நார்வீக் சண்டைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் உலகப் போரின் போது நார்வீக் துறைமுகமும் நகரமும்

நார்வீக் சண்டைகள் (Battles of Narvik) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நார்வேயில் நார்வீக் துறைமுகம் அருகே நிகழ்ந்த கடற்படை மற்றும் தரைப்படைச் சண்டைகளைக் குறிக்கின்றன. நார்வே போர்த்தொடரின் ஒரு பகுதியான இவற்றில் நேச நாட்டுப் படைகளும் நார்வீஜியப் படைகளும் நாசி ஜெர்மனியின் படைகளிடமிருந்து நார்வீக்கைக் கைப்பற்ற முயன்று தோற்றன.

ஏப்ரல் 9, 1940 அன்று நார்வே மீதான ஜெர்மானியப் படையெடுப்பு தொடங்கியது. அதே நாள் நேச நாட்டுப் படைகளும் நார்வேயில் தரையிறங்கின. அதுவரை நார்வே நடுநிலை நாடாக இருந்து வந்தது. ஆனால் சுவீடன் நாட்டில் வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாது நார்வே நாட்டின் நார்வீக் துறைமுகத்தின் வழியாக ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. நார்வேயின் நடுநிலையை நம்பாத ஜெர்மானியர்கள் தங்கள் நாட்டின் இரும்புத்தாது இறக்குமதியினைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நார்வே மீது படையெடுத்தனர். இதே போல ஜெர்மனிக்கு இரும்புத்தாது ஏற்றுமதியாவதைத் தடுக்க நேச நாட்டுப் படைகள் நார்வேயில் தரையிறங்கின. நார்வீஜியப் படைகள் ஜெர்மானியரை எதிர்க்க நேச நாட்டுப் படைகளின் உதவியை நாடின. நார்வீக் நார்வேயின் வடபகுதியில் உள்ள ஒரு துறைமுக நகரம். அப்பகுதியில் இருந்த ஒரே உறையாத் துறைமுகம் அது ஒன்று தான். எனவே அதனைக் கைப்பற்ற இரு தரப்பினரும் உடனடியாக முயன்றனர். இதனால் நார்வீக் அருகே கடலிலும் நிலத்திலும் இரு தரப்பினருக்கும் தொடர்ந்து மோதல்கள் நிகழ்ந்தன.

முதலாம் நார்வீக் கடற்படை சண்டை[தொகு]

நார்வீக கடற்படை சண்டைகளின் வரைபடம்

ஏப்ரல் 9ம் தேதி, படையெடுப்பு தொடங்கிய முதல் நாளன்றே ஜெர்மானிய கடற்படை, கிரீக்சுமரீன் நார்வீக் துறைமுகத்தை கடல்வழியாகக் கைப்பற்ற முயன்றது. தரைப்படைப் பிரிவுகளை ஏந்திய கிரீக்சுமரீன் கடற்படைப்பிரிவொன்று ஏப்ரல் 9 அதிகாலை நார்வீக்கைத் தாக்கியது. நார்வீக் துறைமுகத்திற்கு பாதுகாவலாக இருந்த நார்வீஜியக் கப்பல்களை மூழ்கடித்து படைகளைத் தரையிறக்கத் தொடங்கியது. அப்போது ஜெர்மானியக் கப்பல்கள் பிரித்தானியக் கடற்படை டெஸ்டிராயர் கப்பல்களால் திடீரென்று தாக்கப்பட்டன. துறைமுக வாயிலில் நின்று கொண்டிருந்த இரு ஜெர்மானிய டெஸ்டிராயர்கள் மூழ்கடிக்கப்பட்டன. மேலும் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றிருந்த பதினோரு வர்த்தகக் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன. அடுத்த மூன்று நாட்களுக்கு இரு தரப்பு கடற்படைகளும் நார்வீக் அருகே மோதிக்கொண்டன. ஏப்ரல் 12ம் தேதி பிரித்தானியக் கடற்படை தன் முதல் கட்ட தாக்குதலை முடித்துக் கொண்டு பின்வாங்கியது. இத்தாக்குதலில் பிரித்தானிய தரப்பிலும் இரு டெஸ்டிராயர்கள் மூழ்கடிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றால் ஜெர்மானிய படைப்பிரிவுகள் நார்வீக் அருகே தரையிறங்குவதை தடுக்க இயலவில்லை.

