நிக்கியாஸ் அமைதி உடன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கியாஸ் அமைதி உடன்பாடு
இந்த உடன்பாடு ஏதெனியன் தளபதி நிக்கியாஸ் பெயரால் அழைக்கப்படுகிறது
ஒப்பந்த வகைஅமைதி உடன்பாடு
கையெழுத்திட்டதுகிமு 421 மார்ச்
கையெழுத்திட்டோர்நிக்கியாஸ்
மன்னர் பிளீஸ்ட்டோனாக்ஸ்
தரப்புகள்ஏதென்சு
எசுபார்த்தா
மொழிபண்டைய கிரேக்கம்

நிக்கியாஸ் அமைதி உடன்பாடு (Peace of Nicias) என்பது கிரேக்க நகர அரசுகளான ஏதென்ஸ் மற்றும் எசுபார்த்தா இடையே கிமு 421 மார்ச்சில் உண்டான ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் ஆகும். இது பெலோபொன்னேசியப் போரின் முதல் கட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.[1]

கிமு 425 இல், எசுபார்த்தன்கள் பைலோஸ் மற்றும் ஸ்ப்பாக்ட்டீரியா சமர்களில் தோல்வியடைந்தனர். இதன் விளைவாக ஏதெனியர்களிடம் 292 எசுபார்த்தன் போர்க் கைதிகள் பிடிபட்டனர். கைதிகளில் குறைந்தது 120 பேர் எசுபார்த்தாவின் எசுபார்டியேட்டுகள் ஆவர். அவர்கள் கிமு 424 இல் இந்த ஒப்பந்ததின் வழியாக மீட்கப்பட்டனர். எசுபார்த்தன் தளபதி பிரசிடாஸ் ஆம்ப்பிபோலிசைக் கைப்பற்றியபோது. அதே ஆண்டில், ஏதெனியர்கள் டெலியம் சமரில் போயோட்டியாவில் பெரும் தோல்வி அடைந்தனர். மேலும் கிமு 422 இல், அந்த நகரத்தை திரும்பக் கைப்பற்றும் முயற்சியில் அவர்கள் மீண்டும் ஆம்போலிஸ் சமரில் தோற்கடிக்கப்பட்டனர். முன்னணி எசுபார்த்தன் தளபதியான பிரசிடாஸ் மற்றும் ஏதென்சின் முன்னணி அரசியல்வாதியான கிளியோன் ஆகிய இருவரும் ஆம்பிபோலிஸ் சமரில் இறந்தனர். அதனால் இரு தரப்பினரும் சோர்வடைந்து அமைதி ஒப்பந்தத்துக்குத் தயாராகினர்.

எசுபார்த்தாவின் அரசர் பிளீஸ்ட்டோனாக்ஸ் மற்றும் ஏதெனியன் தளபதி நிசியாஸ் ஆகியோரால் பேச்சுவார்த்தைகள் நிகழ்த்தப்பட்டன. நிசீயா மற்றும் பிளாட்டீயாவைத் தவிர அனைத்துப் பகுதிகளும் போருக்கு முன் யார் வசம் இருந்தனவோ அதே நிலைக்குத் கொண்டுவருவது என்ற மிகவும் இணக்கமான முடிவு எட்டப்பட்டது. ஏதென்சு நிசீயாவின் கட்டுப்பாட்டையும், தீப்ஸ் பிளாட்டியாவின் கட்டுப்பாட்டையும் தக்க வைத்துக் கொள்ளும். ஆம்பிபோலிஸ் ஏதென்சுக்கும், பைலோஸ் எசுபார்த்தாவின் வசமும் திரும்பும். ஸ்பேக்டீரியாவில் பிடிபட்ட எசுபார்த்தன் கைதிகளை ஏதெனியர்கள் விடுவிப்பார்கள். அதேபோல ஏதெனியன் போர்க் கைதிகளும் திருப்பி அனுப்பப்படுவர். கிரேக்கம் முழுவதும் உள்ள கோயில்கள் அனைத்து நகரத்தின் பக்தர்களுக்காகவும் திறக்கப்படும். மேலும் தெல்பியில் உள்ள ஆரக்கிள் அதன் தன்னாட்சியை மீண்டும் பெறும். அரிசுடடைடீசு காலத்திலிருந்து ஏதென்சு எந்தெந்தெந்த அரசுகளிடமிருந்து கப்பம் பெற்றுவந்ததோ அந்த அரசுகளிடமிருந்து தொடர்ந்து கப்பம் வசூலிக்கலாம், என்றாலும் ஏதென்சினால் அந்த அரசுகளை மீன்டும் தன் கூட்டாளிகளாக மாற்ற இயலவில்லை. எலட்கள் கிளர்ச்சி செய்தால் எசுபார்த்தாவின் உதவிக்கு வர ஏதென்சு ஒப்புக்கொண்டது. எசுபார்த்தாவின் கூட்டாளிகளில் சிலர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டனர். ஆனால் போயோட்டியா, கொரிந்து, எலிஸ், மெகாரா, ஆம்ப்பிபோலிஸ் ஆகிய அரசுகள் ஒப்பந்தத்தை எதிர்த்தன.

ஒவ்வொரு தரப்பிலிருந்தும் பதினேழு பிரதிநிதிகள் ஐம்பது ஆண்டுகள் நீடிக்கும் அமைதி ஒப்பந்தத்தை நிலைநிறுத்த உறுதிமொழி எடுத்தனர். எசுபார்த்தன் பிரதிநிதிகளில் மன்னர்கள் பிளீஸ்டோனாக்ஸ் மற்றும் இரண்டாம் அகிஸ் ஆகியோரும், பிளீஸ்டோலாஸ், டமகெட்டஸ், சியோனிஸ், மெட்டாஜெனெஸ், அகாந்தஸ், டெய்தஸ், இஸ்காகோரஸ், பிலோசரிடாஸ், ஜீக்சிடாஸ், ஆன்டிபஸ், டெல்லிஸ், அல்சிண்டாஸ், எம்பீடியாஸ், மெனாஸ் லாஃபிலஸ் ஆகியோர். ஏதென்சின் பிரதிநிதிகளான லாம்பன், இஸ்த்மோனிகஸ், நிசியாஸ், லாச்ஸ், யூதிடெமஸ், பிரோக்கிள்ஸ், பைடோடோரஸ், ஹாக்னான், மைர்டிலஸ், த்ராசைக்கிள்ஸ், தியாகனெஸ், அரிஸ்டோக்ரேட்ஸ், ஐயோல்சியஸ், டிமோக்ரேட்ஸ், லியோன், லாமச்சஸ், டெமோஸ்தீனஸ் ஆகியோர் அமைதியை நிலைநாட்ட உறுதிமொழி எடுத்தனர். இந்த உடன்படிக்கை தொடக்கத்திலிருந்தே மீறப்பட்டது. மேலும் பல தோல்விகளுக்குப் பிறகு, கிமு 414 இல் முறையாக ஒப்பந்தம் கைவிடப்பட்டது. பெலோபொன்னேசியன் போர் மீண்டும் இரண்டாம் கட்டத்தின் வாயிலாக தொடங்கியது.[2]

குறிப்புகள்[தொகு]

  1. Thucydides, History of the Peloponnesian War, Book 5, 13–24.
  2. Donald Kagan, The Peloponnesian War, 2004, 197–209.