தமிழகத் தாழிகளின் காலம்
தமிழகத் தாழிகளின் காலம் என்பது முதுமக்கள் தாழிகள் தமிழகத்தில் வழக்கில் இருந்த காலமாகும். பொதுவாக தமிழகத்தில் பெருங்கற்காலத்து வட்டத்துக்குள்ளே (கி.மு. 1000 - கி.பி. 300) முதுமக்கள் தாழிகளின் காலத்தையும் ஆராய்ச்சியாளர்கள் அடக்கி விடுகின்றனர். ஆனால் கி.பி. 1990களுக்குப் பிற்பட்ட தமிழக அகழாய்வு முடிவுகளின் படி தமிழ்கத்தில் முதுமக்கள் தாழிகளின் காலம் தமிழகத்தில் பெருங்கற்காலத்துக்கு (கி.மு. 1000 - கி.பி. 300) முந்தியது என்று நிறுவுகின்றன.
குறிஞ்சியும் முல்லையும் கொண்ட பெருங்கற்படைச் சின்னங்கள்[தொகு]
தமிழகத்தில் குறிஞ்சி நிலங்களிலும் முல்லை நிலங்களிலுமே பெருங்கற்படை சின்னங்களான கல்திட்டைகள், கற்பதுக்கைகள், குத்துக்கற்கள், நடுகற்கள், கற்குவைகள் ஆகியவை அதிகம் காணப்படுகின்றன. இவை காணப்ப்டும் இடங்களாக தொண்டை நாட்டுப்பகுதிகளும், கொங்கு நாட்டுப் பகுதிகளும் பாண்டிய நாட்டின் மேற்குப் பகுதிகளாகவே இருப்பதால் இச்சின்னங்களின் பண்பாட்டுக் கூறுகள் வடக்கிலிருந்து தெற்கில் பரவியதாகவே ஆய்வாளர்கள் கருதினர்.
இப்பெருங்கற்படை சின்னங்கள் உருவாவதற்கு கற்கள் அதிகம் தேவைப்படுவதால் இவை குறிஞ்சி நிலங்களிலும் முல்லை நிலங்களிலுமே அதிகம் இருந்தன. மேலும் வடமேற்கு அல்லது மத்திய தமிழகத்தில் அமைந்துள்ள பகுதிகளான பையம்பள்ளி, அப்புக்கல், மயிலாடும்பாறை போன்ற பகுதிகளில் செய்யப்பட்ட அகழாய்வுகள் வடதமிழகம் புதிய கற்காலத்தில் (கி.மு. 3000 - 1000) இருந்து பெருங்கற்காலத்திற்கு (கி.மு. 1000 - 300) மாறியதை சுட்டுகின்றன.[1][2][3]
மருதமும் நெய்தலும் கொண்ட தாழிகள்[தொகு]
தமிழகத்தின் மருத நிலப் பகுதிகளான தென் பெண்ணை, காவிரி, வைகை, தாமிரபரணி ஆகிய ஆற்றுப் படுகைகளிலும் நெய்தல் பகுதிகளான காஞ்சிபுரம் போன்ற இடங்களிலும் அதிகமாக முதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன. மருதமும் நெய்தலும் மண் வளமிக்கவை என்பதால் இவற்றில் தாழிகள் செய்வதற்கான மூலப் பொருட்கள் அதிகம் கிடைத்திருக்கும் எனலாம்.
மேலே வடமேற்குத் தமிழகத்துக்கு கூறப்பட்டது போல் புதிய கற்காலத்தில் (கி.மு. 3000 - 1000) இருந்து பெருங்கற்காலத்திற்கு தென்தமிழகம் வளர்ச்சி அடையவில்லை. மாறாக தென்தமிழக மற்றும் தமிழக நெய்தக் பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் குறுனிக்கற்காலத்திலிருந்து (கி.மு. 10,000 முதல் கி.மு. 2,000) நேரடியாக தாழிகளின் காலத்திற்கு அசுர வளர்ச்சி அடைந்தது எனச் சுட்டுகின்றன.[4][5]
காரணங்கள்[தொகு]
இப்பெருங்கற்படைச் சின்னங்களின் காலமும் தாழிகளின் காலமும் ஒன்றென ஆராய்ச்சியாளர்கள் கொள்வதற்கான காரணங்கள்,
- பெருங்கற்படைச் சின்னங்களில் காணப்படும் கறுப்பு சிவப்பு மட்பாண்டங்கள் இத்தாழிகளின் ஊடே காணப்படுதல்.
- தாழிகளினுள் கிடைக்கும் இரும்புப் பொருட்கள் பெருங்கற்படைச் சின்னங்களிலும் காணப்படுதல்.
தவறு[தொகு]
பெருங்கற்படைச் சின்னங்களின் காலமும் தாழிகளின் காலமும் ஒன்றென ஆராய்ச்சியாளர்கள் கொள்வது தவறென்பதற்காக ஆய்வாளர்கள் முன்வைக்கும் சான்றுகள்,
- முதுமக்கள் தாழிகளுடன் பெருங்கற்படைச் சின்னங்கள் இணைந்து காணப்படாமை.
- அகழாய்வில் கிடைக்கும் தரவுகளின் படி தாழிகள் பெருங்கற்படைச் சின்னங்களுக்கு காலத்தால் முந்தியனவாகவும் காணப்படும் தன்மை.
