உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன்
Franz Ernst Neumann
பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன்.
உருவப்படம் மூலம், கார்ல் ஸ்டேப்பெக் (1886)
பிறப்பு(1798-09-11)11 செப்டம்பர் 1798
ஜோவகிம்ஸ்தல் , புனித உரோமைப் பேரரசு
இறப்பு23 மே 1895(1895-05-23) (அகவை 96)
கோனிஸ்பெர்க், செருமானியப் பேரரசு
வாழிடம் செருமனி
தேசியம் செருமனி
துறைஇயற்பியலாளர், கனிப்பொருளியல்
பணியிடங்கள்கோனிஸ்பெர்க் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பெர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்கிரித்துவர் சாமுவேல் வெயிஸ்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
வோல்தேமர் வொய்க்ட், ஆல்பிரட் கிளேப்ச், குசுத்தாவ் கிர்க்காஃப், பிரெடெரிக் ஹென்ரிக் ஆல்பர்ட் வான்கேரின்
அறியப்படுவதுநியூமனின் சட்டம்
விருதுகள்காப்லே பதக்கம் (1886)

பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன் (Franz Ernst Neumann(1798, செப்டம்பர் 111895, மே 23) இவர், செருமனியின் பிரபல கணிதவியலாளரும், இயற்பியலாளருமாக அறியப்படுகிறார். இயற்பியல், மற்றும் கணிதத் துறையை தனது மகத்தான ஆய்வுகள் மூலம் வளப்படுத்திய இவர், கணிதம், ஒளியியல், மின்னியல், படிகவியல் உள்ளிட்ட பல்வேறு களங்களில் குறிப்பிடத்தக்க பங்களித்தவர்.[1]

சுயசரிதை[தொகு]

நியூமன், 1798 ஆம் ஆண்டு, செப்டம்பர் 11 இல், செருமனியின் தலைநகர் பெர்லின் அருகே உள்ள ஜோவகிம்ஸ்தல் நகரில் பிறந்தார். நியூமேனின் தந்தை விவசாயியாவார், அவரின் சிறு வயதிலேயே அவரது அம்மா பிரிந்து சென்றுவிட அதன்பிறகு, தாத்தா வீட்டில் வளர்ந்தார். கணிதத்தில் சிறந்து விளங்கிய எர்ன்ஸ்ட் நியூமன், அக்காலத்தில் அடிக்கடி போர் நடந்ததால் கல்வி தடைபட்டது. இந்நிலையில், படிப்பை 16 வயதிலேயே நிறுத்தியவர், அந்நாட்டு இராணுவத்தில் இணைந்தார். 1815 ஆம் ஆண்டில் நெப்போலியனுக்கு எதிராக, நூறு நாட்கள் தன்னார்வமுடன் பணியாற்றிய நியூமன், போரில் காயம் அடைந்ததால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட்டார். இதற்கிடையில், ஒரு தீ விபத்தில் குடும்ப சொத்துகள் நாசமானதால், பண நெருக்கடியும் ஏற்பட்டது. அதை பொருட்படுத்தாத நியூமன் பெர்லின் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சேர்ந்து, படிப்பைத் தொடர்ந்தார்.[2]

கல்வி[தொகு]

அவரது தந்தையின் விருப்பப்படி இறையியல் படிப்பில் சேர்ந்த நியூமன், கணிதம், மற்றும் அறிவியல் மீதான அதீத ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர், ஜெனா பல்கலைக்கழகத்தில் கனிமவியல் (Mineralogy), மற்றும் படிகவியல் பயின்றார். மேலும், படிகவியல் குறித்து ஆராய்ந்தவர், 1828 ஆம் ஆண்டு, அசாதாரண சூழலில் கோனிக்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தார். தந்தையின் மறைவால் ஓராண்டு காலம் படிப்பு தடைபட்டது. பிறகு, படிகவியலில் ஆய்வுகள் மேற்கொண்டு, கண்டறிந்த விடயங்களை கட்டுரையாக எழுதி வெளியிட்ட எர்ன்ஸ்ட் நியூமன், மீண்டும் பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முனைவர் பட்டம் பெற்றார். இவரது ஆராய்ச்சிகளும், கட்டுரைகளும் இவருக்கு கோனிக்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் 1929 இல் விரிவுரையாளர் பணியைப் பெற்றுத் தந்து, கனிமவியல், இயற்பியல் துறைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[3]

கலந்தாய்வுகள்[தொகு]

