பாக்கித்தானில் இராணுவப் புரட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

14 ஆகஸ்டு 1947 அன்று பிரித்தானிய இந்தியாவிடமிருந்து பாக்கித்தான் விடுதலைப் பெற்றது. ஒன்பது ஆண்டுகள் கழித்து பாக்கித்தானின் அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு, 23 மார்ச் 1956 அன்று அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதிபர் ஆட்சி நடைமுறைக்கு வந்த 29 மாதங்களில் முதல் அரசியல் குழப்பம் அரங்கேறியது. பாக்கித்தான் அதிபராக இருந்த இஸ்கந்தர் மிர்சா இராணுவ தளபதிகளுடன் கூட்டுச் சேர்ந்து 7 அக்டோபர் 1957 அன்று பாக்கித்தானில் அவசரநிலை பிரகடனம் செய்ததுடன், அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டதுடன், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் கலைக்கப்பட்டது.

இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியவர்கள்[தொகு]

அயூப் கான்[தொகு]

27 அக்டோபர் 1958 அன்று ஏறப்பட்ட இராணுவப் புரட்சி மூலம் இராணுவ தலைமை தளபதி அயூப் கான், தன்னை பாக்கித்தான் அதிபராக அறிவித்துக் கொண்டதுடன், இஸ்கந்தர் மிர்சாவை அதிபர் பதவியிலிருந்து நீக்கினார்.[1] பாக்கித்தானில் முதல் இராணுவ ஆட்சி 44 மாதங்கள் நீடித்தது. அயூப் கான் ஆட்சிக் காலத்தில் 1965இல் இந்தியா மீது போர் தொடுத்து, படுதோல்வி கண்டது. மார்ச் 1969 வரையில், 10 ஆண்டுகள் நான்கு மாதங்கள் அயூப் கான் ஆட்சியில் இருந்தார்.

யாகியா கான்[தொகு]

அயூப் கான் அதிபர் பதவியிலிருந்து விலகியதும், 25 மார்ச் 1969 அன்று இராணுவ தலைமை தளபதியாக இருந்த யாக்யா கான் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.[2] யாக்யா கான் ஆட்சியில் 1971 இந்திய-பாக்கித்தான் போர் மூண்டது. இப்போரில் இந்தியா ஆதரவுடன் கிழக்கு பாக்கித்தான், சேக் முஜிபுர் ரகுமான் தலைமையில் வங்காளதேசம் எனும் தனி நாடு நிறுவப்பட்டது.

போரில் பாக்கித்தான் இராணுவம் தோற்றதால் யாக்யா கான் 20 டிசம்பர் 1971 அன்று ஆட்சியை பாக்கித்தான் மக்கள் கட்சி தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோவிடம் ஒப்படைத்தார். புட்டோ 1973இல் பாக்கித்தான் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைத்தார். அதிபர் ஆட்சி முறையில் இருந்து பிரதமர் ஆட்சி முறைக்கு பாக்கித்தான் மாறியது.

ஜியா-உல்-ஹக்[தொகு]

5 சூலை 1977 அன்று இராணுவப் புரட்சி மூலம் பிரதமர் சுல்பிக்கர் அலி புட்டோவை, தேர்தல் மோசடி குற்றச்சாட்டில் பாக்கித்தான் இராணுவ தளபதி ஜியா உல் ஹக் கைது செய்து, புட்டோவிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்.[3] 4 ஏப்ரல் 1979 அன்று புட்டோ தூக்கிலிடப்பட்டார். பின் பாக்கித்தானை ஒன்பது ஆண்டுகள் 11 மாதங்கள் ஆண்ட இராணுவ தளபதி ஜியா உல் ஹக் 17 ஆகஸ்டு 1988 அன்று விமான விபத்தில் உயிரிழந்தார்.

பெர்வேஸ் முஷாரப்[தொகு]

12 அக்டோபர் 1999 அன்று இராணுவப் புரட்சி மூலம், பாக்கித்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை வெளியேற்றி விட்டு இராணுவ தளபதி பெர்வேஸ் முஷாரஃப் 20 சூன் 2001 அன்று தன்னை பாக்கித்தான் தலைவராக அறிவித்துக் கொண்டார்.[4]பெர்வேஸ் முஷாரஃப் பாக்கித்தான் இராணுவ தளபதியாக இருந்த போது நடைபெற்ற 1999 கார்கில் போரில் பாக்கித்தான் படுதோல்வி கண்டது. 2002இல் பெர்வேஸ் முஷாரஃப் பாக்கித்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து, தன்னை பாக்கித்தான் அதிபராகவும், தலைமை இராணுவ தளபதியாகவும் அறிவித்துக் கொண்டு 18 ஆகத்து 2008 வரை ஆட்சி செய்தார்.

முஷாரப் 2007ல் தேர்தலில் போட்டியிட முயன்றதை பாக்கித்தான் உச்ச நீதிமன்றம் எதிர்த்தது. எனவே முஷாரப் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையே பதவியை விட்டு நீக்கினார். பின்னர் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய முஷாரப் 18 ஆகஸ்டு 2008 அன்று அரசியல் நிர்பந்தம் காரணமாக அதிபர் பதவியிலிருந்து விலகினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hassan Abbas (2005). Pakistan's drift into extremism: Allah, the army, and America's war on terror. M.E. Sharpe. பக். 16–40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7656-1496-4. https://archive.org/details/pakistansdriftin00hass/page/16. 
  2. Yahya Khan, president of Pakistan
  3. Hyman, Anthony; Ghayur, Muhammed; Kaushik, Naresh (1989). Pakistan, Zia and After--. New Delhi: Abhinav Publications. பக். 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7017-253-5. https://books.google.com/books?id=cjPgESaC-7sC&pg=PA30. "Operation Fair Play went ahead … as the clock struck midnight [on 4 July 1977] ... [Later,] General Zia [told Bhutto] that Bhutto along with other political leaders of both the ruling and opposition parties would be taken into what he called 'protective custody'." 
  4. "World: South Asia : Pakistan arm". BBC News. 1999-10-12. http://news.bbc.co.uk/2/hi/south_asia/472511.stm.