உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்சிஸ் பேக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்சிஸ் பேக்கன்
சர் பிரான்சிஸ் பேக்கன்
பிறப்பு(1561-01-22)22 சனவரி 1561
ஸ்ட்ராண்ட், லண்டன், இங்கிலாந்து
இறப்பு9 ஏப்ரல் 1626(1626-04-09) (அகவை 65)
ஹைகேட், லண்டன், இங்கிலாந்து
படித்த கல்வி நிறுவனங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
காலம்அறிவியல் புரட்சி
பகுதிமேற்கத்திய மெய்யியல்
பள்ளிபட்டறிவுவாதம்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
கையொப்பம்

பிரான்சிஸ் பேக்கன் (Francis Bacon, 22 ஜனவரி 1561 – 9 ஏப்ரல் 1626) ஆங்கில மெய்யிலாளர். பல ஆண்டுகள் முன்னணி அரசியல் தலைவராக விளங்கிய அறிவியலாளர், வழக்கறிஞர், சட்ட நிபுணர், ஆசிரியர் மற்றும் அறிவியல் முறை முன்னோடி ஆவார். அறிவியலும் தொழில் நுட்பமும் இந்த உலகை அடியோடு மாற்றிவிடும் என்பதை உணர்ந்த முதலாவது தத்துவ ஞானி. அறிவியல் ஆராய்ச்சிகளை தீவிரமாக ஆதரித்த முதல் தத்துவஞானியும் ஆவார்.

இளமை

[தொகு]

எலிசபெத் அரசியின் உயர் அதிகாரி ஒருவரின் இளைய மகனாக 1561 ஆம் ஆண்டில் லண்டனில் பேக்கன் பிறந்தார். அவர் தனது 13 ஆம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் மூன்றாண்டுகள் பயின்ற பிறகு பட்டம் பெறாமலே வெளியேறினார். 16 ஆம் வயதில் பிரித்தானிய தூதரகத்தில் ஓர் ஊழியராகச் சேர்ந்து சில காலம் பணியாற்றினார். ஆனால் இவருடைய 18 ஆவது வயதில் இவரின் தந்தை காலமானதால் சொத்தோ பணமோ இன்றி பேக்கன் ஏழ்மையில் வாடினார். ஆனால் அவர் எப்படியோ சட்டம் பயின்று தம் 21 ஆம் வயதில் வழக்குரைஞராக ஆனார்.

அரசியல்

[தொகு]

பேக்கன் வழக்குரைஞரான உடனேயே அவரது அரசியல் வாழ்வு தொடங்கியது. அவரது 28 ஆம் வயதில் இங்கிலாந்தில் மக்கள் பேரவைக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு உயர் வட்டாரங்களில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் இருந்தனர். அவரும் மதி நுட்பம் வாய்ந்தவராக விளங்கினார். எனினும், அரசி தீவிரமாக ஆதரித்த ஒரு வரி விதிப்புச் சட்ட முன் வடிவை நாடாளுமன்றத்தில் பேக்கன் மிகத் துணிவோடு எதிர்த்த காரணத்தால் எலிசபெத் அரசி, அவரை உயர்ந்த பதவி எதிலும் அமர்த்தப் பிடிவாதமாக மறுத்து வந்தார்

அப்போது அரசியல் புகழார்வம் கொண்ட இளைஞராகவும் செல்வாக்குப் பெற்றவராகவும் விளங்கிய கோமகனுடன் பேக்கன் நட்புக் கொண்டு, அவருக்கு ஆலோசகரானார். இதற்குக் கைம்மாறாக, கோமகன் பேக்கனின் நெருங்கிய நண்பராகவும், தாராளப் புரவலராகவும் ஆனார். கோமகன் எலிசபெத் அரசிக்கு எதிராக ஒரு புரட்சிக்குத் திட்டமிட்டார். இதை பேக்கன் விரும்பவில்லை. "எனது பற்றுறிதி முதலில் அரசிக்கே உரியது" என்று கோமகனுக்குப் பேக்கன் எச்சரிக்கை விடுத்தார். எனினும், அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் கோமகன் புரட்சியில் இறங்கினார். அந்தப் புரட்சி தோல்வியடைந்தது. கோமகன் மீது அரசுத் துரோகக் குற்றம் சாட்டியதில் பேக்கன் தீவிரப்பங்கு கொண்டார். இறுதியில், கோமகன் சிரச் சேதம் செய்யப்பட்டார். இது பலருக்கு பேக்கனிடம் வெறுப்பை உண்டாக்கியது.

