தொல்லியல் அருங்காட்சியகம், தானேசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்லியல் அருங்காட்சியகம், தானேசர் இந்தியாவின் அரியானா மாநிலத்தில் தானேசர் என்னும் இடத்தில் உள்ள சேக் சில்லியின் கல்லறைத் தொகுதியில் உள்ளது. இந்த அருங்கட்சியகம் குருச்சேத்திரம், பகவன்புரா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் போது கிடைத்த தொல்பொருட்களைக் காட்சிக்கு வைப்பதற்காக அமைக்கப்பட்டது. இங்கே குருசேத்திராவுக்கும், பகவன்புராவுக்கும் தனித்தனியாக இரண்டு காட்சிக்கூடங்கள் உள்ளன.

குருசேத்திராக் காட்சிக்கூடத்தில் அகழ்வாய்வின்போது அறியப்பட்ட ஆறு காலப்பகுதிகளையும் சேர்ந்த தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை, குசாணர் காலம் (கிபி 1 - 3 ஆம் நூற்றாண்டு), குப்தர் காலம் (கிபி 4 - 6 ஆம் நூற்றாண்டு), வர்தனர் காலம் (கிபி 6 - 7 ஆம் நூற்றாண்டு), இராசபுத்திரர் காலம் (கிபி 8 - 12 ஆம் நூற்றாண்டு) ஆகிய காலப்பகுதிகளுக்குள் அடங்குவனவாகும். இங்குள்ளவற்றில் முத்திரைகள், களிமண் உருவங்கள், அணிகலன்கள், வாள்கள் என்பன குறிப்பிடத்தக்கவை.

பகவன்புராக் காட்சிக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பகவன்புராப் பகுதியில் இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்போது பெறப்பட்டவை. பகவன்புரா சரசுவதி ஆற்றின் வலது கரையில் குருசேத்திராவில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு அரப்பா நாகரிகக் களமாகும். இங்கே இரண்டு விதமான பண்பாடுகள் காணப்பட்டன. இவை பிந்திய அரப்பா பண்பாடும், நிறந்தீட்டிய சாம்பல் மட்பாண்டப் பண்பாடும் ஆகும்.


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]