உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டிதர் கருப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டிதர் கே. பி. கருப்பன்
வெள்ளை தலைப்பாகை அணிந்திருக்கும் கருப்பனின் உருவப்படம்
பிறப்பு(1885-05-24)24 மே 1885
சேரநல்லூர், கொச்சி, இந்தியா
இறப்பு23 மார்ச்சு 1938(1938-03-23) (அகவை 52)
தேசியம்இந்தியா
பணிகவிஞர், நாடக ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி

பண்டிதர் கருப்பன் (Pandit Karuppan) கேரளாவைச் சேர்ந்த ஓர் கவிஞரும், நாடக ஆசிரியரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். [1]

கொச்சி மாநிலத்தின் எர்ணாகுளத்திலிருந்து பண்டிதர் கருப்பன் தீண்டாமைக்கும், சமூகத் தீமைகளுக்கும் எதிராக இடைவிடாத போராடினார். சமூக-பொருளாதார ரீதியாக, கல்வி ரீதியாக பின்தங்கிய சமூகங்களை முன்னணியில் கொண்டு சென்றதற்காக கேரளாவின் "லிங்கன்" என்று அழைக்கப்பட்டார். உப்பங்கழிகள், ஆறுகளில் உள்ளூர்மயமாக்கப்பட்ட மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர்களின் சமூகத்தைச் சேர்ந்த கருப்பன் சமசுகிருத அறிஞரும், கவிஞரும் புகழ்பெற்ற நாடகக் கலைஞருமாவார். கொச்சி அரசின் முதல் மனித உரிமை ஆர்வலராக, கல்வியறிவு, சமூக அநீதி, சாதிவெறி மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு இவர் தனது இலக்கிய திறனையும் நிறுவனத் திறனையும் பயன்படுத்தினார். அந்த காலத்தில் எர்ணாகுளத்திற்குள் நுழைய கூட அனுமதிக்கப்படாத பின்தங்கிய சாதி மக்களின் வலுவூட்டலுக்காக இவர் பிரச்சாரம் செய்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

கே. பி. கருப்பன் (கண்டத்திபறம்பில் பாப்பு கருப்பன்) எர்ணாகுளத்திற்கு அருகிலுள்ள சேரநெல்லூரில், 1885 மே 24, அன்று, பாப்பு (பொதுவாக அதோ பூசாரி என்று அழைக்கப்படுபவர்), கொச்சு பொண்ணு ஆகியோருக்கு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தீவர மீனவர் சமூகத்தில் பிறந்தார். நச்சுயியல், பாம்புக் கடித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த குடும்பம் அறியப்பட்டது. [2]

கருப்பனின் முறையான கல்வி ஐந்தாவது வயதில் ஆழிக்கல் வேலு வைத்தியன் என்ற உறவினரின் கீழ் தொடங்கியது. இதனையடுத்து, உள்ளூர் குருவான வடக்கே வல்லத்து அப்பு ஆசான் இவரை சமசுகிருதத்தின் அடிப்படைகளான அமரகோசம், சித்தரூபம், சிறீராமோதாந்தம் ஆகியவற்றைக் கற்பித்தார். ஒரு தீவிர வாசகரான கருப்பன் இதிகாசங்களையும், புராணங்களையும் வாசித்தார். இவரது முதல் கவிதை தோத்திரமந்தாரம் என்பதாகும். 12 வயதில் இலங்கமர்தனத்திற்கு சார்தூலவிக்ரீதிதத்த பாணியில் சுலோகங்களை எழுதி தனது குருக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

சேறையைச் சேர்ந்த மங்கலபிள்ளை கிருட்டிணன் ஆசானின் கீழ் கருப்பன் சமசுகிருத காவியங்களைப் பயின்றார். அன்னம்மநாத ராம பொத்துவால் என்பவரிடம் பயில சேரநல்லூருக்குத் திரும்பினார். அங்கு, நடைமுறையில் இருந்த வழக்கப்படி, உயர் ஜாதி இந்து மாணவர்கள் இவரை அவர்கள் அருகில் உட்கார அனுமதிக்கவில்லை, இதனால் இவர் தனியாக ஒரு மூலையில் அமர்ந்தார். காவியங்களான மகம், நிசாதம், போஜா சம்பு ஆகியவற்றை இராம பொத்துவாலிடமிருந்து படித்தார். இவரது கல்வியின் மிக முக்கியமான காலம் கொடுங்கல்லூரில் இருந்தது. கொடுங்கல்லூர் கோவிலகம் கற்கும் இடமாக இருந்தது.