இரண்டாம் நார்வீக் கடற்படை சண்டை[தொகு]

நார்வீக் மீது குண்டுவீசும் பிரித்தானியப் போர்க்கப்பல் எச்.எம்.எசு வார்சுபைட்

நார்வீக் துறைமுகத்தை ஜெர்மானியர்களிடமிருந்து கைப்பற்ற வேண்டுமென்று உறுதி பூண்ட பிரித்தானியத் தளபதிகள் அடுத்து வலிமையான ஒரு கடற்படைப்பிரிவை அனுப்பினர். ஏப்ரல் 13ம் தேதி நார்வீக்கை அடைந்த அப்பிரிவில் ஒரு போர்க்கப்பல் மற்றும் ஒன்பது டெஸ்டிராயர்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் அவற்றுக்குத் துணையாக எச். எம். எசு ஃபியூரியசு வானூர்தி தாங்கிக் கப்பலின் வானூர்திகளும் உடன் சென்றன. அப்போது நார்வீக் துறைமுகத்தில் எட்டு ஜெர்மானிய டெஸ்டிராயர்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் எரிபொருள் பற்றாக்குறையால் அவை துறைமுகத்துள் முடங்கிப் போயிருந்தன. அடுத்து நிகழ்ந்த கடற்சண்டையில் மூன்று ஜெர்மானிய டெஸ்டிராயர்களும் இரு நீர்மூழ்கிக்கப்பலும் மூழ்கடிக்கப்பட்டன. எஞ்சிய ஐந்து டெஸ்டிராயர்களும் எரிபொருள் மற்றும் பீரங்கி குண்டுகள் தீர்ந்து போனபின்னால் எதிர்தரப்பிடம் சிக்காமல் தவிர்க்க, அவற்றின் மாலுமிகளால் தகர்க்கப்பட்டன. பிரித்தானிய கப்பல்கள் சிலவற்றுக்கு லேசான சேதங்கள் மட்டும் ஏற்பட்டன. நார்வீக்கிலிருந்த ஜெர்மானியக் கடற்படைப்பிரிவு முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்ட போதிலும் நார்வீக் துறைமுகமும், நகரமும், ஜெர்மானியத் தரைப்படைகளின் கட்டுப்பாட்டில் தான் இருந்தன.

ஏப்ரல் 13க்குப் பின்னர் நார்வீக் அருகே பெரிய அளவில் கடற்படை மோதல்கள் எதுவும் நிகழவில்லை. நேச நாட்டுக்கப்பல்கள் அவ்வப்போது நார்வீக் துறைமுகத்தின் மீது பீரங்கித் தாக்குதல்களை மட்டும் நிகழ்த்தி வந்தன.

நிலச் சண்டை[தொகு]

நார்வீக்கில் ஜெர்மானிய மலைப்படை வீரர்கள்

நார்வீர்க் நகரமும் துறைமுகமும் ஏப்ரல் 9ம் தேதி கடல்வழியாகத் தரையிறங்கிய ஜெர்மானியப் படைகளால் கைப்பற்றப்பட்டன. இரண்டாம் நார்வீக் கடற்படை சண்டையில் மூழ்கடிக்கப்பட்ட ஜெர்மானியக் கப்பல்களின் மாலுமிகளும் இப்படையினருடன் சேர்ந்து கொண்டனர். மொத்தமாக சுமார் 5000 ஜெர்மானிய வீரர்கள் நார்வீக்கை ஆக்கிரமித்திருந்தனர். நகரைக் கைப்பற்ற நார்வீஜியப் படைகளும், ஐந்து நாடுகளைச் சேர்ந்த (பிரிட்டன், பிரான்சு, போலந்து முதலியன) பெரு முயற்சி செய்தன. சுமார் 25,000 நேச நாட்டுப் படைவீரர்கள் நார்வீக்கைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஏப்ரல்-மே மாதங்களில் மெதுவாகப் படிப்படியாக முன்னேறிய நேச நாட்டுப் படைகள் நார்வீக்கை சுற்றி வளைத்தன. மே இறுதியில் நார்வீக்கில் எஞ்சியிருந்த ஜெர்மானியர்கள் சரணடையும் நிலை உருவானது. ஆனால் அப்போது மேற்கு ஐரோப்பாவில் போரின் போக்கு நேச நாடுகளுக்கு எதிராகத் திரும்பியிருந்தது. பெல்ஜியம் சண்டை, நெதர்லாந்து மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளை ஜெர்மானியப் படைகள் எளிதில் வென்றுவிட்டன. மேற்கு ஐரோப்பாவில் நிலையை சமாளிப்பதற்காக நார்வீக்கிலிருந்த நேச நாட்டுப் படைகள் திருப்பி அழைத்துக் கொள்ளப்பட்டன. இதற்குள் தெற்கு நார்வே முழுவதும் ஜெர்மானியர் வசமாகியிருந்தது. நேச நாட்டுப் படைகள் காலி செய்தபின் தனியாக ஜெர்மானியப் படைகளை சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்த நார்வே அரசு போரை நிறுத்திக்கொள்ள முடிவு செய்தது. நார்வே அரச குடும்பத்தினரும், அமைச்சரவையும் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்று அங்கு நாடு கடந்த அரசொன்றை நிறுவினர். எஞ்சியிருந்த நார்வீஜியப் படைகள் ஜூன் 9 தேதி சரணடைந்தன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்வீக்_சண்டைகள்&oldid=1360046" இலிருந்து மீள்விக்கப்பட்டது