நீலகிரி மலைப்பகுதியில் கோடை விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊட்டியின் மலர் கண்காட்சி

கோடை விழா (Summer Festival) என்பது இந்தியாவில் நீலகிரி மலைப் பகுதியில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கொண்டாடப்படும் விழா ஆகும். இவ்விழாவினை, தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையும் தேசியச் சுற்றுலா அமைச்சகமும் ஏற்பாடு செய்து நடத்துகின்றன.

நிகழ்ச்சிகள்[தொகு]

கலை நிகழ்ச்சிகள், மலர் கண்காட்சி, ரோஜாமலர் கண்காட்சி, நாய்க் கண்காட்சி, பழக் கண்காட்சி, நறுமண உணவுப்பொருட்கள் கண்காட்சி, காய்கறிக் கண்காட்சி, படகுவிடும் போட்டி, படகு அணிவகுப்பு ஆகியவை இவ்விழாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளாகும்.[1]

கலை நிகழ்ச்சிகள்[தொகு]

ஊட்டியில் அமைந்துள்ள திறந்தவெளி அரங்கத்தில் (Breeks HADP) பாரம்பரியக் கலைகளை வலியுறுத்தும் நடனம், நாடகம், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மலர்க் கண்காட்சி[தொகு]

மே மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஊட்டியின் தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி நடைபெறுகிறது. 250க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் 150 மேற்பட்ட மலர்வகைகளைக் காட்சிப்படுத்துகின்றனர். இலட்சத்துக்கும் அதிகமானோர் இக்கண்காட்சியைக் காண வருகின்றனர். முதல் மலர்க் கண்காட்சி 1896 ஆம் ஆண்டு நடைபெற்றது. கண்காட்சியின் ஒரு அங்கமாக "சிறந்த தோட்டம்" போட்டியும் நடத்தப்படுகிறது.[2]

ரோஜா மலர்க் கண்காட்சி[தொகு]

ரோஜா மலர்க் கண்காட்சியானது மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஊட்டி அரசு ரோஜாத் தோட்டத்தில் நடைபெறும். ரோஜா மலர்களைக் கொண்டு உருவாக்கப்படும் கோபுரங்களும், ரோஜா இதழ்களைக் கொண்டு வரையப்படும் நிறக்கோலங்களும் இக்கண்காட்சியின் சிறப்புகளாகும். இத் தோட்டத்தில் 3000 க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் உள்ளன.[3]

பழக் கண்காட்சி[தொகு]

பழக் கண்காட்சி, ஆண்டுதோறும் மே மாதத்தின் இறுதி வாரத்தில் குன்னூரில் அமைந்துள்ள சிம்ஸ் பூங்காவில் இரு நாட்கள் நடைபெறுகிறது[1]. தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறையால் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. இக்கண்காட்சியைக் காண பல்லாயிரக்கணக்கோர் வருகின்றனர். 2022 ஆம் ஆண்டு நடந்த பழக் கண்காட்சி 62 ஆவது கண்காட்சியாகும்.[4]

நாய் கண்காட்சி[தொகு]

கோடை விழாவின் ஒரு பகுதியாக ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் வாரத்தில் தென்னிந்திய கென்னல் சங்கத்தால் நாய் கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.[5].[6] 2022 ஆம் ஆண்டு கண்காட்சியில் நடந்த "கீழ்படிதலுக்கான போட்டி" 100 ஆவது போட்டியாகும்.[5]

நறுமண உணவுப் பொருட்கள் கண்காட்சி[தொகு]

கூடலூரிலுள்ள புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளியில் இரு நாட்கள் நறுமண உணவுப் பொருட்கள் கண்காட்சி கோடைவிழாவின் ஒரு பகுதியாக நடபெறுகிறது. இக்கண்காட்சியினை சுற்றுலாத்துறையும் தோட்டக்கலைத்துறையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஏற்பாடு செய்கின்றனர்.[7][8]

காய்கறி கண்காட்சி[தொகு]

கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.[7] இக்கண்காட்சியும் தோட்டக்கலைத்துறையால் ஏற்பாடு செய்யப்படுகிறது. [9]

பிற நிகழ்ச்சிகள்[தொகு]

படகுவிடும் போட்டி, படகுகள் அணிவகுப்பு, பலூன் கண்காட்சி, பாரம்பரிய கட்டிடச் சுற்றுலா, ஒளிப்படப் போட்டி, ஓவியக் கண்காட்சி, மலையேற்றம், பழம் மகிழ்வூர்திகளின் அணிவகுப்பு, மாரத்தான் ஓட்டம், சந்தை கண்காட்சியென இதர நிகழ்ச்சிகளும் இக்கோடைவிழாவின் போது நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]