பகுபத உறுப்புகள்
Appearance
தனிச்சொல்லை மொழியியல் நோக்கில் நன்னூல் பதவியல் [1] என்னும் பகுதியில் அணுகுகிறது. பொருள் தரும் தனிச் சொல்லை அந்த நூல் பதம் எனக் குறிப்பிடுகிறது. பதத்தை அது பகுபதம், பகாப்பதம் என இரண்டு பகுதிகளாக்கிக் கொண்டுள்ளது. பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்பன பகுபத உறுப்புக்கள்.[2]
சில எடுத்துக்காட்டுகள்
[தொகு]சொல் | வினை | பகுதி | விகாரம் | சந்தி | இடைநிலை | சாரியை | எழுத்துப்பேறு | விகுதி |
---|---|---|---|---|---|---|---|---|
நடந்தனள் | செய்வினை | நட | ந் | (த்) | 'த்' இறந்தகால இடைநிலை, | அன் | - | 'அள்' பெண்பால் வினைமுற்று விகுதி |
படுத்தது | செய்வினை | படு | - | த் | 'த்' இறந்தகால இடைநிலை, | அ | - | 'து' ஒன்றன்பால் வினைமுற்று விகுதி |
பட்டது | செயப்பாட்டுவினை | படு | 'பட்டு' ஆனது | - | 'ட்' இறந்தகால இடைநிலை, | அ | - | 'து' ஒன்றன்பால் வினைமுற்று விகுதி |
செய்யாத | எதிர்மறை வினை | செய் | யகர ஒற்று இரட்டியது விகாரம் | - | 'ஆ' எதிர்மறை இடைநிலை, 'த்' இறந்தகால இடைநிலை, | - | - | 'அ' பெயரெச்ச விகுதி |
எழுதுதல் | தொழிற்பெயர் | எழுது | - | - | - | - | 'த்' | 'அல்' தொழிற்பெயர் விகுதி |
திருக்குறள் சொற்கள்
[தொகு]1
[தொகு]அகரம் முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
- அகரம் - [அ+கரம்] - அ (எழுத்தைச் சுட்டும் பெயர்ப் பகுதி). கரம் (எழுத்துச் சாரியை)
- முதல - [முதல்+அ] - முதல் (முந்துதலைக் குறிக்கும் வினைப் பகுதி), அ (பன்மை வினைமுற்று விகுதி)
- எழுத்து - எழுது (வினைச்சொல்), எழுத்து (வினைச்சொல் ஒற்று இரட்டிப் பெயர்ச்சொல்லாக மாறியது)
- எல்லாம் - இடைச்சொல்
- ஆதி - [ஆ+த்+இ] - ஆ (ஆதலையும், ஆக்குதலையும் குறிக்கும் பகுதி), த் (எழுத்துப்பேறு), இ (பெண்பால் பெயர்ச்சொல் விகுதி) [3]
- பகவன் - [பகவு+அன்] - பகவு (பகுபடுதலைக் குறிக்கும் பெயர்), அன் (ஆண்பால் விகுதி)
- முதற்றே - [முதல்+து+ஏ] - முதல் (முந்துதலைக் குறிக்கும் வினைப் பகுதி), து (ஒன்றன்பால் வினைமுற்றி விகுதி). ஏ (தேற்றப்பொருள் தரும் ஏகார இடைச்சொல்)
இதனால் தெரியவரும் பிழிவு.
- ஆதி என்பது ஆகுவதும், ஆக்குவதுமாகிய பொருள். இது பெண்பால்.[4]
- பகவன் என்பது நம்மோடும் பேரண்டத்தோடும் பகுதிப்பட்டுக் கிடக்கும் ஆண்.[5]
- இந்த ஆதியாகிய பகவன் உலகுக்கு முதல் [6]
- இந்த இருப்பு, இயக்க அமைதியானது, 'அ' எழுத்து பிற எல்லா உரு எழுத்துக்களுக்கும் ஆதியாகவும், அவற்றின் உள்ளே ஊடுருவிக் கிடக்கும் ஒலியெழுத்தாகவும் உள்ளது போன்றது.
2
[தொகு]கற்றதனால் ஆய பயன் என் கொல் வால் அறவன் நல் தாள் தொழாஅர் எனின்.
