பக்தபூர் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்தபூர் போர்
காத்மாண்டு சமவெளியை கோர்க்காலிகள் கைப்பற்றலின் ஒரு பகுதி

1854ல் பக்தபூர் நகர சதுக்கம்
நாள் 1769
இடம் பக்தபூர்
கோர்க்காலிகள் வெற்றி
பிரிவினர்
நேவாரிகள் கோர்க்காலிகள்
பலம்
தெரியாது 20,000
இழப்புகள்
2,001 நபர்கள்
501 வீடுகள்
தெரியவில்லை
தற்கால நேபாளில் அமைவிடம்
காட்மாண்டு பள்ளத்தாக்கின் 1802 ஆம் ஆண்டு வரைபடம்

பக்தபூர் போர் (Battle of Bhaktapur) காத்மாண்டு சமவெளியை, கோர்க்காலிகள் கைப்பற்றிய போது நிகழ்ந்த இறுதிப்போர் ஆகும்[1]. 1769 ஆம் ஆண்டு காட்மாண்டுவில் இப்போர் நடைபெற்றது. போரின் முடிவில் மல்லர் வம்சத்தின் காத்மாண்டு சமவெளியில் மன்னர் செயப்பிரகாசு மல்லா, பக்கத்திலிருந்த கோர்க்கா நாட்டு மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவால் தோற்கடிக்கப்பட்டார். காத்மாண்டு சமவெளியும், அதனுடன் இணைந்த பிற பகுதிகள் முழுவதும் பிரிதிவி நாராயண் சாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

பிரிதிவி நாராயண் சா பெற்ற வெற்றியில் நேபாளத்தில் நலிவடைந்த நிலையில் இருந்த நேவாரி அரசகுலத்தின் ஆட்சி முடிவுக்கு வந்து சா வம்சத்து ஆட்சி நிறுவப்பட்டது[2]. கலாச்சாரம் மற்றும் வர்த்தக நோக்கத்தில் ஈடுபாடு கொண்டு அமைதியாக ஆட்சிசெய்து கொண்டிருந்த நேவார்கள், நாட்டை விரிவுபடுத்தும் எண்ணமும் சூறையாடும் நோக்கமும் மிகுந்த கோர்க்காலிகளிடம் தோல்வியுற்றனர். தோல்வியுற்ற மன்னர் மல்லா நாடு கடத்தப்பட்டார்[3][4]

முற்றுகை[தொகு]

பக்தபூர் நகரம், காத்மாண்டு சமவெளியில் இருந்த மூன்று தலைநகரங்களில் ஒரு நகரமாகும். லலித்பூர், காட்மாண்டு என்பன மற்ற இரண்டு தலைநகரங்களாகும். பக்தபூரின் கிழக்கு எல்லை, கிழக்கில் 5 முதல் 6 நாட்கள் பயணத் தொலைவு வரைக்கும் நீட்டிக்கப்பட்டிருந்தது. பக்தபூர் நகரில் 12000 குடும்பங்கள் வாழ்ந்தனர்[5]

காட்மாண்டு நகரத்தின் வளமான பண்பாடு, வர்த்தகம், தொழில் மற்றும் விவசாயம் ஆகியனவற்றின் மீது கொண்ட ஆசையே காட்மாண்டு பள்ளத்தாக்கை கோர்க்காலிகள் விரும்பியதற்குக் காரணமாகும்[6]. 1736 ஆம் ஆண்டில் கோர்க்காலி மன்னர் நாரா பூபால் சா, காட்மாண்டு பள்ளத்தாக்கின் வடமேற்கில் ஒரு கோட்டையாகவும் எல்லை நகரமாகவும் திகழ்ந்த நுவாகோட் மீது ஒரு தாக்குதலைத் தொடுத்தார். ஆனால் அத்தாக்குதல் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டது[7] . அவரது மகன் பிரிதிவி நாராயண் சா 1742 இல் மன்னராக முடிசூடிக் கொண்ட பிறகு இத்தாக்குதல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டன[8][9].