- பெருங்கற்படை சமூகத்தை அதிகம் சார்ந்த வடதமிழகம் புதிய கற்காலத்தில் இருந்து பெருங்கற் சமூகத்துக்கு நிலையான வளர்ச்சி அடைந்ததும், மாறாக தாழிகளை அதிகம் சார்ந்திருந்த மத்திய மற்றும் தென் தமிழக கடற்கறைக்கு நெருக்கமான இடங்கள் இடைக்கற்காலத்தில் இருந்து நேரடியாக தாழிகளின் காலத்திற்கு வளர்ச்சி அடைந்த தன்மையும்.
- மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலில் அமைந்துள்ள தேனி-கம்பம் பள்ளத்தாக்குகளில் கிடைத்தவை அனைத்தும் தாழிகளாகவே உள்ளன. இப்பகுதி குறிஞ்சி மற்றும் மருதம் நிலப்பகுதிகள் இணைந்த இடமாகும்.
- தமிழ் இலக்கியங்களில் வரும் சான்றுகளின் படி பாண்டியர் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வந்த சான்றுகளே கிடைத்துள்ளமை.
அறிஞர்களின் முடிவுகள்[தொகு]
மேலுள்ள சான்றுகளைக் கொண்டு சில ஆய்வாளர்கள் பின் வரும் முடிவுகளை முன் வைக்கின்றனர்.
“ | பெருங்கற்படைச் சின்னங்களை உருவாக்கும் பழக்கம் வடதமிழகத்தில் ஊடுருவும் முன்னரே இரும்பின் பயன்பாடும், கறுப்பு சிவப்புப் பானை ஓடுகலின் பண்பாடும் தமிழகத்தின் தெற்குப் பகுதியில் ஊடுருவி விட்டன எனலாம். அதனால் முதுமக்கள் தாழிகளைத் தமிழகத்தில் பயன்படுத்தியவர்கள் பெருங்கற்படைச் சின்னங்களை பயன்படுத்திய மக்களைக் காட்டிலும் காலத்தால் முந்தியவர்கள் ஆவர். எனவே பெருங்கற்படைகளைக் கொண்டு நினைவுச் சின்னங்களை உருவாக்காமல் தாழிகளை மட்டுமே பயன்படுத்திய மக்களின் பண்பாட்டை பெருங்கற்காலத்துக்குள் உள்ளடக்கி கால நிர்ணயம் செய்வதை தவிர்க்கலாம்.- கா. ராஜன் | ” |
“ | நாங்கள் செய்த ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பெருங்கற்காலத்திற்கும் (கி.மு. 1000க்கு முன்) முற்பட்ட பண்பாட்டைக் கண்டோம். இங்கு கண்டது நல்ல அடுக்கு நிலைச் சமூகமாகும். இங்கு காணப்படும் பானையோடுகள் பெருங்கற்கால பானையோடுகளில் இருந்து மிகவும் வேறுபட்டவை. - சத்தியமூர்த்தி | ” |
“ | காஞ்சிபுர அகழாய்வில் கிடைத்த தாழிகளில் பெருங்கற்கால குறிகள் காணப்படவில்லை. மேலும் இத்தளம் ஆதிச்சநல்லூரை விட பழமையானது எனவும் கருத முடியும். தாழிகளோடு பெருங்கற்கால சின்னங்கள் காணப்பட்டிருந்தால் இவை பெருங்கற்காலத் தாழிகள் ஆகும். ஆனால் இத்தாழிகளில் அப்படிக் காணப்படாதலால் இது பெருங்கற்காலத்துக்கும் முற்பட்ட தாழிகளாகும். அதனால் ஆய்வாளர்கள் தாழிகளின் தோற்றத்தை பெருங்கற்காலத்துக்குள் அடக்கிப் பார்ப்பதை தவிர்க்கலாம். - சத்தியமூர்த்தி மற்றும் இளங்கோ | ” |
மூலம்[தொகு]
- கா. ராஜன் (2004). தொல்லியல் நோக்கில் சங்ககாலம். சென்னை - 600 113: International Institute of Tamil Studies. பக். 8 - 14.
- டி. சத்யமூர்த்தி. "Adichanallur". archaeologyindia.com. 2013-01-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 12, 2013 அன்று பார்க்கப்பட்டது.
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
- ↑ கா. ராஜன் (2003). "மயிலாடும்பாறை அகழாய்வுகள்". ஆவணம் - தமிழகத் தொல்லியல் துறையின் இதழ் 14: 120 - 126.
- ↑ Rao R.S. (1964-1965). Excavations at Paiyampalli, District North Arcot. Indian Archaeology - Ar eview. பக். 22-23.
- ↑ Rao R.S. (1967-1968). Excavations at Paiyampalli, District North Arcot. Indian Archaeology - Ar eview. பக். 26-30.
- ↑ Shetty and Ashok Vardhan K (2003). / Excavations at Mangudi. Chennai: Department of Archaeology, Government of Tamilnadu.
- ↑ T.S. Subramanian. "Urn burial site discovered near Kancheepuram". History and Culture - The Hindu. doi:24 April 2013. http://www.thehindu.com/news/national/tamil-nadu/urn-burial-site-discovered-near-kancheepuram/article3294390.ece.