பெருந்துறை சோழீசுவரர் கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சோழீஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | வாகைப்பெருந்துறை |
பெயர்: | சோழீஸ்வரர் திருக்கோயில் |
ஆங்கிலம்: | பெருந்துறை |
அமைவிடம் | |
ஊர்: | பெருந்துறை |
மாவட்டம்: | ஈரோடு |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
சோழீஸ்வரன் கோயில் என்பது இந்தியாவி்ன், தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டம், பெருந்துறையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
தொன்மம்
[தொகு]கோச்செங்கட்சோழன் எனும் சோழமன்னன் முற்பிறவியில் திருவானைக்காவில் சிலந்தியாக பிறவி எடுத்திருந்தான். சிலந்தி தன் ஞானத்தால், வெண்நாவல் மரத்தடியில் வீற்றிருந்த ஈசனுக்கு தன்னை அறியாமலேயே சிவசேவை செய்து வந்தது. சிவபெருமான் மீது இலை, சருகு, தூசி விழாமல் இருக்க தன் வழக்கப்படி வலை பின்னி வைத்தது. பழம்பிறப்பில் செய்த தவப்பயனால் வெள்ளை யானை ஒன்றும் தினமும் தன் தும்பிக்கையில் நீர் கொண்டு வந்து சிவனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆராதித்து வந்தது. தனது வழிபாட்டிற்கு இடையூறாகத் தொங்கிக் கொண்டிருந்த வலையை இழுத்துப் போட்டு பிய்த்து எறிந்தது யானை. தினம் தினம் சிலந்தி வலை பின்ன, யானை பிய்த்துப் போட, ஒரு நாள் கோபம் மிக அதிகம் கொண்ட சிலந்தி, யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து கடித்து வதைத்தது. வலியைத் தாங்க முடியாமல் யானை தும்பிக்கையைத் தூக்கித் தூக்கி அடித்து சிலந்தியைக் கொன்று விட்டு தானும் உயிர் துறந்தது.
சிலந்தி பின்னிய வலை மிகப் பெரிய சிவ சேவையாக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சோழகுலம் செழிக்க அரசனுக்கு மகனாகப் பிறக்கும் பெரும் பேற்றினை வழங்கினார், ஈசன். சோழ மன்னன் சுபதேவர்- அரசி கமலவதி மணிவயிற்றில் பிற்காலத்தில் 74 யானைப் புகா மாடக் கோயில்களைக் கட்டிய சிவநேசச் செல்வன் உதித்தான். பிள்ளைப் பேறு நடக்கவிருந்த சமயத்தில் ஜோதிட வல்லுநர் ஒருவர், ‘‘இன்னும் ஒரு மணி நேரம் கழித்து குழந்தை பிறந்தால் மூன்று உலகங்களையும் கட்டியாளப் போகும் சோழகுல விளக்காகத் திகழ்வான்’’ என்று கூறியதைக் கேட்ட கமலவதி தேவியார், ‘‘அப்படியானால் என் கால்களை மேலே தூக்கி, என்னைத் தலைகீழாகக் கட்டிப் போடுங்கள்’’ என்று வேண்டிக் கொண்டாள். ஒரு நாழிகை கழித்து பிள்ளை பிறந்தது; ஆனால் தாய் இறந்தாள். இருவர் நிலையும் தலைகீழாக மாறியதால் பெரிய உயிர் பிரிய, சிறிய உயிரின் கண்களுக்கு ரத்தம் அதிகமாகப் பாய, செக்கச் சிவந்த கண்களுடன் பிறந்தது குழந்தை. அதனால் செங்கட்சோழன் என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டனர்.