பலமான போரால் மட்டும் காட்மாண்டுவை வெற்றி கொள்ள முடியாது என்பதை பிரிதிவி உறுதியாக நம்பினார். முக்கியமான மற்றும் வர்த்தகம் நிகழ்ந்த பாதைகளைக் கைப்பற்றினால் மட்டுமே காட்மாண்டுவைப் பிடிக்க இயலும் என்றும் கருதினார். அவருடைய படைகள் காட்மாண்டுவைச் சுற்றியுள்ள மலைப் பாதைகளை ஆக்ரமித்தன. திபெத் மற்றும் இந்தியாவை இணைக்கும் வர்த்தகப் பாதைகள் முடக்கப்பட்டன.

1744 ஆம் ஆண்டில் பிரிதிவி நாராயணன் ஷா, நுவாகோட் நகரைப் பிடித்து நேபாளத்திற்குள் காலடி வைத்தார். இவ்வெற்றியால் இமயமலைத்தொடரில் அமைந்திருந்த வர்த்தக சாலைகளில் நடைபெற்ற நேபாளத்தின் வியாபார நடவடிக்கைகளைத் தடுத்தார்[10] . படிப்படியாக காட்மாண்டு பள்ளத்தாக்கின் மேற்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சுற்றிலுமிருந்த மக்வான்பூர், துலிக்கேல் பகுதிகளை 1762 மற்றும் 1763 ஆம் ஆண்டுகளில் கோர்க்காலிகள் பிடித்தனர்[11]

நாட்டில் பஞ்சம் ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக இவரது காத்மாண்டு சமவெளியின் முற்றுகை அமைந்தது. உணவு தானியங்கள் எதுவும் சமவெளி பகுதிக்கு செல்ல முடியாதபடி தடுத்தார்[12]. தப்பியோடியவர்களைப் பிடித்து சாலையோர மரங்களில் தூக்கிலிட்டனர்.[13]தொடர்ச்சியாக நடைபெற்ற இத்தகைய முற்றுகைகளால், கோர்க்காலிகளைச் சமாளிக்க அரசர் மல்லா பிரித்தானியாவின் கிழக்கிந்திய நிறுவனத்தின் உதவியை நாடினார். ஆகத்து மாதம் 1767 ஆம் ஆண்டில் தளபதி சியார்ச்சு கின்லோச்சு முற்றுகைகளால் நொந்து போயிருந்த குடிமக்களைக் காப்பாற்ற காட்மாண்டு நோக்கி ஒரு பிரித்தானியப் படையுடன் வந்தார்.[14] காட்மாண்டுவிற்குள் 75 கி.மீ தொலைவு வரை வந்த அவர் சிந்துலி, அரிகர்பூர் கோட்டைகளைக் கைப்பற்றினார். ஆனால் சர்தார் பன்சு குருங்கின் இரண்டு நீடித்த எதிர்தாக்குதல்களால் பிரித்தானியப் படை பின்வாங்கியது[15][16]

இறுதிப்போர்[தொகு]

காத்மாண்டுவைத் தொடர்ந்து முற்றுகையிட்டு வந்த கோர்க்காலிகள் 1767 இல் நடந்த கீர்த்திப்பூர் போரில் காத்மாண்டு சமவெளியின் கீர்த்திபூர் நகரத்தை கைப்பற்றினர். குருதி தோய்ந்த சண்டை மற்றும் காட்டுமிராண்டித்தனம் மிகுந்த அப்போரில் காட்மாண்டுவிற்கு மேற்கில் அமைந்துள்ள இம்மலையுச்சி நகரத்தின் வீழ்ச்சி, காட்மாண்டு பள்ளத்தாக்கின் பாதுகாப்புக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது.