இளமை வாழ்க்கை

[தொகு]

நடைமுறையில் உள்ள சாதி முறையை விமர்சித்த கருப்பனின் புகழ்பெற்ற படைப்பான "ஜாதிகும்மி" என்பது 1904 ஆம் ஆண்டில் கொடுங்கல்லூர் கோவிலகத்தில் இவரது ஆய்வின் போது எழுதப்பட்டது. அது ஏழைகளிடையே பிரபலமானது. ஜாதிக்கும்மி என்பது மலையாள இலக்கியத்தில் சாதி அமைப்பு, தீண்டாமையை கேள்விக்குள்ளாக்கும் ஒரு முன்னோடி முயற்சியாகும். [3] திருவிதாங்கூர் மாநிலத்தில் சமூக மாற்றங்களுக்காக நாராயண குரு, குமரன் ஆசான், அய்யன்காளி ஆகியோர் பணியாற்றியபோது, ஜாதிக்கும்மியின் வெளிப்பாடு கொச்சின் மாநிலத்தில் அந்த திசையில் தொடங்கப்பட்ட முதல் படியாகும். கருப்பன் அப்போது 19 வயது மாணவராக இருந்தார். குமரன் ஆசானின் துரவாசுதா என்பது 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டது. கருப்பனின் பெரும்பாலான எழுத்துக்கள் அறிவார்ந்த சமசுகிருதத்தில் இருந்தபோதிலும், ஜாதிக்கும்மியில் எளிய, அன்றாட மலையாளத்தைப் பயன்படுத்தினார். இதனால் உள்ளூர் சமூகங்களைச் சேர்ந்த கல்வியறிவற்ற மக்கள் புரிந்துகொள்ளவும் பிரச்சாரம் செய்யவும் முடிந்தது.

கற்பித்தல் பணி

[தொகு]

சமசுகிருதத்தில் கருப்பனின் திறமைகள் கொச்சி மகாராஜரான ராஜரிசி இராமவர்ம ராஜாவின் கவனத்திற்கு வந்தன. பட்டன் தம்புரான் கருப்பனை மன்னருக்கு அறிமுகப்படுத்தினார். மகாராஜா கருப்பனை திருப்பூணித்துறையில் உள்ள தனது அரண்மனைக்கு அழைத்தார். இந்த சந்திப்பு கருப்பனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மகாராஜா, அரசகுடும்பத்தின் முதன்மைக் குருவான சாகிரிதியதிலகன் ராம பிசரோடி என்பவரிடம் சமசுகிருதத்தின் மேம்பட்ட ஆய்விற்காக கருப்பனை அனுப்பினார். கருப்பன் அவரிடம் ‘சித்தாந்த கௌமுடி’, ‘மனோரமா’, ‘சாகித்ய தர்பனம்’ ஆகியவற்றை படித்தார். பின்னர், கருப்பன் எர்ணாகுளத்தில் உள்ள புனித தெரசா ஆங்கிலப் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் சமசுகிருத ஆசிரியராகச் சேர்ந்தார். [4]

1912 ஆம் ஆண்டில் எர்ணாகுளத்தில் உள்ள சாதி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் (உயர் சாதி சிறுமிகளுக்கான ஒரு சிறப்புப் பள்ளி) பண்டிதர் கருப்பன் சமசுகிருத ஆசிரியராக நியமிக்கப்பட்டபோது இவரது பதவிக்கு எதிராக உயர் சாதி இந்துக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது. மேலும், ஒரு தாழ்த்தப்பட்ட மனிதனின் கீழ் படிப்பதற்கு அவர்கள் தங்கள் சிறுமிகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கினர் . கொச்சி மகாராஜா அவர்களை எச்சரிக்கை செய்தார். கருப்பனின் கீழ் படிக்க விரும்பாத சிறுமிகள் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பப்படுவார்கள் என்று எச்சரித்தார். பின்னர் ,கருப்பன் சாதி பெண்கள் உயர்நிலைப்பள்ளியை விட்டு வெளியேறி பின்னர், 1918இல் திருச்சூரில் உள்ள விக்டோரியா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். இதையடுத்து, அங்குள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பணியமர்த்தப்பட்டார். 1921 ஆம் ஆண்டில், இவர் மீண்டும் எர்ணாகுளம் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நியமிக்கப்பட்டார். அது அதன் பெயரில் இருந்து "சாதி" ஐ கைவிட்டிருந்தது.

