தேசிய குழந்தைகள் திரைப்பட விழா
தேசிய குழந்தைகள் திரைப்பட விழா (National Children's Film Festival) இந்தியக் குழந்தைகள் திரைப்பட சங்கம் மூலம் நிறுவப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது குழந்தைகள் குறித்த திரைப்படத்திற்கான சந்தையை விரிவுபடுத்தவும் திறமைகளை ஊக்குவிக்கும் முயற்சியாக உள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்திய இயக்க அறிவிப்பின் அடிப்படையில் முதல் தேசிய குழந்தைகள் திரைப்பட விழா தொடங்கப்படும் என்று குழந்தைகள் திரைப்பட சங்கம் அறிவித்தது. இதன் அடிப்படையில் தூய பாரத்தினை கருப்பொருளாகக் கொண்டு முதல் விழா கொண்டாடப்பட்டது.[1]
தேசிய குழந்தைகள் திரைப்பட விழா எனத் தலைப்பிடப்பட்ட இந்த நிகழ்வானது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அல்லது படமாக்கப்பட்ட அல்லது இந்தியத் தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கான திரைப்படங்களைத் திரையிடும் நிகழ்வாகும். இந்தத் திருவிழா மூன்று நாள் நடைபெறும் நிகழ்வாகும். முதல் குழந்தைகள் திரைப்பட விழா தலைநகர் புது தில்லியில் உள்ள சிரி கோட்டை கலையரங்கில் குழந்தைகள் தினமான நவம்பர் 14, 2014-ல் 16 நவம்பர் வரை நடைபெற்றது. இந்நிகழ்வு ஆண்டுதோறும் இந்தியக் குழந்தைகள் திரைப்பட சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த விழாவில் இந்தியக் குழந்தைகள் திரைப்பட சங்கம் மூலம் தயாரிக்கப்பட்ட மற்றும் சமீபத்திய படங்களான பப்பு கி புக்தண்டி உள்ளிட்ட வெளியிடப்படாத படங்களும் திரையிடப்பட்டது. முதல் முறையாக ஷார்ட்கட் சஃபாரி, கபால், ஜிஜிபிபி, யே ஹை சக்கத் பக்கத் பம்பே போ, சம்மர் வித் தி கோஸ்ட், க்ரிஷ் த்ரிஷ் மற்றும் பால்டிபாய் ஆகிய திரைப்படங்களும் இத்திருவிழாவில் வெளியிடப்பட்டன. இதில் திரையிடப்பட்ட பிறத் திரைப்படங்கள் ஹவா ஹவாய் மற்றும் தி பூட் கேக். குழந்தைகளுக்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட தரமான உள்ளடக்கத்தைக் கொண்ட திரைப்படங்களைக் காணும் வாய்ப்பை இத்திருவிழா வழங்குகிறது. இவற்றில் சில படங்கள் உலக அளவில் பல விருதுகளை வென்றுள்ளன.
அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன் மற்றும் சோனாக்சி சின்கா போன்ற நாட்டின் புகழ்பெற்ற பாலிவுட் பிரமுகர்களிடமிருந்து பாராட்டினை தேசிய குழந்தைகள் திரைப்பட விழா பெற்றுள்ளது. இவர்கள் காணொலி காட்சி மூலம் இந்தியக் குழந்தைகள் திரைப்பட சங்கம் மற்றும் தேசிய குழந்தைகள் திரைப்பட திருவிழாவிற்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். சானியா மிர்சா கெளரவ விருந்தினராக இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். மேலும் ஜிம்மி ஷெர்கில் மற்றும் ஷியாமாக் தாவர் குழு போன்ற பிரபலங்கள் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள்.
நோக்கம்
[தொகு]விழாவைப் பற்றிப் பேசிய இந்தியக் குழந்தைகள் திரைப்பட சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சிரவன் குமார், "இந்தியக் குழந்தைகள் திரைப்பட சங்கம் குழந்தைகளுக்கான திரைப்படங்களைத் தயாரிப்பது மட்டுமல்லாமல் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் உருவாக்கவும் விரும்புவதாகத் தெரிவித்தார். இந்த விழாவின் நோக்கம் குழந்தைகளுக்கான திரைப்பட சந்தையை விரிவுபடுத்துவது அல்லது தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பது மட்டுமல்ல, மிகச் சிறிய வயதிலிருந்தே திறமைகளை இனங்கண்டு வளர்ப்பதும் ஆகும். சரியான உள்ளடக்கத்தைக் காட்சிப்படுத்தவும், குழந்தைகள் திரைப்படத் தயாரிப்பையோ அல்லது அதனுடன் தொடர்புடைய ஆக்கப்பூர்வமான வாழ்க்கைப் பாதையையோ தொடர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கினால், நம் நாட்டிலிருந்து வெளிவரும் சிறந்த திறமைகளை நாம் பெறுவோம் என்று நம்புவதாகத் தெரிவித்தார். மேலும் “திரைப்படங்கள், மிகவும் சக்தி வாய்ந்த ஊடகம் என்றும், அதனைத் திறம்படப் பயன்படுத்தினால், பல்வேறு அழுத்தமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்" என்றும் தெரிவித்தார்.
பயிற்சி பட்டறை
[தொகு]தேசிய குழந்தைகள் திருவிழா இளம் பார்வையாளர்களைக் கவரும் ஒரு திருவிழாவாகவும், நடனம், இசை, மந்திர செயல், அசைவூட்டம் மற்றும் "பூட் கேக்" திரைப்படத்தின் அடிப்படையில் சாப்ளின் சிறப்புக் கவனம் செலுத்தும் பட்டறை போன்ற பல்வேறு பயிற்சிப் பட்டறைகள் மூலம் கற்றல் தளமாகவும் திருவிழா நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் குழந்தைகளுக்கான திருவிழாவில் திரைக்காட்சிகளை கண்டு குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
"எனது முதல் திரைப்படம்" எனும் பிரிவின் மூலம் குழந்தைகளுக்கான திரைப்பட தயாரிப்பு பயிற்சிப் பட்டறையும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த பயிற்சியில் குழந்தைகள் எளிதாகவும் வேடிக்கையாகவும் தூண்டப்பட்ட அமர்வுகள் மூலம் தங்கள் சொந்த குறும்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொகுப்பு குறித்து கற்றுக் கொள்ள உதவுகிறது. திரைப்பட உருவாக்கத்தின் அடிப்படைகளை ஆனந்த் பாண்டே வழங்கினர். சபன் நருலா திரைப்படமெடுப்பது மற்றும் அசத்தலான காணொலிகளை எவ்வாறு எடுப்பது விளக்கினார். ரித்தேஷ் தக்சாண்டே தொகுப்பு மற்றும் காட்சி தாக்கம் குறித்த அமர்வில் கருத்தாளராகச் செயல்பட்டார். பயிலரங்கில் பயிற்சி பெற்ற குழந்தைகள் ஒளிமி மற்றும் அலைப்பேசிகளைப் பயன்படுத்தி ஒரு குறும்படத்தை உருவாக்க முடிந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ staff (8 November 2014). "Children’s Film Society of India Launches the First Edition of National Children’s Film Festival". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Childrens-Film-Society-of-India-Launches-the-First-Edition-of-National-Childrens-Film-Festival/articleshow/45079837.cms. பார்த்த நாள்: 9 November 2014.