தெற்கத்திய நீளவால் கீச்சான்
தெற்கத்திய நீளவால் கீச்சான் அல்லது தெற்கத்திய கருஞ்சாம்பல்முதுகு கீச்சான் (அறிவியல் பெயர்: Lanius schach caniceps) என்பது நீளவால் கீச்சானின் துணையினம் ஆகும்.[1] இது மேற்கு, நடு, தென்னிந்தியா, இலங்கை ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]மைனாவை விட சிறிய பறவையான தெற்கத்திய நீளவால் கீச்சான் நீண்ட வாலுடன் காட்சியளிக்கும். இது சுமார் 25 செ. மீ. நீளம் இருக்கும். இப்பறவையின் அலகு கொம்பு நிறமான கருப்பாகவும், விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் கறுப்புத் தோய்ந்த பழுப்பாகவும் இருக்கும். இது பெரிய தலையோடு, பருத்த வளைந்த அலகோடும் இருக்கும். இதன் வால் நீண்டும் நுனி நோக்கிச் செல்லச் செல்ல குறுகியதாக இருப்பதைக் கொண்டு அடையாளம் காண இயலும். இதன் நெற்றியும் கண் வழியாக செல்லும் பட்டையும் கறுப்பு நிறத்தில் இருக்கும். தலையும் முதுகும் கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும்.[2] இதன் பிட்டம் நல்ல கருஞ்சிவப்பாக இருக்கும். உடலின் அடிப்பகுதி கருஞ்சிவப்புத் தோய்ந்த வெண்மை நிறத்தில் இருக்கும். வால் கறுப்பும் வெளிர் கருஞ்சிவப்பும் கலந்து காணப்படும். இறக்கைகளில் வெள்ளைத் திட்டுகள் காணப்படும்.
பரவலும் வாழிடமும்
[தொகு]தெற்கத்திய நீளவால் கீச்சான் மேற்கு, நடு, தென்னிந்தியா, இலங்கை ஆகிய இடங்களில் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் விளை நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், நீர்வளம் மிகுந்த பகுதிகளைச் சார்ந்த இலையுதிர் காட்டுச் சூழலிலைச் சார்ந்து காணப்படும். மலைகளில் 1200 மீட்டர் உயரம் வரை காணப்படும்.[3]
நடத்தை
[தொகு]இப்பறவையானது ஓணான், தவளை போன்றவற்றைப் பிடித்து முள்ளில் குத்திவைத்திருந்து பின்னர் வேண்டும்போது உண்ணும் பழக்கம் கொண்டது.[3]
தெற்கத்திய நீளவால் கீச்சான் மார்ச் முதல் சூன் முடிய இனப்பெருக்கம் செய்யக்கூடியது. இது முள் மரங்களில் தரையில் இருந்து நான்கு அல்லது ஐந்து மீடர் உயரத்திற்குள் உள்ள சிறு கிளைகளின் பிரிவில் குச்சிகள், வேர்கள், புற்கள் போன்ற பொருட்களைக் கொண்டு கோப்பை வடிவிலான கூட்டைக் கட்டும். கூட்டில் நான்கு முதல் ஆறு வரையிலான முட்டைகளை இடும். இதன் முட்டைகள் வெளிர் புசுமைத் தோய்ந்த வெண்மையாகச் செம்பழுப்புக் கறைகளைக் கொண்டதாக இருக்கும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2022). "Shrikes, vireos, shrike-babblers". IOC World Bird List Version 12.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 3 March 2022.
- ↑ Ali, S & Ripley, SD (1986). Handbook of the Birds of India and Pakistan. Volume 7 (2nd ed.). New Delhi: Oxford University Press. pp. 93–98.
- ↑ 3.0 3.1 3.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 348–349.