்கப்பட்டது. இதெல்லாம் சேர்ந்ததுதான் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம். பிரிக்கப் பட்டாலும் கூட கலைஞர் கருணாநிதியையும் சேர்த்து பெரும்பாலானவர்கள் இன்றும் "நான் தஞ்சை மாவட்டத்துக்காரன்" என்றுதான் சொல்லுவார்கள். அதில் ஒரு பெருமை / சந்தோஷம் இருக்கிறது. இருக்கத்தான் செய்கிறது.

முன்பு தஞ்சை மாவட்டத்துக்காரர்கள் தமிழ் திரைப்படைத் துறையை ஆக்கிரமித்திருந்தார்கள். இன்று அது மதுரைக்காரர்கள் கைக்கு போயுள்ளது.


மதியம் மாட்டுக்கு புது கயிறு எல்லாம் மாத்தி நல்ல நேரம் பார்த்து, மாட்டு கொட்டகையில உலக்கையைப் போட்டு, மாட்டை தாண்டவச்சி அழைத்து போவார்கள். பிறகு மாட்டு கொட்டா முழுசும் சாம்பிராணி காட்டி, மாட்டின் முதுகிலும், வயிற்றிலும் சோற்றால் செய்த பசையை (அடுப்புக் கரி, மிளகா சாந்து) திருஷ்டிக்காக பூசுவார்கள். மாட்டின் கழுத்தில் நெல்லித் தழை, மா இலை,தேங்காய் மூடி, கரும்பு, வாழைப் பழம், துண்டு, போன்றவற்றை கட்டுவார்கள். மாட்டு கொம்பில் அவரவருக்குப் பிடித்த கட்சி வண்ணத்தை வரைவர்.

சூடம் ஏத்தி, மாடுகளுக்கு சாதம் ஊட்டி பொடிசுங்க எல்லாம் 'ஹோ...'ன்னு சத்தம் பொடும். தட்டை தட்டிக் கொண்டு "பொங்கலோ... பொங்கல் மாட்டு பொங்கல்" ன்னு எல்லோரும் உற்சாகமாய் குரல் எழுப்புவார்கள். கன்றுக் குட்டிங்கயெல்லாம் மாலைய போட்டோன்ன சும்மா... துள்ளிக் குதிக்கும் பாருங்க 'காண கண் கோடி வெண்டும்'.

மாட்டை தெய்வமா மதிக்கும் மனிதர்கள்.

சரி விஷயத்திற்கு வருவோம்... மாட்டின் கழுத்தில் தேங்காய் மூடி, கரும்பு, வாழைப் பழம், துண்டு, போன்றவற்றை எடுக்க சின்ன சின்ன பசங்க எப்போதும் மாட்டுக் கொட்டாயை சுத்தி சுத்தி வருவாங்க. கோயிலுக்கு போறவரைக்கு நாம அதை காப்பாத்திடனும். மதியத்திற்கு மேல் நல்ல நேரம் பார்த்து மாட்டை கோயிலுக்கு அழைச்சுக்கிட்டு போவாங்க. சாமி கும்பிட்டுவிட்டு மாட்டை அவிழ்த்து விட்டால் போச்சு, மாடு 'ஜலாங்...ஜலாங்...ஜலக்கு... ஜலாங்' ன்னூ பின்னங்கால் பிடறியில் பட ஓட ஆரம்பிக்கும். அங்க இருக்கு... உங்க சாமர்த்தியம். மாட்டை பிடிக்க...!

இவனுங்க பண்ற அளப்பரையில மாடு பிச்சிகிட்டு போயிடும். பயலுவ துரத்த... மாடு மிரள...ன்னு ஊரே களோபரமாயிடும். அப்புறமென்ன... மாடு 'ம்ம்ம்மே....' ன்னு அடி வயித்தில் கத்திக்கிட்டு எவன் வூட்டு கொல்லையிலாவது புகுந்து ஓடும். மாட்டுக்காரன் மாட்ட கானாம... ராவு முழுசும் லாந்தர வச்சி தேடுவான். ஒரு பாடு *'ஒழுத்தாமுட்ட' வுடவும் தயங்க மாட்டான்.

