டியேகோ வெலாஸ்க்குவெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டியேகோ வெலாஸ்க்குவெஸ்
Diegovelazquezselfportrait.jpg
டியேகோ வெலாஸ்க்குவெஸ் தன்னைத்தானே வரைந்த படம், 1643. உஃபிசி ஓவியக் கூடம், புளோரன்ஸ், இத்தாலி
தேசியம் எசுப்பானியர்
அறியப்படுவது ஓவியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள் லாஸ் மெனினாஸ் (1656),
La Venus del espejo (Rokeby Venus) (1644-1648)
La Rendición de Breda, (பிரேடாவின் சரணாகதி) (1634-1635)

டியேகோ வெலாஸ்க்குவெஸ் என்று அறியப்படும் டியேகோ ரொட்ரிகுவெஸ் டெ சில்வா யி வெலாஸ்க்குவெஸ் (Diego Rodríguez de Silva y Velázquez - ஜூன் 6, 1599 – ஆகஸ்ட் 6, 1660) ஒரு எசுப்பானிய ஓவியர். இவர் அரசர் நாலாம் பிலிப்பின் அரசவையில் முன்னணி ஓவியராக விளங்கினார். இவர் உருவப்படங்களை வரைவதில் சிறந்து விளங்கினாலும், வரலாறு, பண்பாடு ஆகியவை தொடர்பில் முக்கியத்துவம் கொண்ட பல ஓவியங்களையும் வரைந்துள்ளார். இவர் ஓவியமாக வரைந்தவர்களுள் ஏராளமான அரச குடும்பத்தினர், குறிப்பிடத்தக்க ஐரோப்பியப் பிரமுகர்கள், பொது மக்கள் போன்ற பலர் அடங்குவர். இவற்றின் உயர் நிலையில் புகழ் பெற்ற ஓவியமான லாஸ் மெனினாஸ் (1656) என்னும் ஓவியம் விளங்குகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் காலாண்டிலிருந்து வெலாஸ்க்குவெசின் ஓவியங்கள், உண்மையிய மற்றும் உணர்வுப்பதிவிய ஓவியர்களுக்கு மாதிரிகளாக விளங்கின. இவர்களுள் எடுவார்ட் மனெட் குறிப்பிடத்தக்கவர். அக் காலத்திலிருந்து ஸ்பெயினின் பாப்லோ பிக்காசோ, சல்வடோர் டாலி, ஆங்கில-ஐரிய ஓவியர் பிரான்சிஸ் பேக்கன் போன்ற நவீன ஓவியர்கள் வெலாஸ்க்குவெசின் புகழ் பெற்ற ஓவியங்கள் பலவற்றை மீள வரைந்ததின் மூலம் அவருக்கு மதிப்புக் கொடுத்துள்ளனர்.

இளமைக் காலம்[தொகு]

வெலாஸ்குவெஸ் ஸ்பெயின் நாட்டிலுள்ள அண்டலூசியாவில் உள்ள செவில் (Seville) என்னுமிடத்தில் 1599 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி பிறந்தார். அதே நாளில் ஞானஸ்நானமும் செய்ய்விக்கப்பட்டார். இவரது தந்தை ஜுவான் ரொட்ரிகஸ் டி சில்வா ஒரு சட்ட வல்லுனர். இவரது தாய் தந்தையரான டியோகோ டா சில்வாவும், மரியா ரொட்ரிகசும் போர்த்துக்கேய யூதர்கள். டியேகோ வெலாஸ்குவெஸ் அவரது பெற்றோரால் இறைவனுக்குப் பயந்து வாழும்படி கற்பிக்கப்பட்டதுடன், அவர் ஒரு உயர் தொழில் வல்லுனராக வேண்டும் என விரும்பினர். அவர் மொழிகள், மெய்யியல் என்பவற்றில் நல்ல பயிற்சி பெற்றார். ஆனால் இவர் மிக இளமையிலேயே தனது ஓவியத் திறமையை வெளிப்படுத்தினார். இதனால் இவர் திறமையான ஓவியரான பிரான்சிஸ்கோ டி ஹெரேரா என்பவரின் கீழ் ஓவியம் பயிலுவதற்காகச் சேர்ந்தார். வெலாஸ்குவெஸ் இவருடன் ஓராண்டு இருந்தார். நீண்ட ரோமங்களைக் கொண்ட தூரிகைகளைப் பயன்படுத்துவதை ஹெரேராவிடம் இருந்தே வெலாஸ்குவெஸ் கற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.