பின்னர் பிரிதிவி நாராயணன் ஷா தன் கவனத்தைக் காட்மாண்டுவின் பக்கம் திருப்பினார். நகரத்திற்குள் ஊடுருவிச் சென்று பிரச்சாரங்கள் நடத்துவதன் மூலம் நேவார்களிடையே பிரிவினைகள் உருவாக்குவதற்காக அவரது முகவர்களை அனுப்பினார். தொடர்ச்சியாக நிகழ்ந்த போரினால் சில மாதங்களில் மன்னர் பிரிதிவி நாராயணன் லலித்பூர் நகரத்தையும் வெற்றி கொண்டார். தோல்வியடைந்த காட்மாண்டு, இலலித்பூர் மன்னர்கள் செயப்பிரகாசு மல்லா மற்றும் தேச் நரசிங் மல்லா இருவரும் பக்தபூரில் தஞ்சம் புகுந்தனர். இறுதி முயற்சியாக பக்தபூர் மன்னருடன் இணைந்து மூவரும் பிரிதிவி நாராயணன் ஷாவை சாவை எதிர்த்துப் போரிட்டனர். ஆனால் மீண்டும் உள்ளூர் பிரபுக்களின் வஞ்சத்தால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். கோர்க்க மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா பக்தபூரையும் 1769 இல் கைப்பற்றினார்.

வஞ்சகம் மிக்க பக்தபூர் பிரபுக்கள் போரின் போது நகரத்து வாசல்களை கோர்க்காலிகளுக்காக திறந்து விட்டனர்[17]. பிரிதிவியின் துருப்புக்களிடம் வாள், வில், அம்பு போன்ற ஆயுதங்களுடன் கூடுதலாக, குழல் துப்பாக்கியும் இருந்தன. அரண்மனைக்கு முன் கடுமையான சண்டை நிகழ்ந்தது. ஆனால் படையெடுப்பாளர்கள் இறுதியாக அரண்மனை வாயில்களை உடைத்து முன்னேறினர்.

பிரிதிவி நாராயணன் ஷாவின் படைகள் 1769 நவம்பர் 25 இரவில் பக்தபூரைக் கைப்பற்றியபோது 2001 நபர்கள் கொல்லப்பட்டதாகவும் 501 வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதாகவும் காட்மாண்டு யானா பாகா மடாலயத்தில் இருக்கும் குறிப்புகள் தெரிவிக்கின்றன[18]

இரஞ்சித் மல்லா வயதுமுதிர்வின் காரணமாக வாரணாசிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். செயப்பிரகாசு மல்லா குண்டு துளைக்கப்பட்டு இறந்தார். தேச் நரசிங் சாகும்வரை சங்கிலியால் பிணைக்கப்பட்டு இறந்தார்[19]

மல்ல வம்சத்தின் முடிவுக்கு பக்தபூர் போர்தான் காரணம் என்ற குறிப்பு வரலாற்றில் நிலைபெற்றது. நேபாளத்தில் ஷா வம்சம் நிறுவப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் நேபாள இராச்சியம் குடியரசு நாடாக மலரும் வரை ஷா வம்ச ஆட்சி நீடித்தது[20]

மேற்கோள்கள்[தொகு]