  • ஆபாசமான வசவு

மதுரை மாவட்டங்களில் நடப்பது போன்று பெரிய அளவில் 'மஞ்சு விரட்டு' (ஜல்லிக்கட்டு)யெல்லாம் எங்கள் மாவட்டத்தில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். சில இடங்களில் சாலைகளில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெறும்.

வேப்பமரத்தின் கிளைகளை ஒடித்து கூராக சீவி, அதற்கு மஞ்சள் தடவி வீட்டின் வெளியே நாலு மூலைகளிலும் அடிப்பார்கள். இதனால் 'காத்து கருப்பு' அண்டாது என்பது ஒரு நம்பிக்கை. கூடவே பல கிளைகளைக் கொண்ட 'கள்ளிச் செடியை' வீட்டின் தாழ்வாரத்தில் தொங்கவிடுவார்கள். அது கண் திருஷ்டியைப் போக்கும்.

மாலையில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம், சாக்கு ஓட்டப் பந்தயம், ஸ்லோ சைக்கிள் ரேஸ், பலுன் உடைத்தல், உரி அடி போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தி சிறுவர்களுக்கு பரிசுகள் கொடுப்பார்கள்.

இனி கன்னி பொங்கல்.

கன்னி பொங்கல்.

பெருவாரியான இடங்களில் இதை காணும் பொங்கல் என்று சொல்லுவார்கள்.

எங்கள் ஊரில் அன்று எல்லோரும் பார்த்து...பார்த்துதான் நடந்து போகனும். பின்ன மத்தவங்க மேல 'மஞ்ச தண்ணி' ஊத்தற நாளாச்சே. அதுவும் 'கொண்டா(ன்) கொடுத்தான்' (மாமன் வகையறா) என்றால் போச்சு. தூக்கிக் கொண்டு போய் மாடு, தண்ணி குடிக்கும் கழனி தொட்டில (எப்படி நாத்தம் அடிக்கும் தெரியுமில...?) வச்சி முக்கி எடுத்திடுவாங்க.

காலையிலேயே மஞ்சல கரைச்சி கூட கொஞ்சம் சுண்ணாம்பும் கலந்து அண்டாவுல வச்சிடுவாங்க. அப்புரமென்ன... போறவுங்க வரவுங்க மேல தண்ணிய கலந்து ஊத்த வேண்டியதுதான். இது வட இந்தியாவுல் நடக்கிற ஹோலி பண்டிகை போலதான். மஞ்சலோட சுண்ணாம்பும் கலந்தா தண்ணி செகப்பா மாறிடும். அன்னைக்கு யாரும் வெள்ளை சட்டை போடுறதில்ல.

இந்த விளையாட்டுக்கு எங்க அப்பா என்னை எப்போதும் அனுமதித்ததில்லை. நிறைய சம்பவங்களில் நான் தின்னையில் அமர்ந்து பார்வையிடும் பார்வையாளன் மட்டுமே.

மஞ்ச தண்ணி விளையாட்டு முடிந்ததும், இளவட்டம் எல்லாம் மம்புட்டியை எடுத்துக்கிட்டு கெலம்பிடும், தெருவ சுத்தம் பண்ண. மாலையில் சாமி புறப்பாடு இருப்பதால் வேலையில் எல்லோரும் ஆர்வம் காட்டுவர். தெரு இடையில ஓடுற மரக்கிளைகளை அப்புரப்படுத்தி, சாலையை சுத்தம் செய்து தோரணங்கள் கட்டி, கலர் கலராய் வண்ணத்தாள்கள் தொங்க விட்டு ஊரே அமர்க்களப் படும். இதையெல்லாம் ஊரில் உள்ள இளைஞர் அணி செய்யும்.