சிவபக்தியில் சிறந்து விளங்கிய செங்கட்சோழன் பேராற்றலுடன் திகழ்ந்தான். சேரமான் கணைக்கால் இரும் பொறைக்கும் இவனுக்கும் இடையே பகை முற்றியது. முதலில் நடந்த போரில் கழுமலம் என்ற இடத்தில் சேரன், சோழனை வென்று சிறைபிடித்தான். இரண்டாவதாக பொன்கலூர் நாட்டுத் திருப்பூரிலும் பூந்துறை நாட்டு பெருந்துறையிலும் நடந்த போரில் பெருந்துறை கோட்டையில் சேரனை, சோழன் வென்று சிறைபிடித்து குடவாயில் கோட்டம் எனும் கும்பகோணத்தில் சிறை வைத்தான். சிறையில், சேரன் காவலாளியிடம் குடிக்க நீர் கேட்க, அவனை அலட்சியப்படுத்தும் வகையில், காவலன் வெகு நேரம் கழித்து கொண்டு வர, அதைக் குடிக்க மறுத்தான் சேரன். பிறகு தன் அவைப் புலவரும் உயிர்த் தோழனும் ஆன பொய்கையாருக்கு, நடந்த சம்பவத்தை பாடலாக எழுதி அனுப்பிவிட்டு ஒரு சொட்டு நீரோ, ஒரு பருக்கை உணவோகூட எடுத்துக் கொள்ளாமல், தன் உயிரை விட மானத்தைப் பெரிதாக எண்ணி, பட்டினி கிடந்து, சிறையில் நாட்களைக் கழித்தான். பல நாட்கள் கழித்து, தன்னை வந்தடைந்த அந்தப் பாடலைப் படித்த பொய்கையார், நண்பன் சேரனின் நிலையறிந்து துடித்துப் போனார். சேரன் இருக்கின்றானா, இறந்துவிட்டானா எனத் தெரியாத நிலைமையில் சோழனைச் சென்று சந்திக்க மேலும் சில நாட்கள் ஆகிவிட்டன. சோழனை வேண்டிக் கேட்டுக் கொண்டாலும் சேரனை விடுதலை செய்ய மாட்டான். கொலை பட்டினி இருக்கும் சேரன் மீது துளியும் ஈவு இரக்கம் காட்டாதவன், புலவர் சொல்லியா கேட்கப் போகின்றான் என்று தயங்கினார். ஆனால், புகழுக்கு மயங்காதோர் உண்டோ என்ற கருத்து மனதில் தோன்ற, திருப்பூர் மற்றும் பெருந்துறை போர்க்களத்தில் சோழனின் போர்த்திறத்தை வர்ணித்து ‘களவழி நாற்பது’ எனும் தலைப்பில் 41 (நாற்பதல்ல) வெண்பாக்களை இயற்றினார். பெரும்பாலும் யானைப் போரையே மிகவும் சிறப்பித்துப் பாடியுள்ளார். பொய்கையார், அந்த நூலை அரசவையில் சோழன் முன் பாடி அரங்கேற்றினார். பாடல் முடிந்த உடன் சேரனின் சிறைக்கதவுகள் திறக்கப்பட்டன. சோழனின் மனக்கதவுகளை திறக்க வைத்த அற்புதம் வாய்ந்த பாடல்கள் அவை!
புலவர் பெருந்தகையால் பெருந்துறை கோட்டையில் நடந்த போர் தமிழக மாந்தர்களின் பெருந்தன்மையை மணக்க வைக்கின்றது. இன்றும் பெருந்துறை அந்த கோட்டையின் சுவடி மறையாமல் காத்து நிற்கின்றது. பேருந்து நிலையத்தைச் சுற்றி கோட்டை முனியப்பன் கோயில், கோட்டை பெருமாள் கோயில், கோட்டை அனுமந்தராயன் கோயில், கோட்டை ஈஸ்வரன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில் என பல கோயில்கள் நிறைந்து, மறைந்து போன கோட்டையை மக்கள் மனதில் மறையாமல் நிலை நிறுத்தி வருகின்றன. கோட்டை ஈஸ்வரன் கோயிலின் முன்புறம் அகன்ற திறந்த வெளியுடன் அமைந்துள்ளது. ஆலய தீபஸ்தம்பத்தில் விநாயகர், பசுவிற்கு உணவளிக்கும் ஈசன், லிங்கத்திற்கு பால் சொரியும் பசு, திரிசூலம் ஆகிய சிற்பங்களை தரிசிக்கலாம். ஆலயத்துள் இறைவன், இறைவி, முருகப்பெருமான், ஐயப்பன் மற்றும் சிவாலய தெய்வங்கள் அவரவர் சந்நதியில் வீற்றருள்கின்றனர். அர்த்த மண்டபத்தில் ஆதிகாலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிலாரூப திருமேனிகளும் வில்வமரத்தடியில் ஒரு பழைய லிங்கத் திருமேனியும் தரிசிக்கலாம். இத்தல ஈசனான சோழீஸ்வரரும் இறைவி வேதநாயகியும் இவ்வூரினையும் தம்மை வந்து தரிசிப்போரையும் அருள்மாரி பொழிந்து காத்து வருகின்றனர். பொய்கையாரால் நட்பு எனும் பூ மலர்ந்து சேரனின் உயிர் காத்த தலமாகிய பெருந்துறை வந்து ஈசனையும் அம்மையையும் தரிசித்து வளம் பெறலாம். ஈரோட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவில், பெருந்துறையில் கோட்டை பேருந்து நிலையத்தின் மிக அருகாமையிலேயே இந்த சோழீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]கோயில் அமைவிடம் கோயில் அமைவிடம்https://www.google.co.in/maps/place/Soleshwaran+Temple,+National+Hwy+47,+Perundurai,+Tamil+Nadu+638052/@11.27404,77.578969,17z/data=!4m8!1m2!2m1!1stemples+Perundurai,+Tamil+Nadu+638052!3m4!1s0x3ba96d4330ea0465:0xcb6c43d737630ad1!8m2!3d11.2741941!4d77.5811953