பிளீஸ்ட்டோனாக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளீஸ்ட்டோனாக்ஸ்
எசுபார்தாவின் மன்னர்
ஆட்சிக்காலம்458 – 409 BC
முன்னையவர்Pleistarchus
பின்னையவர்Pausanias
பிறப்புஎசுபார்த்தா, பண்டைக் கிரேக்கம்
இறப்புகிமு 409
எசுபார்த்தா, பண்டைக் கிரேக்கம்

பிளீஸ்ட்டோனாக்ஸ் (Pleistoanax, கிரேக்கம்: Πλειστοάναξ ) என்பவர் கிமு 458 முதல் 409 வரை எசுபார்த்தாவின் அகியாட் பரம்பையின் மன்னராக இருந்தவர் ஆவார். கிரேக்கத்தின் மீதான மேலாதிக்கத்திற்காக ஏதென்சுக்கு எதிரான வன்முறை மோதல்களின் போது எசுபார்த்தாவில் அமைதிப் பிரிவின் தலைவராக இவர் இருந்தார்.

கிமு 458 இல் பாசேனியசின் மகன் பிளீஸ்ட்டோனாக்ஸ் மிகச் சிறுவனாக இருந்தார். எனவே அவரது மாமா நிகோமெடிஸ் அரசப் பிரதிநிதியாக செயல்பட்டார். முதல் பெலோபொன்னேசியப் போரின் (கிமு 460-445) ஒரு பகுதியாக கிமு 446 இல் ஏதென்சு மீதான படையெடுப்பு இவரது முதல் பதிவுசெய்யப்பட்ட போர் நடவடிக்கையாகும். ஆனால் அதில் இவர் போர்புரிவதற்கு பதிலாக பெரிக்கிள்சுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்தார். அது முப்பது ஆண்டு அமைதி ஒப்பந்தமாக மாறியது. இருப்பினும், பிளீஸ்ட்டோனாக்ஸ் ஏதென்சைக் கைப்பற்றத் தவறியதற்காக எசுபார்த்தாவில் வழக்குத் தொடரப்பட்டு, தண்டனையைத் தவிர்ப்பதற்காக அர்காடியாவிற்கு நாடுகடத்தப்பட்டார். இவர் அடுத்த 18 ஆண்டுகள் லைகாயோன் மலையில் உள்ள சியுசின் புனித நிலத்தில் வாழ்ந்தார்.

இரண்டாம் பெலோபொன்னேசியப் போரில் (கிமு 431-404) ஏதென்சுக்கு எதிராக எசுபார்த்தா மீண்டும் போரில் ஈடுபட்டிருந்தபோது, 427 இல் இவரது போட்டியாளரான இரண்டாம் ஆர்க்கிடாமசின் மரணம் இவர் எசுபார்த்தாவுக்குத் திரும்புவதற்கு உதவியாக ஆனது. பிளீஸ்ட்டோனாக்ஸ் ஏதென்சுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கான தனது முயற்சிகளை மீண்டும் தொடங்கினார். இது இறுதியாக கிமு 421 இல் ( நிசியாஸ் அமைதி உடன்பாடாக) உருவானது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளீஸ்ட்டோனாக்ஸ்&oldid=3513777" இலிருந்து மீள்விக்கப்பட்டது