நியூயார்க் மேல் மாநிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வழுக்கை மலையிலிருந்து புல்டன் தொடர் ஏரிகள் (4வது ஏரி) காட்சி.

நியூயார்க் மேல் மாநிலம் (Upstate New York) என்று நியூ யோர்க் மாநிலத்தின் நியூயார்க் நகரத்திற்கு வடக்கேயுள்ள மாநிலப்பகுதி அழைக்கப்படுகின்றது. நியூயார்க் நகரத்தையும் அதைச் சூழ்ந்துள்ள பகுதிகள், மற்றும் நீள் தீவையும் தவிர்த்த, மாநிலத்தின் பெரும்பகுதி இதில் அடங்கும். இருப்பினும் இதன் சரியான எல்லைகள் எதுவுமில்லை.[1][2] நியூயார்க் மேல்நிலத்தில் பஃபலோ, இரோசெச்டர், ஆல்பெனி, சிராகூசு போன்ற பெரிய நகரங்கள் உள்ளன[2][3];தவிரவும் நியூயார்க் மாநிலத்தின் ஊரகப் பகுதிகள் இதில் அடங்கும்.

நியூயார்க் மேல் மாநிலத்தில் அதிரோன்டாக் மலைகளும் மொகாக் பள்ளத்தாக்கும் அமைந்துள்ளன. பண்பாட்டில், இப்பகுதி நியூயார்க் நகரத்து மக்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. இங்கு குடியேறியவர்களும் நியூயார்க்கில் குடியேறியவர்களும் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள். அரசியலில் நியூயார்க் மேல் மாநிலம் நகரத்தை விட பிற்போக்கானது.

அமெரிக்கப் புரட்சிப் போருக்கு முன்னதாக மேல்மாநிலத்தில் தொல்குடி அமெரிக்கர்கள் வாழ்ந்து வந்தனர்; ஆறு நாடுகளின் இரோக்வாய் கூட்டாட்சி ஆட்சி நடந்தது. இரோக்வாய்களுக்கும் அமெரிக்க விடுதலைப் படையினருக்கும் இடையே பல சண்டைகள் நடந்தன; இந்தச் சண்டைகளுக்குப் பின்னர் ஏற்பட்ட உடன்படிக்கைகளின்படி ஐரோப்பிய குடியேற்றவாதிகளுக்கு பெருநிலப்பகுதிகள் உரிமையாயின. 1825ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ஈரி கால்வாய் நியூ யோர்க் மேல் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டது. அமெரிக்கப் பேரேரிகளை அடுத்த உள்ளக நகரங்களை நியூ யோர்க் நகரத் துறைமுகத்துடன் இணைத்தது. இதன் விளைவாக, மேல் மாநிலத்தில் தயாரிப்புத் தொழில் முனைப்பு பெற்றது; ஜெனரல் எலக்ட்ரிக், ஐபிஎம், ஈஸ்ட்மேன் கோடாக், சிராக்ஸ் போன்ற நிறுவனங்கள் தோன்றி வேறு மாநிலத்தவரை ஈர்த்தன. 20வது நூற்றாண்டின் மத்தியிலிருந்து தொழில்மயமாக்கல் குறைந்ததால் பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ளது; பொருளியல் நிலை தாழ்ந்த, மக்கள்தொகை குறைந்துவரும், நகரமயமாக்கல் சீரழியும் துருப் பட்டை (Rust Belt) எனக் குறிப்பிடப்படும் பகுதியில் பெரும்பகுதியாக நியூயார்க் மேல் மாநிலப்பகுதிகள் உள்ளன.

நியூ யார்க் பெருநகரப் பகுதி போலன்றி பெரும்பகுதி ஊரகப் பகுதியாக விளங்குகின்றது. இங்கு வேளாண்மையும் வேளாண் தொழிலும் முதன்மையாக உள்ளன. பாலும் பாற் பொருட்களும், பழ உற்பத்தி (குறிப்பாக ஆப்பிள்கள்), திராட்சைமது தயாரிப்பு மேலோங்கியுள்ளன.[4] இங்குள்ள இயற்கைவளத்தை நம்பியே நியூயோர்க் நகரம் உள்ளது; குடிநீருக்கும் மின்சாரத்திற்கும் இங்குள்ள நீர்நிலைகள் ஆதரவளிக்கின்றன. இங்கு பல சுற்றுலாத் தலங்களும் மனமகிழ் உறைவிடங்களும் அமைந்துள்ளன; நயாகரா அருவியும் அதிரோன்டாக், கேட்சிகில் மலைகளும் ஃபிங்கர் ஏரிகளும் குறிப்பிடத்தக்கவையாகும்.

பெருநகரங்கள்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]