தன்னூட்ட உயிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தன்னூட்ட உயிரிகளுக்கும், சார்பூட்ட உயிரிகளுக்கும் இடையிலான சுற்றுத் தொடர்பின் ஒரு பார்வை. தாவரங்கள், அல்காக்கள், பல பக்டீரியாக்கள் என்பன காபனீரொட்சைடு, நீர் ஆகியவற்றிலிருந்து கரிமச் சேர்வைகளையும், ஒட்சிசனையும் உருவாக்கும் முக்கிய வழி ஒளித்தொகுப்பு ஆகும். (green arrow).

தன்னூட்ட உயிரி (autotroph) அல்லது, உற்பத்தி செய்யும் உயிரி என்பது சூழலில் காணப்படும் எளிமையான பொருட்களுடன் சூரிய ஒளி ஆற்றலையும் (ஒளித்தொகுப்பு) கரிமமில் வேதியியல் வினைகளையும் (வேதித்தொகுப்பு) பயன்படுத்தி, சிக்கலான கரிமச் சேர்மங்களை உற்பத்தி செய்யும் உயிரியைக் குறிக்கும். இவ்வாறு உற்பத்தியாகும் சிக்கலான கரிமச் சேர்மங்களுள் கார்போவைதரேட்டுகள், கொழுப்புகள், புரோட்டீன்கள் என்பன அடங்கும். உணவுச் சங்கிலியில், இவ்வாறு உணவைத் தாமே உற்பத்தி செய்யும் உயிரிகளுள் நிலத்தில் வாழும் தாவரங்களும், நீரில் வாழும் அல்காக்களும் அடங்குகின்றன. இதற்கு முரணாகச் சார்பூட்ட உயிரிகள் தன்னூட்ட உயிரிகளை உட்கொண்டு வாழ்கின்றன. தன்னூட்ட உயிரிகள், காபனீரொட்சைடைத் தாழ்த்துவதன் மூலம், உயிர்த்தொகுப்புக்குத் தேவையான கரிமச் சேர்மங்களை உருவாக்குவதுடன், வேதியியல் ஆற்றல் சேமிப்பையும் உருவாக்குகின்றன. பெரும்பாலான தன்னூட்ட உயிரிகள் நீரைத் தாழ்த்திகளாகப் பயன்படுத்துகின்றன. ஆனால், சில தன்னூட்ட உயிரிகள் ஐதரசன் சல்பைடு போன்ற ஐதரசன் சேர்மங்களைப் பயன்படுத்துகின்றன. தன்னூட்ட உயிரிகளுள் ஒரு வகையான ஒளியியைபிகள் (Phototrophs) சூரிய ஒளியில் இருக்கும் மின்காந்த ஆற்றலை தாழ்த்திய கரிம வடிவில் வேதியியல் ஆற்றலாக மாற்றுகின்றன.

தன்னூட்ட உயிரிகள், ஒளித்தன்னூட்ட உயிரிகளாகவோ வேதித்தன்னூட்ட உயிரிகளாகவோ இருக்கலாம். ஒளியியைபிகள், சூரிய ஒளியை ஆற்றல் மூலமாகப் பயன்படுத்துகின்ற அதேவேளை, வேதியூட்ட உயிரிகள் மின்னணு வழங்கிகளை ஆற்றல் மூலங்களாகப் பயன்படுத்துகின்றன. தன்னூட்ட உயிரிகளைப் பொறுத்தவரை, இந்த மின்னணு வழங்கிகள் கரிமமில் வேதி மூலங்களில் இருந்து வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்னூட்ட_உயிரி&oldid=2747729" இலிருந்து மீள்விக்கப்பட்டது