சட்டமன்ற சபை

[தொகு]

1925 ஆகத்தில் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது இரண்டாவது பதவிக்காலத்தில், இதுவரை வாக்களிக்கப்படாத வகுப்புகளை பிரதிநிதித்துவப்படுத்த கொச்சி சட்டமன்றக் குழுவின் உறுப்பினராக இவர் பரிந்துரைக்கப்பட்டார். எழுத்துக்கள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் அவர்கள் விடுவிக்கப்படுவதற்காக இவர் அயராது பாடுபட்டார். சட்டமனற உறுப்பினராக, கருப்பன், அதிகாரிகளிடம் அவர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை சிறந்த கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் குறித்து வாதிட்டார். இந்த நோக்கத்திற்காக ஒரு தனித் துறையை நிறுவுமாறு இவர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார். இது தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் பாதுகாப்பதற்கான திணைக்களத்தை உருவாக்கியது. அப்போதைய பொது அறிவுறுத்தல் இயக்குநராக இருந்த ராவ் சாகிப் சி. மத்தாயுடன் முழுநேர பாதுகாப்பாளராகவும், கருப்பனை முழுநேர உதவி பாதுகாவலராகவும் நியமிக்கப்படனர்.

உதவி பாதுகாவலராக, பள்ளிகளைத் தொடங்கி காலனிகளை நிறுவுவதன் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்கு பல சீர்திருத்தங்களைத் தொடங்குவதில் கருப்பன் முக்கிய பங்கு வகித்தார். தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கு உதவித்தொகை, கட்டண சலுகைகள் மற்றும் பல சலுகைகளை வழங்குமாறு இவர் அரசாங்கத்தை வற்புறுத்தினார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆச்சாரபூசனம் என்ற நூலை எழுதினார். புத்தகம் அச்சிடப்பட்டு அரசாங்கத்தால் இலவசமாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட வகுப்புகள் துறை பின்னர் அரிசன நலத்துறை என்று பெயர் மாற்றப்பட்டது.

மறு ஒழுங்கமைக்கப்பட்ட மீன்வளத் துறையின் கீழ் மீன்வளப் பள்ளிகளைத் தொடங்க பண்டிதர் கருப்பன் முக்கிய பங்கு வகித்தார். மீனை சுத்தப்படுத்தும் யார்டுகளை நிறுவுவது மீன்வளத்தை ஒரு தொழிலாக ஊக்குவிக்கவும், மீன்பிடி சமூகத்தின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் உதவியது. கருப்பன் கொச்சி மத்திய கூட்டுறவு வங்கியில் இயக்குநராக பணியாற்றும் போது, மீனவர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தன்னம்பிக்கை மூலம் முன்னேற்றத்திற்காக கூட்டுறவு அமைப்புகளை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

பண்டிதர் கருப்பனுக்கு கிறிஸ்தவத்தின் மீது ஒரு சிறப்பு ஈடுபாடு இருந்தது, அதன் தொண்டு நிறுவனங்கள் கேரள கல்வியில் உதவி செய்தன. பல கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதன் மூலம் மாணவர்களிடம் மதம் அல்லது சாதி பாகுபாடு இல்லாமல் அனுமதித்தனர். அலெக்சிஸ் ஹென்றி லெப்பீசியர் (வத்திக்கானிலிருந்து வந்த போப்பின் பிரதிநிதி) 1925 இல் கொச்சிக்கு வருகை தந்தபோது, கருப்பன் ஒரு வரவேற்பு கவிதை எழுதினார். கருப்பன் புத்தர் மற்றும் நபிகள் நாயகத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் கவிதைகளையும் எழுதியிருந்தார். சட்டம்பி சுவாமிகளின் மரணத்தால் வேதனையடைந்த கருப்பன் சமாதி சப்தாகம் என்ற தலைப்பில் இரங்கல் கவிதை எழுதினார்.

பண்டிதர் கருப்பனின் மனைவி குஞ்ஞம்மா பனம்புக்காட்டைச் சேர்ந்தவர். தம்பதியினர் எர்ணாகுளம், புனித தெரசா கல்லூரி அருகே சாகிதிய குடிலில் தங்களது ஒரே மகள் பார்வதியுடன் வசித்து வந்தனர்.

இறப்பு

[தொகு]

பண்டிதர் கருப்பன் 1938 மார்ச் 23 அன்று நுரையீரல் அழற்சி நோயால் தனது 53 வயதில் இறந்தார்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Important Personalities". keralawindow.net. Archived from the original on 2 June 2008. பார்க்கப்பட்ட நாள் 10 July 2008.
  2. Sadasivan, S N (2000). A Social History of India. New Delhi: A P H Publishing Corporation. p. 551. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176481700.
  3. "Intro Dalit Poetry in Malayalam". பார்க்கப்பட்ட நாள் 27 February 2013.
  4. "Pandit K.P. Karuppan". Kerala Sahitya Akademi. Archived from the original on 31 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 27 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டிதர்_கருப்பன்&oldid=3561689" இலிருந்து மீள்விக்கப்பட்டது