உள்ளடக்கத்துக்குச் செல்

நேபாள புரட்சி, 1951

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேபாள புரட்சி, 1951 (The revolution of 1951) (நேபாளி: सात सालको क्रान्ति), இதனை ஏழாண்டுப் புரட்சி (Sat Salko Kranti) என்றும் அழைப்பர். நேபாளத்தில் ராணா வம்சத்தின் பரம்பரை பிரதம அமைச்சர்களின் நேரடி ஆட்சியை ஒழிப்பதே இப்புரட்சியின் நோக்கமாகும். 1944ம் ஆண்டு முதல் நேபாளி காங்கிரஸ் கட்சி போன்ற அரசியல் கட்சிகள், பொதுமக்களின் ஆதரவுடன் நடைபெற்ற வலுவான ஏழாண்டுப் போராட்டத்தின் விளைவாக, இறுதியில் நேபாளத்தில் ராணா வம்சத்தினரின் பரம்பரை பிரதம அமைச்சர் பதவி 15 பிப்ரவரி 1951 அன்று ஒழிக்கப்பட்டது.

ராணா வம்சத்தினர் ஆட்சியின் பின்னணி

[தொகு]

1814 - 16ல் நடைபெற்ற ஆங்கிலேயே நேபாளப் போரில் நேபாளம் தோல்வியுற்றதால், ராணா வம்ச பரம்பரை பிரதம அமைச்சர்களின் செல்வாக்கு கூடியது. மேலும் கோத் படுகொலைகளின் விளைவாக ஜங் பகதூர் ராணா மற்றும் அவரது உடன்பிறப்புகள், நேபாள இராச்சியத்தில் அரசியல் செல்வாக்கு பெற்று, நேபாள மன்னரை கைப்பாவையாகக் கொண்டு, பரம்பரையாக நேபாளத்தின் நிர்வாகிகளாக செயல்பட்டனர். ராணா வம்சத்தினர் பிரித்தானிய இந்தியாவின் அரசின் கைக்கூலிகளாக செயல்பட்டனர். பிரித்தானிய இந்தியாவில் 1857 சிப்பாய் கிளர்ச்சியை ஒடுக்க பிரித்தானியர்களுக்கு ராணா வம்சத்தினர் நேபாள கூர்க்காப் படைகளை அனுப்பி உதவினர்.

புரட்சிக்கான அமைப்புகள்

[தொகு]

ராணாக்கள் ஆட்சி மீது அதிருப்தி கொண்டவர்களை, நேபாளத்தை விட்டு நாடு கடத்தப்பட்டனர். அதில் பலர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றனர். இதே போன்று நேபாளத்திலும் போராட்டங்கள் நடத்தி, கொடுங்கோலர்களாக ராணா வம்ச பரம்பரை நேபாள ஆட்சியாளர்களை அதிகார மையத்திலிருந்து விரட்ட முடிவு செய்தனர். அதற்காக இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நேபாள மக்கள் ஒன்று சேர்ந்து, நேபாள ராஷ்டிரிய காங்கிரஸ், பிரஜா பரிசத் போன்ற அரசியல் கட்சிகளை நிறுவினர். விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா போன்ற படித்த இளைஞர்கள் அரசியலில் ஈடுபட்டனர்.

மன்னர் திரிபுவன் நாடு கடத்தப்படல்

[தொகு]
நேபாள மன்னர் திரிபுவன் வீர விக்ரம் ஷா

ராண வம்ச நேபாள பிரதம அமைச்சர் மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணாவின் செயல்பாடுகளில் அதிருப்தியுற்ற நேபாள மன்னர், திரிபுவன் வீர விக்ரம் ஷா, நவம்பர் 1950ல், இளவரசர் மகேந்திரா மற்றும் மூத்த பேரன் பிரேந்திராவுடன் நேபாளத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.

இதனால் பயமுற்ற நேபாளப் பிரதமர் மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா, 7 நவம்பர் 1950ல் உடனடியாக சிங்க அரண்மனையில் அமைச்சரவையைக் கூட்டினார். அதன் படி, மன்னர் திரிபுவனின் மூன்று வயது இளைய பேரன் ஞானேந்திராவை, நேபாளத்தின் புதிய மன்னராக காத்மாண்டு அரண்மனையில் வைத்து முடி சூட்டப்பட்டது.[1]

மன்னர் திரிபுவனுக்குப் பதிலாக அவரது மூன்று வயது பேரன் ஞானேந்திரா முடி சூட்டப்பட்டதால், முன்னாள் மன்னர் திரிபுவனுக்கு ஆதரவாகவும், பிரதம அமைச்சருக்கு எதிராகவும் நாடு முழுவதும் மக்கள் கொதித்தெழுந்து தெருக்களில் கூடி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

22 நவம்பர் 1950 அன்று இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு ஞானேந்திராவை நேபாள மன்னராக அங்கீரம் தர முடியாது என அறிவித்தார்.

