பாலோன் தி'ஓர் (1956-2009)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிச்செல் பிளாட்டினி, மூன்று முறை தொடர்ச்சியாக பாலோன் தி'ஓர் விருது வென்றவர்.

பாலோன் தி'ஓர் (Ballon d'Or,French pronunciation: ​[balɔ̃ dɔʁ], "Golden Ball" - தங்கப் பந்து) என்பது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் காற்பந்து வீரர்களுக்கான விருதாகும்; இது பொதுவாக ஆண்டின் சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரர் என்று குறிக்கப்பட்டது. விருது வழங்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் என்று வாக்களிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படும் வீரருக்கு இது வழங்கப்படுகிறது. ஃப்ரென்ச் கால்பந்துப் பத்திரிகையின் எழுத்தாளரான கேப்ரியெல் ஆனோட் என்பவரால் உருவாக்கப்பட்டது; அவர் தமது சக பத்திரிகையாளர்களை 1956-ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரர் எவரென வாக்களிக்கக் கூறினார். முதல் விருதை வென்றவர் பிளாக்பூல் கால்பந்துக் கழக (Blackpool F.C.) வீரரான ஸ்டான்லி மேத்யூ (Stanley Mathews) ஆவார். [1][2]

ஆரம்பத்தில், ஐரோப்பிய கால்பந்துக் கழகங்களில் விளையாடும் ஐரோப்பிய வீரர்களுக்கு மட்டுமே பத்திரைகையாளர்களால் வாக்களிக்க முடியும்; இதனால் டீகோ மரடோனா (ஐரோப்பிய கழகங்களில் விளையாடினார், ஆனால் ஐரோப்பியர் அல்லர்) மற்றும் பெலே (ஐரோப்பிய கழகங்களிலும் விளையாடவில்லை, ஐரோப்பியரும் இல்லை) போன்றோர் இவ்விருதுக்குத் தகுதி பெறவில்லை. 1995-ஆம் ஆண்டில் விருதுக்கான விதிமுறைகள் மாற்றப்பட்டு ஐரோப்பிய கால்பந்துக் கழகங்களில் விளையாடும் அனைவரும் இவ்விருதுக்குத் தகுதியானவர்களாக்கப்பட்டனர். இவ்விருதை வென்ற முதல் ஐரோப்பியர் அல்லாதவர் ஏசி மிலான் அணிவீரரான ஜார்ஜ் வியா ஆவார்; விதிமுறைகள் மாற்றப்பட்ட அவ்வாண்டே இவர் விருதைக் கைப்பற்றினார். 2007-ஆம் ஆண்டில் உலகின் எந்த வீரரும் போட்டியிடும்படி விதிமுறைகள் மாற்றப்பட்டன; வாக்களிக்கும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டுவரை 52 பத்திரிகையாளர்கள் வாக்களித்தனர், 2007-ஆம் ஆண்டுமுதல் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 96 பத்திரிகையாளர்கள் ஐந்து சிறந்த வீரர்களுக்கு வாக்களித்தனர்.

மூன்று வீரர்கள் இவ்விருதை மூன்று முறை வென்றுள்ளனர்: யோகன் கிரையொஃப், மிச்செல் பிளாட்டினி, மார்க்கோ வான் பாஸ்டன். மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று முறை வென்ற ஒரே வீரர் மிச்செல் பிளாட்டினி ஆவார்; 1983-லிருந்து 1985-ஆம் ஆண்டுவரை மூன்று விருதுகளையும் இவர் வென்றார். ஐரோப்பியர் அல்லாதோர் விருதுக்குப் பரிந்துரைக்கப்படலாம் என்று விதிமுறை வந்த பிறகு, இவ்விருதை வென்ற முதல் பிரேசில் நாட்டுவீரர் ரொனால்டோ ஆவார். டச்சு மற்றும் செருமானிய வீரர்களால் பாலோன் தி'ஓர் ஏழு முறை வெல்லப்பட்டுள்ளது. இத்தாலிய கழகங்களான யுவென்டசு கால்பந்துக் கழகம் மற்றும் ஏசி மிலான் ஆகியவை முறையே அதிக பாலோன் தி'ஓர் வெற்றியாளர்களை கொண்டிருந்தன; அவற்றுக்காக விளையாடும் போது ஆறு வீரர்கள் எட்டுமுறை இவ்விருதை வென்றிருக்கின்றனர். கடைசியாக பாலோன் தி'ஓர் விருது வென்றவர் லியோனல் மெஸ்ஸி ஆவார்; இவ்விருது பெரும் மூன்றாவது அர்ஜென்டினியர் ஆவார், ஆனால் முதன்முதலில் அர்ஜென்டினா குடிமகனாக வெல்பவர் இவரே.

2010-ஆம் ஆண்டில் பாலோன் தி'ஓர் விருதும் ஃபிஃபா ஆண்டின் உலகளவில் சிறந்த வீரர் விருதும் ஒன்றாக்கப்பட்டது; அதன்பிறகு, தங்கப் பந்து (பிஃபா) விருது ஒவ்வோராண்டும் உலகின் சிறந்த ஆண் கால்பந்து வீரருக்கு வழங்கப்படுகிறது. யூஈஎஃப்ஏ-வினால் 2011-ஆம் ஆண்டு யூஈஎஃப்ஏ ஐரோப்பாவின் சிறந்த வீரர் உருவாக்கப்பட்டது; ஃபிஃபா சிறந்த வீரர் விருதோடு இணைக்கப்பட்ட பாலோன் தி'ஓர் விருதின் பழம்பெருமையை தக்கவைக்கும் வண்ணம் இப்புதிய விருது கொண்டுவரப்பட்டது.

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலோன்_தி%27ஓர்_(1956-2009)&oldid=3669387" இருந்து மீள்விக்கப்பட்டது