- கற்றதனால் – [கல் (கற்று) ற் அது அன் ஆல்] – கல் (அறிவைத் தோண்டுதலை உணர்த்தும் பெயர்ச்சொல் - பகுதி), கற்று (கல்+ற்+உ), ற் (இறந்தகால இடைநிலை), அது (பெயராக்கப் பின்னொண்டு), அன் (சாரியை), ஆல் (மூன்றாம் வேற்றுமை உருபு)
- ஆய - [ஆ (ய்) அ] - ஆ (ஆதலை உணர்த்தும் பகுதி), ய் (உடம்படுமெய்), அ (பெயரெச்ச விகுதி)
- பயன் – பயத்தலைக் குறிக்கும் பெயர்.
- என் – வினாச்சொல்
- கொல் - இடைச்சொல்
- வால் – தூய்மையை உணர்த்தும் உரிச்சொல். சூரிய ஒளியில் ஏழு வண்ணங்களின் துகள்கள் சுழன்றுகொண்டிருக்கின்றன. ஆனால் அந்த வண்ணங்கள் தன்னை வெளிக்காட்டாமல் பிற உருப்பொருள்களைக் காட்டுகின்றன. இப்படி உருவ, அருவப் பொருள்களையும் உயிரின் இயக்கத்தில் அறிவாக இயங்கிக் காட்டுவதுதான் வாலறிவு.
- அறிவு – அறியும் இயக்கமும், அறியப்படும் பொருளும் அறிவு. (பெயர்ச்சொல்)
- நல் – நன்மை தருவதை உணர்த்தும் உரிச்சொல்
- தாள் – காலடி இயக்கமாகிய முயற்சியை உணர்த்தும் பெயர்ச்சொல்
- தொழாஅர் – [தொழு (தொழ்) ஆ அ ர்] – தொழு (பகுதி), தொழ் என ஈறு கெட்டு நின்றது விகாரம், ஆ (எதிர்மறை இடைச்சொல்), அ (அளபெடை), ர் தொல்காப்பியம் காட்டும் பலர்பால் வினைமுற்று விகுதி), - [தொழு ஆ (அ) ஆர்] எனப் பகுத்துக் காண்பது நன்னூல் வழி காணும் நெறி – ஆ (எதிர்மறை இடைச்சொல் மறைந்து நின்றது), ஆர் (பலர்பால் வினைமுற்று விகுதி)
- எனின் – [என் இன்] – என் (என்று சொல்லு என்னும் பொருள்படும் வினைச்சொல்) சிலப்பதிகாரத்தில் ‘என்’ என்னும் அசைச்சொல்லால் காதைப்பாடல்கள் முடிகின்றன. அவை வெறும் அசைநிலைகள் மட்டுமல்லாமல் என்று சொல்லு என்னும் பொருளையும் தருவன.
இந்தச் சொல்லமைதி விளக்கத்தால் பெறப்படும் பிழிவு.
- கற்றதன் பயன் அறிவின் முயற்சியைத் தொழுதல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ நன்னூல் நூற்பா 128 முதல் 145
- ↑
பகுதி விகுதி யிடைநிலை சாரியை
சந்தி விகார மாறினு மேற்பவை
முன்னிப் புணர்ப்ப முடியுமெப் பதங்களும் (நன்னூல் 133) - ↑ பணிவுடையன் இன்சொலன் ஆதல் என்னும் பெயரில் 'ஆ' வினைச்சொல்
- ↑ பெண்ணானவள் ஆண் விந்துவை ஆக்கியும், அதனோடு தானும் ஆகியும் நாமாக இருப்பவள்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் (திருக்குறள் 543)
தானே மன்னவனாகியும், மக்களால் மன்னவன் ஆக்கப்பட்டும் ஆதியாகி நம்மை ஆள்பவன் இறை என்று வைக்கப்படும் அரசன். - ↑
எள் பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உள் பகை உள்ளதாம் கேடு (திருக்குறள் 889) எள்ளுக்குள்ளே இருக்கும் பகவு எண்ணெய். - ↑ தோற்ற வரிசையில் முதல். விளைவாக வரும் கண்டுமுதல்.