பதவிகள்

[தொகு]
Bacon, Sylva sylvarum

எலிசபெத் அரசி 1603 ஆம் ஆண்டில் காலமானார். அவருக்குப் பின் அரியணையேறிய முதலாம் ஜேம்ஸ் மன்னருக்கு பேக்கன் ஓர் ஆலோசகரானார். பேக்கனின் ஆலோசனையை ஜேம்ஸ் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. ஆயினும் அவர் பேக்கனைப் பெரிதும் போற்றினார். அவரது ஆட்சிக் காகலத்தின் பேக்கன் அரசியலில் படிப்படியாக உயர் பதவிகளைப் பெற்று வந்தார். 1607 ஆம் ஆண்டில் பேக்கன் அரசு முதன்மை வழக்குரைஞராக நியமனம் பெற்றார். அதே ஆண்டில் பேக்கன் ஓர் இளங்கோமானாக நியமிக்கப்பட்டார். 1621 ஆம் ஆண்டில் அவர் இளங்கோவரையர் பட்டத்தையும் பெற்றார்.

ஊழல்களும் தண்டனையும்

[தொகு]

பேக்கன் நீதிபதியாகப் பணியாற்றியபோது, தம் முன்பு வழக்காடியவர்களிடமிருந்து பல "கொடைப் பொருள்"களைப் பெற்றுக் கொண்டிருந்தார். அவ்வாறு பெற்றுக் கொள்வது ஒரு சட்ட விரோதச் செயலேயாகும். நாடாளுமன்றத்திலிருந்த அவரை அரசியல் எதிரிகள், அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். பேக்கன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். பேக்கனுக்கு லண்டன் கோபுரச் சிறையில் சிறைத் தண்டனையும், கடும் பணத்தண்டமும் விதிக்கப்பட்டது. விரைவிலேயே அவரை சிறையிலிருந்த அரசர் விடுவித்தார். அவரது பணத்தண்டமும் நீக்கப்பட்டது. பேக்கனின் அரசியல் வாழ்வு அத்துடன் முடிந்து போயிற்று.

பேக்கன் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தீர்ப்புக் குறித்து கூறிய கருத்து. "இந்த 50 ஆண்டுகளிலேயே இங்கிலாந்தில் மிகவும் நேர்மையான நீதிபதியாக நான் இருந்தேன். ஆனால், இந்த 200 ஆண்டுகளிலேயே நாடாளுமன்றத்தில் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிகவும் நேர்மையானது என்று நான் கருதுகிறேன்."

படைப்புகள்

[தொகு]

பேக்கனின் புகழுக்கு அவருடைய அரசியல் அல்லாத மெய்விளக்கத் தத்துவ எழுத்துகள் முழுமுதற் காரணமாய் அமைந்தன. அவரது முக்கியப் படைப்பாகிய "ஆய்வுக் கட்டுரைகள்" என்ற நூல் 1597 ஆம் ஆண்டில் வெளியானது. இந்நூல் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. இந்நூல் பொருட்செறிவும், மிடுக்கும் வாய்ந்த இனிய நடையில் எழுதப்பட்டுள்ளது. அரசியல் விவகாரங்கள் பற்றி மட்டுமின்றி, அவருடைய சொந்த விவகாரங்கள் குறித்தும் ஏராளமான "துரோக நோக்குடைய கருத்துகள்" இதில் இடம் பெற்றுள்ளன.

அறிவியல் அனுகுமுறைகள்

[தொகு]

அறிவியல் பற்றிய பேக்கனுடைய எழுத்துகள் மிக மிக முக்கியமானவை. "மாபெரும் மறுமலர்ச்சி" என்னும் ஒரு பெரிய நூலை ஆறு தொகுதிகளாக எழுத அவர் திட்டமிட்டிருந்தார். முதல் தொகுதியில் தமது அறிவுச் செல்வத்தின் இன்றைய நிலையும், இரண்டாம் தொகுதியில் அறிவியல் ஆராய்ச்சிக்கான ஒரு புதிய முறையும், மூன்றாம் தொகுதியில் செயலறிவால் அறிந்து கொள்ளப்படுகிற தகவல்களும் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. ஐந்தாம் தொகுதி, அவரது புதிய முறை ஆவணம் நூலிருந்து கிடைத்த செய்திகளின் தொகுப்பாக அமையும். அரிஸ்டாட்டிலுக்குப் பிறகு, யாரும் மேற்கொள்ள நினைத்திராத இந்தப் பிரம்மாண்டமான திட்டம் முடிவுறாமல் போனது. எனினும், அவரது "கல்வி முன்னேற்றம்" புதிய முறையாவணம்" ஆகிய இரு நூல்களையும் அவர் திட்டமிட்ட மாபெரும் நூலின் முதல் இரு தொகுதிகள் எனக் கருதலாம்.

