உள்ளடக்கத்துக்குச் செல்

தெற்கத்திய சிறிய மின்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெற்கத்திய சிறிய மின்சிட்டு (அறிவியல் பெயர்: Pericrocotus cinnamomeus cinnamomeus) என்பது சிறிய மின்சிட்டின் துணையினம் ஆகும்.[1]

விளக்கம்

[தொகு]

தெற்கத்திய சிறிய மின்சிட்டு சிட்டுக்குருவியைவிட சிறியதாக சுமார் 15 செ.மீ. நீளம் இருக்கும். இதன் வால் சற்று நீண்டு இருக்கும். இப்பறவையில் ஆண் பெண் பறவைகளுக்கு இடையில் பால் ஈருருமை உள்ளது. ஆண் பறவையில் தலை, தொண்டை, முதுகு ஆகியன ஆழ்ந்த கருஞ்சாம்பல் நிற்றத்தில் இருக்கும். பிட்டம் ஆரஞ்சு சிவப்பாகவும், இறக்கைகள் கருப்பாக ஆரஞ்சு மஞ்சள் கறைகளுடன் காணப்படும். இதற்கு உள்ள நீண்ட வாலின் மேற்பகுதி கறுப்பாகவும் அடிப்பகுதி ஆரஞ்சு மஞ்சளாகவும் இருக்கும். இதன் மார்பு நல்ல ஆரஞ்சு நிறத்திலும், வயிறு மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.[2]

பெண் பறவையின் உடலின் மேற்பகுதி ஆணைப்போன்றே காணப்படும். ஆனால் உடலின் அடிப்பகுதி வெளிர் சாம்பல் நிறமாகச் சற்று மஞ்சள் தோய்ந்து காணப்படும்.[2]

பரவலும் வாழிடமும்

[தொகு]

இப்பறவை தென்னிந்தியாவில் கேரளம் தவிர ஆங்காங்கே வறல் காடுகளிலும், தோப்புகளிலும் காணப்படுகிறது. மலைகளில் 1500 மீட்டர் உயரம் வரை காணப்படும்.[2]

நடத்தை

[தொகு]

தெற்கத்திய சிறிய மின்சிட்டு சமவெளிகளில் தோப்புகள் சாலையோர மரங்கள் ஆகியவற்றில் ஐந்து முதல் எட்டு வரையிலான சிறு கூட்டமாக காணப்படும். இரைதேடும் பிற பறவைக் கூட்டங்களுடன் சேர்ந்தே இரை தேடக்கூடியது. நுனிச் சிமிர்களில் தாவித் தாவிப் பறந்து பூச்சிப் புழுக்களைப் பிடிக்கும். பறக்கும் பூச்சிகளைத் தாவித் தாவிப் பிட்டபதும் உண்டு. கம்பளிப்பூண்ணி போன்ற சிறிய புழு பூச்சிகள் இதன் உணவாகும்.[2]

ஸ்வீஇ, ஸ்வீஇ எனப் பறக்கும்போது கீழ்க்கைக் குரலில் ஒலி எழுப்பும்.

இனப்பெருக்கம்

[தொகு]

இவை பெப்ரவரி முதல் செப்டம்பர் வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இனப்பெருக்க காலத்தில் இணையாக இவை காணப்படும். மரக்கிளையில் புல், வேர், காளான், மரப்பட்டை முதலியவற்றைக் கொண்டு கோப்பை வடிவில் கூடு அமைக்கும். இரண்டு முதல் நான்கு வரையிலான முட்டைகளை இடும். இதன் முட்டை வெளிர் நீலமாகவோ பசுமை கலந்த வெண்மையாகவோ செம்பழுப்புப் புள்ளிகளுடன் காணப்படும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pericrocotus cinnamomeus (Small Minivet) - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2022-06-29.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 381–382.