பனி உள்ளகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளையிட்டு எடுக்கப்படும் பனி உள்ளக மாதிரி. (படம் Lonnie Thompson, Byrd Polar Research Center)

பனிக்கட்டி உள்ளகம் (Ice Core) எனப்படுவது, பனியினுள் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் உள்ளீடுகளின் அடிப்படையில், கடந்து சென்ற மிக நீண்டகாலத்திற்கு, புவியில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களையும், வளிமண்டலத்தில் இருந்த வளிமங்களின் அளவுகளைப் பற்றியும் அறிய உதவும், ஆற்றல்வாய்ந்த ஒரு அளவீட்டைக் கொடுக்கும் ஒரு முறையாகும்[1][2]. இம்முறையில் உருளை வடிவிலான கலன் ஒன்றைப் பயன்படுத்தி, பனிப்படுக்கை, பனிவிரிப்பு, பனியாறு கொண்ட இடங்களில் உறைபனியினூடாகத் துளையிட்டு, ஆழமான இடங்களிலிருந்து மாதிரி பெறப்படும்[3][4][5][6]. பொதுவாக இந்த பனி உள்ளகங்கள் அண்டார்டிக்கா மற்றும் கிரீன்லாந்தில் இருக்கும் பனிப்படுக்கைகள், பனிவிரிப்புக்கள் அல்லது வேறு இடங்களில் உயரமான மலைகளில் இருக்கும் பனியாறுகளில் இருந்து பெறப்படும்.

ஆண்டுதோறும் பெய்யும் பனியினால், ஒன்றன்மேல் ஒன்றாக பனிப் படலங்கள் அடுக்கப்பட்டு, மேலே உள்ள படலம் தற்போதைய ஆண்டுக்குரிய பனியையும், ஆழமாகச் செல்லச் செல்ல, காலம் கூடிய ஆண்டுகளுக்குரிய பனிப் படலங்களையும் கொண்டு இருக்கும். இதனால் பனிக்கட்டி உள்ளக மாதிரியானது பல ஆண்டுகளுக்கான உறைபனியையும், அதற்குள்ளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும், பல காலநிலைத் தகவல்கள் அடங்கிய உள்ளீடுகளையும் கொண்டிருக்கும் படலங்களால் ஆனதாக இருக்கும். பனிக்கட்டியினதும், அதன் உள்ளீடுகளினது இயல்புகள் பல ஆய்வுகள் மூலம், பொதுவாக ஓரிடத்தான் பகுப்பாய்வுமூலம் ஆய்வு செய்யப்படும். இதனால், கடந்துபோன அபல ஆண்டுகளில் வளிமண்டலத்தில் இருந்த வெப்பநிலை, வளிமங்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய காலநிலை வரலாறு பதிவு செய்யப்படும்[7]. பனியினுள் பிடிபட்டிருக்கும் உள்ளீடுகளில் தூசு, சாம்பல், வளிமண்டல வளிமங்களின் குமிழ்கள், கதிரியக்கம் கொடுக்கவல்ல பொருட்கள் என்பன ஏராளமான சூழல் தொடர்பான தகவல்களைக் கொண்டிருக்கும்.

இந்த பனிக்கட்டி உள்ளகத்திலிருக்கும் கால்நிலைத் தகவல்கள், ஏனைய வயது கூடிய பெரிய மரங்களின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றத்தில் பெறப்படும் ஆண்டுவளையங்கள், படிவுப் படலங்கள் (Sediment Layers) போன்ற இயற்கை ஆவணங்களை விடவும் மிக அதிகமான தகவல்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதில், குறிப்பிட்ட காலங்களில் இருந்த வெப்பநிலை, கடல்நீரின் அளவு, மழை, நிலத்திற்கு அண்மையில் இருந்த வளிமண்டல வளிமங்களின் வேதியியல் இயல்புகள், எரிமலை வெடிப்பு நிகழ்வுகள், சூரியவெப்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், காட்டுத்தீ போன்ற பல தகவல்கள் அடங்கியிருக்கும்[5].

பனிக்கட்டி உள்ளகப் பதிவுகளின் காலம், துளையிடப்படும் ஆழத்தில் தங்கியிருக்கும். நீண்ட துளையிடப்படும்போது, பல ஆண்டு காலத்துக்கு முன்னரான பதிவுகளிலிருந்து, அண்மைய காலம் வரையான பதிவுகள் பெறப்படும். மிக நீண்ட பனிக்கட்டி உள்ளகம் 3 கி.மீ. நீளமானதாக உள்ளது. மிகப் பழைமையான காலத்துக்கானதும், தொடர்ச்சியானதுமான பனிக்கட்டி உள்ளகமானது, கிரீன்லாந்தில் 123,000 ஆண்டுகளுக்கும், அண்டார்ட்டிகாவில் 800,000 ஆண்டுகளுக்கும் பெறப்பட்டுள்ளது. அத்துடன் வெவ்வேறு காலங்களில் இருந்த பைங்குடில் வளிமங்களின் அளவுகள் அடங்கிய தகவல்களும் இதில் பெறப்பட்டது[3].

மிகத் தெளிவான ஆண்டுப் படலங்களைக் கொண்ட, GISP2 எனப்படும் 1837 ஆழமான பனிக்கட்டி உள்ளகம்மேற்கோள்கள்[தொகு]

  1. "What an Ice Core?". American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் மே 27, 2013.
  2. "Climate Data Information". www.climatedata.info. Archived from the original on 2013-01-06. பார்க்கப்பட்ட நாள் மே 27, 2013.
  3. 3.0 3.1 "Ice Cores and Climate Change". British Antarctic Survey, Natural Enviornment Research Council, 2012. பார்க்கப்பட்ட நாள் மே 27, 2013.
  4. "Ice Cores". American Gamburtsev Province. பார்க்கப்பட்ட நாள் மே 27, 2013.
  5. 5.0 5.1 "Ice Cores". Leading Australia's Antarctic Program. Dept. of Sustainability, Enviornment, Water, Population and Communities, Australian Antarctic Division, Australian Govt. பார்க்கப்பட்ட நாள் மே 27, 2013.
  6. "What are Ice Cores?". பார்க்கப்பட்ட நாள் மே 27, 2013.
  7. en:British Antarctic Survey, The ice man cometh - ice cores reveal past climates பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனி_உள்ளகம்&oldid=3562414" இலிருந்து மீள்விக்கப்பட்டது