நேபாளி காங்கிரஸ் கட்சியின் விடுதலைப் படை

[தொகு]

நேபாளத்தில் பரம்பரை ராணா வம்ச பிரதம அமைச்சர் பதவியை ஒழிப்பதற்கு, நேபாளி காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் விடுதலைப் படை நிறுவி போராட்டங்களில் கலந்து கொண்டது.[2] இப்படை நேபாளத்தின் தராய் பகுதிகளை கைப்பற்றியது.

தில்லி ஒப்பந்தம்

[தொகு]

ராணாக்கள், நேபாளி காங்கிரஸ் மற்றும் மன்னர் திரிபுவன் ஆகியோர் தில்லியில் 1951ல் முத்தரப்பு ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதன் படி மன்னர் திரிபுவன் நேபாளம் சென்று மன்னர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். தில்லி ஒப்பந்தத்தின் முக்கிய விவரங்கள்:

  • இரண்டு ஆண்டுகளில் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசியலமைப்பு நிர்ணய மன்றம் கூடி, நேபாள அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
  • அதுவரை மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா தலைமையிலான, பத்து அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவையில், நேபாளி காங்கிரஸ் கட்சியின் ஐந்து அமைச்சர்கள் பதவி வகிப்பர்.
  • புதிய அரசியல் அமைப்புகள் தொடங்குவதற்கு தடைகள் இருக்காது. அரசியல் கைதிகள் மற்றும் போராட்ட வீரர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.
  • மன்னர் திரிபுவன் தொடர்ந்து நாட்டின் அனைத்து அதிகாரங்கள் கொண்டவராக செயல்படுவார்.

கூட்டணி அரசு அமைப்பு

[தொகு]

15 பிப்ரவரி 1951 அன்று மன்னர் திரிபுவன் மற்றும் நேபாளி காங்கிரஸ் தலைவர்கள் காட்மாண்டு வந்தடைந்தனர். தில்லி ஒப்பந்தப்படி, 18 பிப்ரவரி 1951ல் மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா தலைமையில், இடைக்கால அமைச்சரவையை மன்னர் நியமித்தார்.

  • அமைச்சரவை

ராணாக்கள் தரப்பில் :

  • 1. மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா - பிரதம அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை
  • 2. வாவர் சம்செர் ஜங் பக்தூர் ராணா - பாதுகாப்புத் துறை
  • 3. சூதராஜ் சம்செர் - வனத்துறை
  • 4. நிரிப ஜங் ராணா - கல்வித் துறை
  • 5. யக்ஞ பகதூர் பஸ்யேந்த் - சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித் துறை

நேபாளி காங்கிரஸ் கட்சி தரப்பில்:

  • 1. மாத்ரிக பிரசாத் கொய்ராலா - உள்துறை[3]
  • 2. சுபர்ண சம்செர் ராணா - நிதித்துறை
  • 3. கணேஷ் மன்சிங் - வணிகம் மற்றும் தொழில் துறை
  • 4. பாரத்மணி சர்மா - உணவு மற்றும் வேளாண்மைத் துறை
  • 5.பத்ரகாளி மிஸ்ரா - போக்குவரத்துத் துறை

பின்னர் நடந்தவைகள்

[தொகு]

நவம்பர், 1951ல் அமைச்சரவையிலிருந்து நேபாளி காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் விலகினர். எனவே மன்னர் திரிபுவன் அமைச்சரவையை கலைத்து விட்டு, 16 நவம்பர் 1951ல் மாத்ரிக பிரசாத் கொய்ராலா தலைமையில் புதிய அமைச்சரவையை மன்னர் நியமித்தார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. cheena. "Nepal". cheena-nepal.blogspot.com.
  2. T. Louise Brown (1 November 2002). The Challenge to Democracy in Nepal. Routledge. pp. 18–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-88533-6.
  3. http://www.nepalicongress.org/index.php?linkId=2
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_புரட்சி,_1951&oldid=4060244" இலிருந்து மீள்விக்கப்பட்டது