 1. Hamilton, Francis Buchanan (1819). An Account of the Kingdom Of Nepal and of the Territories Annexed to This Dominion by the House of Gorkha. Edinburgh: Longman. http://www.gutenberg.org/files/30364/30364-h/30364-h.htm#page7. பார்த்த நாள்: 22 November 2012.  Page 186.
 2. Waller, Derek J. (2004). The Pundits: British Exploration Of Tibet And Central Asia. University Press of Kentucky. பக். 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780813191003. 
 3. Giuseppe, Father (1799). Account of the Kingdom of Nepal. London: Vernor and Hood. பக். 322. https://books.google.com/books?id=vSsoAAAAYAAJ&pg=PA307&cad=4#v=onepage&q&f=false. பார்த்த நாள்: November 22, 2012. 
 4. Malla, Sampada; Rai, Dinesh (January 2006). "Where Have All The Mallas Gone?: The Descendants of the Mallas". ECS Nepal இம் மூலத்தில் இருந்து 18 டிசம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111218152858/http://www.ecs.com.np/cover_story.php?story_id=55. பார்த்த நாள்: 22 November 2012. 
 5. Giuseppe, Father (1799). Account of the Kingdom of Nepal. London: Vernor and Hood. பக். 308. https://books.google.com/books?id=vSsoAAAAYAAJ&pg=PA307&cad=4#v=onepage&q&f=false. பார்த்த நாள்: November 7, 2012. 
 6. Raj, Yogesh (2012). "Introduction". Expedition to Nepal Valley: The Journal of Captain Kinloch (August 26-October 17, 1767). Kathmandu: Jagadamba Prakashan. பக். 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789937851800. 
 7. Northey, William Brook and Morris, Charles John (1928). The Gurkhas: Nepal-Their Manners, Customs and Country. Asian Educational Services. ISBN 9788120615779. Pages 30-31.
 8. Stiller, Ludwig F. (1968). Prithwinarayan Shah in the light of Dibya Upadesh. Catholic Press. பக். 39. 
 9. Singh, Nagendra Kr (1997). Nepal: Refugee to Ruler: A Militant Race of Nepal. APH Publishing. பக். 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170248477. https://books.google.com.np/books?id=Aaog6bnQlNYC&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false. பார்த்த நாள்: December 6, 2012. 
 10. Shrestha, Sanyukta (27 July 2012). "Nepali history from new perspectives". Republica இம் மூலத்தில் இருந்து 5 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120805164223/http://theweek.myrepublica.com/details.php?news_id=38665. பார்த்த நாள்: 23 November 2012. 
 11. Raj, Yogesh (2012). "Introduction". Expedition to Nepal Valley: The Journal of Captain Kinloch (August 26-October 17, 1767). Kathmandu: Jagadamba Prakashan. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789937851800. 
 12. Giuseppe, Father (1799). Account of the Kingdom of Nepal. London: Vernor and Hood. பக். 317. https://books.google.com/books?id=vSsoAAAAYAAJ&pg=PA307&cad=4#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 14 November 2013. 
 13. Giuseppe, Father (1799). Account of the Kingdom of Nepal. London: Vernor and Hood. பக். 317. https://books.google.com/books?id=vSsoAAAAYAAJ&pg=PA307&cad=4#v=onepage&q&f=false. பார்த்த நாள்: November 23, 2012. 
 14. Chatterji, Nandalal (1939). "The First English Expedition to Nepal". Verelst's Rule in India. Indian Press. பக். 21. https://books.google.com.np/books/about/Verelst_s_Rule_in_India.html?id=oW4BAAAAMAAJ&redir_esc=y. பார்த்த நாள்: 14 November 2013. 
 15. Raj, Yogesh (2012). "Introduction". Expedition to Nepal Valley: The Journal of Captain Kinloch (August 26-October 17, 1767). Kathmandu: Jagadamba Prakashan. பக். 13–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789937851800. 
 16. Shrestha, Sanyukta (27 July 2012). "Nepali history from new perspectives". Republica இம் மூலத்தில் இருந்து 5 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120805164223/http://theweek.myrepublica.com/details.php?news_id=38665. பார்த்த நாள்: 14 November 2013. 
 17. Wright, Daniel (1990). History of Nepal. New Delhi: Asian Educational Services. பக். 255. https://archive.org/stream/HistoryOfNepal/HistoryOfNepaldanielWright#page/n39/mode/2up. பார்த்த நாள்: December 7, 2012. 
 18. Shakya, Raja (2005). Jana Baha Dyah ya Shanti Saphu (Ghatanavali). Kathmandu: Premdharma Pithana. பக். 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:99946-56-97-X. 
 19. Giuseppe, Father (1799). Account of the Kingdom of Nepal. London: Vernor and Hood. பக். 322. https://books.google.com/books?id=vSsoAAAAYAAJ&pg=PA307&cad=4#v=onepage&q&f=false. பார்த்த நாள்: November 23, 2012. 
 20. "Nepal's Gorkha kingdom falls". The Times of India. 2 June 2008 இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130411033226/http://articles.timesofindia.indiatimes.com/2008-06-02/rest-of-world/27770497_1_narayanhity-dipendra-prithvi-narayan-shah. பார்த்த நாள்: 11 February 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்தபூர்_போர்&oldid=3219259" இலிருந்து மீள்விக்கப்பட்டது