புதுக்கோட்டை சட்டமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுக்கோட்டை சட்டமன்றம் (Pudukkottai Legislative Council) என்பது 1924 முதல் 1948 வரை புதுக்கோட்டை சமஸ்தானத்தில் செயல்பட்ட ஒரு சட்டமன்றம் ஆகும். இந்த சட்டமன்றமானது 50 உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தது. இதில் 15 பேர் நியமன உறுப்பினர்கள். சட்டமன்றமானது மாநிலத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் பற்றி விவாதித்ததோடு, அவை குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியது. 1948 ஆம் ஆண்டு சட்டமன்றம் கலைக்கப்பட்டு, இந்திய ஒன்றியத்துடன் சமஸ்தானம் இணைக்கப்பட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டது.

தோற்றம் மற்றும் வரலாறு[தொகு]

1850 ஆம் ஆண்டு வரை, புதுக்கோட்டை அரசால் இயற்றப்பட்ட சட்டங்களும் அரச பிரகடனங்களுமே நடைமுறையில் இருந்தன, பிரித்தானிய இந்திய சட்டங்கள் பயன்பாட்டில் இருக்கவில்லை.[1] 1850 முதல், பிரித்தானிய இந்திய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1859 ஆம் ஆண்டில் உரிமையியல் சட்டங்களும், 1868 இல் இந்திய தண்டனைச் சட்டங்கள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. 1876 ஆம் ஆண்டு பதிவு சட்டங்கள் இயற்றப்பட்டன, அதே ஆண்டில் காவல்துறைப் படை ஒன்று உருவாக்கப்பட்டது.

1904 ஆம் ஆண்டு வரை, திவானால் மசோதாக்கள் தயாரிக்கப்பட்டு அவை, உதவி திவான், உரிமையியல் நீதிபதி, மேல்முறையீட்டு நீதிபதிகள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோரின் கருத்துருக்கு அனுப்பட்டன.[2] மசோதாக்கள் மன்னரின் ஒப்புதலுக்குப் பிறகு சட்டங்களாக மாறின. 1904 ஆம் ஆண்டில், சட்ட வரைவுப் பணிகள் சட்டக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. 1915 ஆம் ஆண்டு தனது வெள்ளி விழாவில், மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் அரசு வழக்கறிஞர், பிரதிநிதிகள் குழுவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் மற்றும் அரசரால் நியமிக்கப்பட்ட இரண்டு பேர் ஆகியோரைக் கொண்ட ஒரு ஆலோசனைக் குழுவை உருவாக்கினார். குழுவானாது முற்றிலும் இயல்பான ஆலோசனைகளையே வழங்கியது வேறுவகையான ஆலோசனைகளை அளிக்கவில்லை.

1902 இல் புதுக்கோட்டையின் முதல் சட்டமன்றமானது அதற்காக நியமிக்கப்பட்ட அதன் முதல் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதற்காக புதுக்கோட்டை அரசு நிர்வாகத்தின் பல்வேறு துறைகளில் இருந்து 30 உறுப்பினர்கள் வரை நியமனம் செய்யப்பட்டனர். இந்த சட்டமன்றமானது முந்தைய ஆண்டில் இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்களையும் நடவடிக்கைகளையும் விவாதித்தது, அதன்படி திட்டங்களை வகுத்தது. ஒவ்வொரு உறுப்பினருக்குமான பதவிக்காலமானது ஓர் ஆண்டாக இருந்தது, பின்னர் அது மூன்று ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது. 1907 இல், சட்டமன்றத்தின் 30 உறுப்பினர்களில் 18 உறுப்பினர்களுக்கு தேர்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது 1913 இல் 13 ஆக குறைக்கப்பட்டது ஆனால் இதை புதுக்கோட்டை அரசர் 1916 இல் 25 ஆக அதிகரித்ததார்.