மாலை நேரம் நெருங்க...நெருங்க கன்னிப் பெண்கள் எல்லோரும் குழுவாகப் பிரிந்து வட்ட... வட்டமாக நின்று 'கும்மி' அடிப்பர்கள். இதற்கு வயதான பொண்கள் உதவி செய்வார்கள். ஊரா.. ஊரான் தோட்டத்தில ஒருத்தன் போட்டனாம் வெள்ளரிக்கா வெள்ளரிக்கா வாசத்துக்கு வந்தானாம் வெள்ளைகாரன் காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டனா(ம்) வெள்ளைக் காரன் தந்தானே...தந்தானே தான தந்தா தந்தானே...

கும்மி பாட்டு நம்மை வசீகரிக்கச் செய்யும். இதைத் தொடர்ந்து சாமி புறப்பாடு இருக்கும்.

ஏழு கன்னிமார்

காலையிலேயே நாதசுவரம் மேளக் கச்சேரி தொடங்கிவிடும். தலைஞாயிரு, செம்பொன்னார்கோயில் போன்ற ஊர்களில் இருந்து பார்ட்டிகள் வருவார்கள். காலையில் ஆரப்பித்தார்களானால் இரவு 8மணி வரை அடி பின்னியெடுத்து விடுவார்கள்.

ஏழு கன்னிமார் இதுதான் எங்க சாமி (குல தெய்வம் தனி. அது ஐய்யனார்). கருவரையில் ஏழு கன்னிமாருடன் இரண்டு குதிரை வீரனும் இருப்பார்கள். சுமார் 1000 வருடத்திற்கு முந்தையது கன்னியம்மன். இங்கு சுத்த சைவம் மட்டுமே படைக்கப்படும்.

வீதி உலாவிற்கு சாமி வெளியே வருவதில்லை. தீ சட்டி எடுத்துக்கொண்டு பூசாரிதான் வருவார். கூடவே ஒரு சாட்டைக் காரனும் உண்டு. காவேரிக்குச் சென்று கரகம் தூக்கிக் கொண்டு ஓவ்வொரு வீட்டின் வழியாகவும் சாமி வரும். எல்லோரது வீட்டிலும் 'மாவிலக்கு' போடுவார்கள் கூட்டம் சேர..சேர மேளத்தின் அடி பெரிதாகும். அடி பெரிதாக... பெரிதாக சாமியாடுபவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும். அதில் நிச்சயம் ஏழு கன்னி பெண்கள் இருப்பார்கள்.

மாலை 4 மணிக்கு புறப்பட்ட சாமி, கோயிலுக்கு வர இரவு 7 மணிக்குமேல் ஆகிவிடும். சாட்டைக்காரன் சாட்டையை சுழற்றிக் கொண்டு வர... கூட்டம் 'ஹோ... வென ஒதுங்கும். முன்பெல்லாம் சிறு சிறு குற்றங்களுக்கு கூட சாட்டையடி, புளிய மிளாரால் விளாசுதல் போன்ற தண்டனைகள் இருந்துள்ளன.

பூசாரி தீ சட்டியை ஏந்தி வர... மற்ற சாமிவந்தவுங்க (சாமியாடிகள்) சூடத்தை கை, வாயில் ஏந்தி சாமியாடுவார்கள். அவர்களை சாதாரண நிலைக்கு கொண்டுவர பூசாரி விபூதி பூசுவார். பின்னர் ஊர்சார்பாக பூசாரியிடம் குறி கேட்கப் படும். கோயிலை விஸ்தரிப்பது, கோயில் குளத்தை செப்பனிடுவது போன்று கேள்விகள் கேட்கப்படும். எல்லாம் பொது நன்மைவாய்ந்ததாக இருக்கும்.

இந்த நேரத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற சிலர் 'மைக்'கை பிடித்துக் கொண்டு ரவுசு விடுவார்கள். "மேலத்தெரு தங்கராசு எங்கயிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும். அவுங்கவுங்க மாவிலக்கு சட்டியை பார்த்து வாங்கவும். சட்டியை பார்த்து எடுத்துக்கிட்டு போங்க, மாத்தி எடுத்துக்கிட்டு போவாதிங்கா... சாமிக்கு வழிய விட்டு ஒதுங்கி நில்லுங்க..." அப்படிங்கிற ரேஞ்சில போட்டு தாக்கிக் கொண்டு இருப்பார்கள்.

