ஆல்ஃபபெட் நடவடிக்கை
ஆல்ஃபபெட் நடவடிக்கை (Operation Alphabet) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நார்வேயில் நடைபெற்ற ஒரு படை காலிசெய்தல் நடவடிக்கை. இதன் மூலம் நார்வேயில் போரிட்டுவந்த நேச நாட்டுப் படைகள் அந்நாட்டிலிருந்து பின்வாங்கி இங்கிலாந்து திரும்பின.
ஏப்ரல் 9, 1940 அன்று ஜெர்மானியப் படைகள் நார்வே மீது படையெடுத்தன. அவற்றை எதிர்க்க நேச நாட்டுப் படைகள் கடல்வழியாக நார்வேயில் தரையிறங்கின. அதுவரை நடுநிலை வகித்து வந்த நார்வே நேச நாட்டு ஆதரவுடன், ஜெர்மானியர்களை எதிர்த்துப் போரிட்டு வந்தது. மே 10ம் தேதி, ஜெர்மானியப் படைகள் மேற்கு ஐரோப்பாவில் ஜெர்மானியத் தாக்குதலைத் தொடங்கியது. இரு வாரங்களுள் பல நாடுகள் படையெடுத்தன. பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்சு முதலிய நேச நாடுகளின் படைகளை ஜெர்மானியப் படைகள் எளிதில் முறியடித்துவிட்டன. மேற்கு ஐரோப்பாவில் நிலை மோசமடைந்ததால், நார்வேயிலிருந்து தங்கள் படைகளைத் திரும்பிப் பெற நேச நாட்டுத் தளபதிகள் முடிவு செய்தனர். மே 24ம் தேதி நார்வேயிலிருந்த படைகளுக்கு காலி செய்தல் ஆணை இடப்பட்டது. ஆல்ஃபபெட் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்த இந்த காலி செய்தல் நிகழ்வில் ஜூன் 4-9 தேதிகளில் படைகள் அனைத்தும் கடல்வழியாக இங்கிலாந்துக்கு திரும்பிவிட்டன.
நேச நாட்டுப் படைகளின் பின்வாங்கலால் தனித்து விடப்பட்ட நார்வீஜியப் படைகள், ஜெர்மானியரை எதிர்த்து தாக்குப் பிடிக்க முடியாதென்பதை உணர்ந்து ஜூன் 10ம் நாள் சரணடைந்தன.