பாய் குருதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாய் குருதாஸ் (Bhai Gurdas) ( (1551 – 25 ஆகஸ்ட் 1636) என்றழைக்கப்படும் இவர், பஞ்சாபி மொழிக்கவிஞராகவும், சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்தத்திற்கு அரிய திறவுகோல் தந்தவராகவும் அறியப்படுகிறார். மேலும், பத்து சீக்கிய குருக்களில் நான்கு குருக்களுக்கு உறுதுணையாகவும், சீடராகவும் இருந்த குருதாஸ், சீக்கிய சமய முக்கிய பிரமுகராகவும், பிரசங்கியாகவும் இருந்தவர்.[1]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

சீக்கியர்களின் மூன்றாவது குருவான குரு அமர்தாசின், மூன்று சகோதரர்களில் கடை சகோதரரான 'இஷர்தாஸ்' (Bhai Ishar Das) என்பவருக்கும், தாய் 'மாதா ஜீவனி' (Jivani) என்பவருக்கும், பஞ்சாபின் தரண் தரண் மாவட்டத்தில் உள்ள சீக்கியர்களின் தலைநகர் என்றழைக்கப்படும் கோவிந்த்வால் (Goindval) எனும் ஊரில் கி.பி 1551-ம் ஆண்டு பிறந்த பாய் குருதாஸ், தனது மூன்றாவது அகவையிலேயே (1554-ல்) தாயை இழந்தார். பின்னாளில், தன் 12-வது வயதில் (1563-ல்) தந்தை இஷர்தாசும்' இறந்துவிட தந்தையின் தமையனான குரு அமர் தாஸ் பாதுகாப்பில் வளர்ந்தார். குரு அமர்தாசு முன்னரே 1546 ல் 'காடூர்' எனும் சிற்றூரில் இருந்து கோவிந்தவாலுக்கு தன் குரு பீடத்தை மாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

சீட வாழ்க்கை[தொகு]

குரு அமர் தாசின் கீழ் வளர்ந்த குருதாஸ், குரு பீடத்தில் கீர்த்தனமும், பஜனையும், ஜபமும், புராணக் கதைகளும், பக்தர்கள், ஞானிகள் வரலாறு பற்றிய பிரவசனங்கள், வாழிபாடும் சமூக சேவைகளையும் பார்த்து கொண்டும் மற்றும் அனுபவித்து கொண்டும் அவற்றில் பங்கெடுத்து கொண்டும் வளர்ந்தார். இரண்டாவது குருவான குரு அங்கது தேவ் சம காலத்தில் பிறந்த குருதாஸ், குரு அமர் தாஸ், குரு ராம் தாஸ், குரு அர்ஜன், குரு அர்கோவிந்த் ஆகியோர்களுக்கு உற்ற துணையாகவும், சீடனாகவும் வாழ்ந்தவர்.[3]

கவிஞர்[தொகு]

ஐம்பெரும் குருக்களின் நேர் பார்வையில் வளர்ந்த பாய் குருதாஸ், ஆன்மிக நாட்டத்தோடு இளமையில் சிறப்பாக பயிற்சி பெற்றிருந்தார். அவர் தொண்டு செய்த குருமார்கள் அமர்தாசு, ராம்தாசு, மற்றும் அர்சூன் தேவ் போன்ற சிறந்த கவிஞர்களாக இருந்த இம்மூவரும், இசையிலும், மென்கலைகளிலும் தேர்ந்தவர்களாக இருந்ததினால்,அவர்களது நெருங்கிய தொடர்பால் பாய் குருதாஸ் ஒரு சிறந்த கவியாகவும் உருவெடுத்தார். பாரதப் பாரம்பரிய சமய இலக்கியங்கள் நாட்டு பாடல்கள், நாட்டுப்புற கலைகள் என பலவற்றையும் கற்றுத்தேர்ந்த குருதாசுக்கு, வயது வந்ததும், குருக்கள் அவருக்கு பல முக்கியமான பொறுப்புகளை அளித்தனர்.[4]

பங்களிப்பு[தொகு]

சீக்கியர்களின் மிக புனித தலமான அம்ரித்சர், அத்தலத்தில் முதன்முதலாக வெட்டப்பட்டது திருக்குளமே. அதன் பெயரையே பின்னாளில் அங்கெழுந்த நகருக்கும் சூட்டப்பட்டது. அக்குளத்திற்கு பின் குரு மகால் மன்றமான குருவின் மாளிகை எழுந்தது. இப்பணிகள் அனைத்திலும் பாய் குருதாசுக்கு பெரும் பங்குண்டு. குரு அமர் தாசின் தலைமையில் திருக்குளத்தை வெட்டு முன் அத்திட்ட்த்தை பரிசீலிக்க, 'பாய் ஜேத்தா' என்பவர் தலைமையில் நியமித்தார். அக்குழுவில் 21 வயதேயான பாய் குருதாசும் ஓர் உறுப்பினராக இருந்ததாக கருதப்படுகிறது.[4]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Bhai GURDAS (1551-1636)". www.beautifulmosque.com. 1986 இம் மூலத்தில் இருந்து 2019-02-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190205152212/http://www.sikh-history.com/sikhhist/gurus/gurdas.html. பார்த்த நாள்: 2016-07-14. 
  2. "Bhai GURDAS". www.discoversikhism.com. 2013-2016 இம் மூலத்தில் இருந்து 2016-04-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160428204545/http://discoversikhism.com/sikhs/bhai_gurdas.html. பார்த்த நாள்: 2016-07-15. 
  3. "Guru Tegh Bahadur ji (1621 - 1675 )". www.sikh-history.com. 1963 இம் மூலத்தில் இருந்து 2015-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151021055103/http://www.sikh-history.com/sikhhist/gurus/nanak9.html. பார்த்த நாள்: 2016-07-15. 
  4. 4.0 4.1 "The city of Amritsar". www.sikh-history.com. 2016 இம் மூலத்தில் இருந்து 2016-10-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161025004502/http://www.sikh-history.com/sikhhist/events/amritsar.html. பார்த்த நாள்: 2016-07-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்_குருதாஸ்&oldid=3562803" இருந்து மீள்விக்கப்பட்டது