பரங்கிப்பேட்டை வரதராஜப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோயில் என்பது கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயிலாகும்.[1] இக்கோயில் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

தொன்மம்[தொகு]

கஜேந்திரமோட்சம் பெற்ற தலமாக இது கருதப்படுகிறது. திருவயீந்தபுரம் தேவநாதசுவாமியின் விருப்பமான தலம் என்று கூறப்படுகிறது.

சிறப்புகள்[தொகு]

நெற்றிக் கண் என்பது சிவனின் அம்சம். ஆனால் இங்கு கருவறையில் உள்ள பெருமாளுக்கு நெற்றிக் கண் உள்ளது. இதனால் இருவராகிய ஒருவர் என்ற திருப்பெயர் இத்தல இறைவனுக்கு உண்டு. இத்தல இறைவன் சீதேவி, பூதேவி உடனுறைபவராக உள்ளார். சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை கோடைக்காலத்தில் மூலவருக்குத் தைலக் காப்பு சாற்றப்படுகிறது. இத்தல தீர்த்தம் கஜேந்திர புஷ்கரணி என்று அழைக்கபடுகிறது.

வழிபாடு[தொகு]

அத்த நாளன்று பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. சித்திரைத்திங்கள் பிறப்பன்று கருடசேவை நடத்தப்படுகிறது. அந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். சித்திரை முழுநிலவன்று பெருமாளின் உற்சவம் மாடவீதிகளின் வழியாக நடக்கும். வைகாசி மாதம் சஷ்டி திதியில் வசந்த உற்சவம் நடக்கும். வைகாசி மாதம் துவங்கி ஆனி, ஆடி மாதங்கள் என 48 நாட்கள் கோயிலில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யபடுகிறது. ஆடிப் பூரத்தன்று கஜேந்திர வரதருக்கு சிறப்பு திருமஞ்சனம், கோகுலாஷ்டமி அன்று சுவாமி புறப்பாடு, அன்று மாலை உறியடி உற்சவம் போன்றவை நடைபெறுகின்றன.

புரட்டாசி மாதம் முழுக்க இக்கோயிலின் மூலவர் திருப்பதி வேங்கடவன் கோலத்தில் மஞ்சள் பட்டு உடுத்தி காட்சியளிப்பார். இந்த மாதம் திருப்பதி பெருமாளுக்கு செய்யப்படும் அனைத்து சேவைகளும் இவருக்கு செய்யப்படும். நவராத்திரி உற்சவத்தில் பத்ததாம் நாள் கஜேந்திர வரதர் குதிரை வாகனத்தில் சென்று அம்பு போட்டுவிட்டு வருவார். தீபாவளி, திருக்கார்த்திகை நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகின்றனது. மார்கழியில் சிறப்பு பூசை, தனுர் மாத பூசை, வைகுண்ட ஏகாதசி அன்று பரம்பத வாசல் திறப்பு, மாசிமக தீர்த்தவாரி, பங்குனியில் திருக்கல்யாணம் போன்றவை நடத்தப்படுகின்றன.[2]


மேற்கோள்கள்[தொகு]

  1. "பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 2023-06-23.
  2. "'இருவராகிய ஒருவர்' நெற்றிக்கண் பெருமாள்!". Hindu Tamil Thisai. 2023-06-15. பார்க்கப்பட்ட நாள் 2023-06-23.