புத்தாண்டுத் தீர்மானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புத்தாண்டுத் தீர்மானம் என்பது புத்தாண்டின்போது, ஒருவர் புதிய ஆண்டில் ஒருவர் ஏதவது ஒன்றைச் செய்வதாகவோ கடைப்பிடிப்பதாகவோ உறுதி எடுத்துக்கொள்வதைக் குறிக்கும். பொதுவாக மேற்கு நாடுகளிலேயே இது ஒரு மரபாக வழங்கி வந்தது எனினும், தற்காலத்தில் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இவ்வாறு புத்தாண்டுத் தீர்மானம் எடுத்துக்கொள்வது பரவலாக இடம்பெற்று வருகிறது.[1] புத்தாண்டுத் தீர்மானங்கள் பொதுவாக உறுதி எடுத்துக்கொள்பவர் தனது பழக்க வழக்கங்களையோ இயல்புகளையோ மேம்படுத்திக் கொள்வது, ஏதாவது நல்ல செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றோடு தொடர்புடையனவாகவே அமைகின்றன.

தோற்றம்[தொகு]

20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கப் பகுதியைச் சேர்ந்த புத்தாண்டுத் தீர்மான அஞ்சல் அட்டை.

புத்தாண்டுத் தீர்மானங்களை எடுக்கும் வழக்கம் எப்போது தோன்றியது என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பபிலோனியாவில் தமது கடவுளுக்கு முன் இவ்வாறான உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது. அவர்களுடைய தீர்மானங்கள், இரவலாக வாங்கிய பொருட்களைத் திரும்பக் கொடுப்பது வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவது போன்றவையாக அமைந்திருந்தன.[2]

உரோமர்கள், புத்தாண்டின் முதல் மாதமான சனவரிக்கு உரிய சானுசு என்னும் கடவுளுக்கு இவ்வாறான உறுதிமொழிகளைக் கொடுத்தனர்.[3] ஐரோப்பாவின் நடுக்காலத்தில், பிரபுக்கள் ஒவ்வொரு நத்தார் பண்டிகைக்குப் பின்னரும் பிரபுகளுக்கு உரிய நெறிமுறைகளின் படி நடப்பதாக உறுதி எடுத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது.[2]

பொதுவான தீர்மானங்கள்[தொகு]

தற்காலத்தில் பெரும்பாலான புத்தாண்டுத் தீர்மானங்கள் பின்வரும் வகைகளுக்குள் அடங்குகின்றன.[4][5]

 • உடல் நலத்தைப் பேணுதல்: உடல் நலத்துக்கு உகந்த உணவு வகைகளை உட்கொள்ளல், நிறையைக் குறைத்தல், உடற்பயிற்சியில் ஈடுபடல், குடிவகைகள் எடுத்துக்கொள்வதைக் குறைத்தல், புகை பிடிப்பதை நிறுத்துதல் போன்றவை.
 • உள நலத்தை மேம்படுத்தல்: ஆக்க வழியில் சிந்தித்தல், கூடுதலாகச் சிரித்தல், வாழ்க்கையைச் சிறப்பாக அனுபவித்தல்.
 • நிதி நிலைமையை மேம்படுத்தல்: கடன்களில் இருந்து மீளுதல், சேமித்தல், சிறிய முதலீடுகளைச் செய்தல்.
 • தொழில் மேம்பாடு: தற்போதைய வேலையை மேலும் திறம்படச் செய்தல், மேம்பட்ட புதிய வேலையில் சேருதல், சொந்தமாகத் தொழில் தொடங்குதல்.
 • கல்வி மேம்பாடு: கூடிய புள்ளிகள் பெறுதல், புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளல், அடிக்கடி படித்தல், நூல்கள் வாசித்தல், திறன்களை வளர்த்துக்கொள்ளல்.
 • தனிப்பட்ட மேம்பாடு: தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ளல், நேர மேலாண்மை, கூடிய அளவு பிறரில் தங்கியிருப்பதைத் தவிர்த்தல், தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைத்தல்.
 • பிறருக்கு உதவுதல்: தேவையானவர்களுக்கு வேண்டியவற்றை ஈதல், சமூகத் தொண்டில் ஈடுபடல்.
 • சமுதாயத் திறன்களை வளர்த்துக்கொள்ளல்: பிறருடன் சிறந்த முறையில் பழகுதல், சமுதாய அறிவாண்மையை மேம்படுத்துதல்.
 • புதிய நண்பர்களைப் பெற்றுக்கொள்ளல்.
 • குடும்பத்தினருடன் கூடிய நேரம் செலவுசெய்தல்.
 • சொந்த வாழ்க்கையை நிலைப்படுத்திக்கொள்ளல்.
 • புதிய பண்பாடுகளை அறிதல்.
 • கூடுதலாக இறைவனை வணங்குதல்.

குறிப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]