சாமி கோயில நெருங்க..நெருங்க ஓட்டம் அதிகமா இருக்கும். முத்தாய்ப்பா பூசாரி திடு..திடுப்புன்னு ஓட ஆரம்பிச்சிடுவாரு. ஓடிய பூசாரி கோயில் கிணற்றில் தொபுக்கடின்னு குதிச்சிடுவாரு!. இதை தெரிந்தே ஆட்கள் கிணற்றில் தயராய் இருப்பார்கள். முப்பது அடி கிணறு, தண்ணியும் பாதியளவிற்கு இருக்கும். பூசாரி கிணற்றில் குதித்த வேகத்தில் மேலே வருவார். அப்படியே அவர தூக்கிக் கொள்வார்கள். இது ஒரு சடங்காகவே பல வருடங்கள் கடைப் பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இப்போதெல்லாம் கிணற்றில் விழும் பழக்கம் இல்லை.

பிறகு பூசாரி கையில விபூதி வாங்க கூட்டம் அலைமோதும். ஒவ்வொரு வீட்டிற்கும் கோயிலிலுருந்து தனித்தனியே பிராசாதங்களை நாட்டாண்மைக் காரர்கள் கொண்டுவந்து தருவார்கள்.

இப்படியாக 'பொங்கல் விழா' தமிழனின் பாரம்பரியத்துடன் இனிதே நிறைவு பெறும்.

சொல்லப் போனால் திருவிழாக்கள் தான் மனிதர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. குடும்பத்தையும், உறவுகளையும், நட்பையும் சீரான பாதையில் கொண்டு செல்கிறது. கிராமத்தையும் கிராம மக்களின் ஒற்றுமையையும் போற்றி பாதுகாப்பதில் இத்தகைய திருவிழாக்கள் தன் முக்கியப் பங்காற்றுகிறது. இது நகரத்திற்கும் பொருந்தும்.

நன்றி! பொங்கலோ... பொங்கல்!

தோழன் மபா தமிழன் வீதி www.tamilanveethi.blogspot.com

பாராட்டு[தொகு]

மபா! பொங்கலைப் பற்றி மிகவும் சுவைபட எழுதியுள்ளீர்கள். இருப்பினும் கட்டுரையின் நடை வலைப்பூவுக்குரியது; கலைக்களஞ்சிய நடை அல்ல. எனவே சற்று நடையை மாற்றி அமைத்திட வேண்டுகிறேன்.

மேலும் உங்கள் பெயரிலோ அல்லது வேறு ஏதாகிலும் பிடித்தமான பெயரிலோ பயனர் பதிகை செய்து கொள்ளுங்களேன்!

நன்றி. --பரிதிமதி 17:31, 26 ஜனவரி 2010 (UTC)

மபாவை அழைக்க முயல்கிறேன். :) கிறித்தவர்களும் பொப்பிலிப் பொங்கல் என்ற முறையில் சிலுவை நட்டு வழிபடுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அறிந்தவர்கள் யாரேனும் அது குறித்த கட்டுரை எழுதி முதன்மைக் கட்டுரையாக இங்கே சேருங்களேன். மேலும், சமயம் சாராத தமிழ்த் திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் குறித்த கட்டுரை ஏதேனும் உள்ளதா? வார்ப்புருவையம் சேர்க்க வேன்டுகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:42, 5 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

சிறப்புக் கட்டுரை பரிந்துரை[தொகு]

இக்கட்டுரையை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரையாக்க வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:29, 1 சனவரி 2013 (UTC)[பதிலளி]

கட்டுரையின் பகுதிகள் நீக்கம்?[தொகு]

இந்தக் கட்டுரையிலிருந்து, ஒரு படமும், தைப் பொங்கல் வரலாறு, உழவர் திருநாள் போன்ற பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. காரணம் புரியவில்லை.--கலை (பேச்சு) 16:18, 7 சனவரி 2017 (UTC)[பதிலளி]

மீள்வித்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 21:45, 7 சனவரி 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தைப்பொங்கல்&oldid=3862951" இலிருந்து மீள்விக்கப்பட்டது