1834 இல், கோனிக்ஸ்பெர்க் பல்கலைக்கழக, மருத்துவ ஆலோசகராக நியமிக்கப்பட்ட நியூமன், அங்கு மாணவர்களுக்கு ஆராய்ச்சி முறைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் பிரபல விஞ்ஞானி "கார்ல் கஸ்டாவ் யாக்கோபு ஜக்கோபி" (Carl Gustav Jacob Jacobi) என்பவருடன் இணைந்து கணித - இயற்பியல் பயிலரங்குகள் நடத்தினார். பின்னாளில், அவரது மனைவி வழியில் கிடைத்த சொத்துமூலம், தனது வீட்டின் அருகே இயற்பியல் ஆய்வுக்கூடம் ஒன்றை அமைத்துக்கொண்டார். அவ்வேளையில் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆய்வுக்கூடம் இல்லாததால், இவரது ஆய்வுக்கூடத்தையே மாணவர்களும் பயன்படுத்திக் கொண்டனர்.[4]

கண்டுபிடிப்புகள்[தொகு]

படிகவியல் குறித்த இவரது ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் ‘நியூமேன்ஸ் கோட்பாடு’ (Newman's Theory) என குறிப்பிடப்படுகிறது. உலோகக் கலவைகளின் வெப்பநிலைகள், ஒளி அலைக் கோட்பாடு, இரட்டை விலகல் விதிகள் மற்றும் ஒளியியல், கணித ஆய்வுகளில் ஈடுபட்ட இவர், மூலக்கூற்றின் வெப்ப விதிகளை உருவாக்கினார். இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் செயல்பாட்டில் மின் தூண்டலின் கணித கோட்பாட்டை முதன்முதலாக வரையறுத்த 'பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் நியூமன்' மின்னோட்டத்தின் தூண்டலுக்கான கணித விதிகள், ஒளியியல் பண்புகளைக் கண்டறிந்தார். பல விடயங்கள் குறித்து ஆராய்ந்த எர்ன்ஸ்ட் நியூமன், தனது ஆராய்ச்சிகள் பற்றி பெரும்பாலும் விரிவுரைகளாகவே வழங்கிய அவர் அவற்றை விளக்கி கட்டுரைகளாக எழுதியது வெகு குறைவு. வெப்ப இயந்திர கோட்பாட்டைத் தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர் என இவரது மகனும் விஞ்ஞானியுமான "கார்ல் நியூமன்" (Carl Neumann(1832, மே 7 – 1925, மார்ச்சு 27) குறிப்பிட்டுள்ளார்.[5]

பணிகள்[தொகு]

நியூமன், தொடர்ச்சியாக பேசில் (Basel (1863), டுபிங்கன் (Tübingen (1865) மற்றும் லைப்சிக் (1868) உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி கணிதம், ஒளியியல், மின்னியல், படிகவியல் உள்ளிட்ட பல்வேறு களங்களில் தடம் பதித்தார். மேலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காக டுபிங்கன், ஜெனிவா பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கின.[6]

இறப்பு[தொகு]

1876 இல் அவரது பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிரான்சிஸ் எர்ன்ஸ்ட் கிருத்துவ நியூமன், 1895 ஆம் ஆண்டு, மே 23 ஆம் நாளில் தனது 96 வது அகவையில் (தற்போதுள்ள கலினிங்ராட் (Kaliningrad, உருசியா) கோனிஸ்பெர்க் (Königsberg) என்னும் மாநகரில் இறந்தார்.[7]

புற இணைப்புகள்[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Franz Ernst Neumann". www-history.mcs.st-and.ac.uk (ஆங்கிலம்) - May 2000. பார்க்கப்பட்ட நாள் 2016-09-12.
  2. "Franz Ernst Neumann". www.britannica.com (ஆங்கிலம்) -2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
  3. "Franz Ernst Neumann". www.chemeurope.com (ஆங்கிலம்) - 1997-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-19.
  4. "FRANZ ERNST NEUMANN". central.gutenberg.org (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-19.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Neumann, Franz Ernst". www.encyclopedia.com (ஆங்கிலம்) - 2008. பார்க்கப்பட்ட நாள் 2016-09-19.
  6. "Neumann, Franz Ernst Works". en.wikisource.org (ஆங்கிலம்). 29 August 2015, at 15:59. பார்க்கப்பட்ட நாள் 2016-09-19. {{cite web}}: Check date values in: |date= (help)
  7. "Franz Ernst Christian Neumann - bibliography". www.whonamedit.com (ஆங்கிலம்) - 1994 - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-19.