1924 ஆம் ஆண்டில் புதுக்கோட்டைச் சட்டமன்றம் அமைக்கப்பட்டது. அதன் முதல் அமர்வானது 1924 செப்டம்பர் 29 அன்று திவான் ரகுநாத பல்லவராயரால், சென்னை மாகாண சுதேச ஆட்சிப்பகுதி முகமையின் பிரித்தானிய முகவரான சி. டபிள்யூ. ஈ. கோட்டன் முன்னிலையில் துவக்கப்பட்டது.[3] பிரதிநிதிகள் சபை மற்றும் ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகளை சட்டமன்றம் ஏற்றுக்கொண்டது.[3] சட்டமன்றத்தில் 50 உறுப்பினர்கள் இருந்தனர், அவர்களில் 35 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர், மற்றவர்கள் அரசரால் நியமிக்கப்பட்டனர்.[3] சட்டமன்றத்தில் 1927இல் பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது.[3]

தலைவர்[தொகு]

சட்டமன்றக் கூட்டங்களுக்கு திவான் அல்லது உதவி திவான் தலைமை தாங்கினர். இருவரும் இல்லாத சமயத்தில் திவானால் நியமிக்கப்பட்ட துணைத் தலைவரின் தலைமையின்கீழ் கூட்டம் நடைபெற்றது.

தொகுதிகள்[தொகு]

1924 ஆம் ஆண்டின் புதுக்கோட்டைச் சட்டமன்றத் தீர்மானத்தின் படி, "புதுக்கோட்டைச் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையானது நாற்பதுக்கு குறையாததாகவும், அறுபதை தாண்டாததாகவும் இருக்கவேண்டும். அதில் எழுபது விழுக்காடு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவும் மீதமுள்ளவர்கள் நியமன உறுப்பினர்களாக இருப்பர்."

தொகுதிகள் வகை இடங்களின் எண்ணிக்கை
புதுக்கோட்டை நகரம் பொது 4
புதுக்கோட்டை கோட்டம் பொது 1
வல்லநாடு கோட்டம் பொது 2
ஆலங்குடி கோட்டம் பொது 2
வரப்பூர் கோட்டம் பொது 2
கரம்பக்குடி கோட்டம் பொது 2
பொன்னமராவதி கோட்டம் பொது 2
கரையூர் கோட்டம் பொது 2
திருமயம் கோட்டம் பொது 2
கீழநிலை கோட்டம் பொது 2
செங்கீரை கோட்டம் பொது 2
நீர்பழநி கோட்டம் பொது 2
கீரனூர் கோட்டம் பொது 2
குடுமியான்மலை கோட்டம் பொது 2
குன்றாண்டார்கோயில் கோட்டம் பொது 2
முகமதியர் தொகுதி தனி 1
கிருத்தவர் தொகுதி தனி 1

வாக்காளர்கள்[தொகு]

புதுக்கோட்டை சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் நபர் 21 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும் மற்றும் இந்திய குற்றவியல் பிரிவு IX ஏ வின்கீழ் குற்றவாளியாக இருக்கக்கூடாது. தேர்தல் துஷ்பிரயோக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வாக்களிக்க இயலாது. வாக்காளர்கள் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்களாகவும், முந்தைய ஆண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் இங்கு வசித்தவர்களாக இருக்க வேண்டும். வாக்காளர் பின்வரும் வருமான அளவுகோலைக் கொண்டவராக இருக்க வேண்டியது அவசியம்:

  • நில உரிமையாளர்கள் மற்றும் இனாம் நிலங்களில் பயன்பெறுபவர்கள் குறைந்தது ஆண்டுக்கு மூன்று ரூபாய் சொத்துவரி செலுத்துபவராக இருக்கவேண்டும்.
  • வீட்டு உரிமையாளர்களில் ஆண்டுக்கு குறைந்தது இரண்டு ரூபாய் வீட்டு வரி செலுத்துபவராக இருக்கவேண்டும்.
  • வேளாண் அல்லாத வேலைகளில் பணியாற்றுபவர்கள் மாதம் ரூபாய் 250 க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களாக இருக்க வேண்டும்.
  • மாதம் 25 ரூபாய்க்கு மேல் அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள்

எந்தவொரு இந்திய அல்லது பிரித்தானிய பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகள்.

குறிப்புகள்[தொகு]

  1. Ayyar 1938, p 402
  2. Ayyar 1938, p 403
  3. 3.0 3.1 3.2 3.3 Ayyar 1938, p 404

மேற்கோள்கள்[தொகு]

  • Ayyar, K. R. Venkatarama (1938). A Manual of the Pudukkottai State. 1. Sri Brihadambal State Press.