பீட்டர் பவுல் ரூபென்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட்டர் பவுல் ரூபென்ஸ்
Peter Paul Rubens.jpg
தேசியம்ஃபிளம்மியர்
அறியப்படுவதுஓவியம்
அரசியல் இயக்கம்பரோக்

பீட்டர் பவுல் ரூபென்ஸ் (Peter Paul Rubens - ஜூன் 28, 1577 – மே 30, 1640) மிகவும் திறமை வாய்ந்த 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிளெமிய பரோக் ஓவியரும், பகட்டுத் தன்மை கொண்ட பரோக் பாணியின் முன்னணி ஆதரவாளரும் ஆவார். பரோக் பாணி இயக்கம், நிறம், புலன் நுகர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கியது. இவர் சீர்திருத்தத்துக்கு எதிரான பலிபீட ஓவியங்கள், உருவப்படங்கள், நிலத்தோற்றங்கள், தொன்மங்கள் சார்ந்த வரலாற்று ஓவியங்கள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றவர்.

ஐரோப்பா முழுவதிலும் இருந்த பிரபுக்களாலும், ஓவியச் சேகரிப்பாளராலும் விரும்பப்பட்ட ஓவியங்களை உருவாக்கும் பெரிய கலைக் கூடமொன்றை நடத்தி வந்ததோடு, ரூபென்ஸ் ஒரு மனித நோக்கு அறிஞரும், ஓவியச் சேகரிப்பாளரும், இரு இராஜதந்திரியும் ஆவார். இவர் ஸ்பெயினின் அரசன் ஆறாவது பிலிப்பிடம் இருந்தும், இங்கிலாந்து அரசன் முதலாம் சார்லஸ் இடமிருந்தும் பிரபுப் பட்டம் பெற்றார்.

வரலாறு[தொகு]

தொடக்க காலம்[தொகு]

ரூபென்ஸ் வெஸ்ட்பாலியாவில் உள்ள சீகென் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜான் ரூபென்ஸ் (Jan Rubens), தாயார் மரியா பைப்பெலிங்க்ஸ் (Maria Pypelincks). ஸ்பானிய நெதர்லாந்தை ஆல்பாவின் (Alba) டியூக் ஆண்ட காலத்தில் இடம் பெற்ற புரட்டஸ்தாந்தர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குப் பயந்து, ஒரு கால்வினியரான பீட்டர் ரூபென்சின் தந்தையும், தாயும் 1568 ஆம் ஆண்டில், கொலோனுக்குத் தப்பி ஓடினர். ஜான் ரூபென்ஸ், சக்சனியின் அன்னாவுக்குச் சட்ட ஆலோசகராகவும், காதலியாகவும் ஆனார். ஒரேஞ்சின் முதலாம் வில்லியத்தின் இரண்டாம் மனைவியான அன்னாவின் சீகென்னில் இருந்த அரண்மனையிலேயே ஜான் ரூபென்ஸ் 1570ல் தங்கினார். அன்னாவுடனான தொடர்புக்காக ஜானுக்குச் சிறைத்தண்டனை கிடைத்தது. 1577ல் பீட்டர் பவுல் ரூபென்ஸ் பிறந்தார். அடுத்த ஆண்டில், குடும்பம் கொலோனுக்குத் திரும்பியது. ஜான் ரூபென்ஸ் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1589 ஆம் ஆண்டில், பீட்டர் ரூபென்ஸ் அவரது தாயாருடன் ஆன்ட்வேர்புக்குச் சென்றார். அங்கே பீட்டர் ஒரு கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டார். பீட்டர் ரூபென்சின் ஆக்கங்களில் மதம் முக்கிய இடத்தை வகித்ததுடன், பின்னாளில், இவர் கத்தோலிக்க சீர்திருத்த எதிர்ப்பு ஓவியப் பாணியின் முன்னணி ஓவியர்களில் ஒருவராகவும் விளங்கினார்.