"புதிய முறை ஆவணம்" என்ற நூல், பேக்கனுடைய படைப்புகள் அனைத்திலும் தலைசிறந்தது எனலாம். அனுபவத்தால் அறிந்திடத்தக்க ஆராய்ச்சி முறையினைக் கைக்கொள்ளுமாறு இந்நூல் அடிப்படையில் வலியுறுத்துகிறது.

அரிஸ்டாட்டிலினுடைய அனுமானத் தருக்க முறையை முற்றிலுமாக நம்பியிருப்பதில் பயனில்லை. ஒரு புதிய ஆராய்ச்சி முறைவகைத் தேர்வு முறை தேவை. அறிவு என்பது ஏதோ ஒன்றில் தொடங்கி, அனுமானிக்கப்பட்ட முடிவுகள் அல்ல; நாம் கண்டறியும் ஒன்றுதான் அறிவு. உலகை அறிந்து கொள்வதற்கு, முதலில் அதைக் கூர்ந்து நோக்க வேண்டும்". "முதலில் உண்மைகளைச் சேகரியுங்கள், பின்னர் அந்த உண்மைகளிலிருந்து முடிவுகளை வரவழைக்க வேண்டும்

என்று பேக்கன் கூறினார். பேக்கனின் வகைத் தேர்வு முறையை ஒவ்வொரு அம்சத்திலும் விஞ்ஞானிகள் பின்பற்றவில்லை என்றாலும், அவர் கூறிய “கூர்ந்து நோக்குதலும், பரிசோதனை செய்தலும் இன்றியமையாதவை ” என்னும் கொள்கை விஞ்ஞானிகள் பயன்படுத்தி வரும் முறையாக அமைந்தது.

புதிய உலகம்

[தொகு]

பேக்கன் எழுதிய கடைசி நூல் "புதிய உலகம்" என்பதாகும். பசிபிக் பெருங்கடலிலுள்ள ஒரு கற்பனைத் தீவில் அமைந்திருக்கும் ஒரு கற்பனை மக்கள் பொதுவுரிமை பற்றி இந்நூல் விவரிக்கிறது. இந்நூலின் பின்னணி, சர் தாமஸ் மோர் தீட்டிக் காட்டிய கற்பனை உலகை நினைவூட்டிய போதிலும், பேக்கன் இதில் விவரித்துள்ள செய்திகள் முற்றிலும் வேறானவை. பேக்கனின் நூலின் குறிப்பிட்டுள்ள உன்னதப் பொதுவுரிமையரசின் வளமும், நலமும், அறிவியல் ஆராய்ச்சியின் முடிவுகளை நேரடியாகச் சார்ந்திருக்கின்றன. இதன் மூலம், அறிவியல் ஆராய்ச்சியைத் திறம்படப் பயன்படுத்துவதன் வாயிலாக, தமது கற்பனைத் தீவிலுள்ள மக்களைப் போன்று ஐரோப்பிய மக்களும் வாழ்வு வளமும் மனமகிழ்வும் பெறலாம் என வாசகர்களுக்குப் பேக்கன் உணர்த்துகிறார்.

பண்புகள்

[தொகு]

உலகின் முதல் நவீன தத்துவாறிஞராக பிரான்சிஸ் பேக்கன் விளங்கினார். அவர் கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கையுடையவராக இருந்தபோதிலும் மொத்தத்தில் அவருடைய கண்ணோட்டம் சமயச் சார்புடையதாகவே இருந்தது. பட்டறிவை நம்பும் பகுத்தறிவு வாதியாக இருந்தார். அரசியலில், அவர் கோட்பாட்டுவாதியாக இல்லாமல் உலகியல் வாதியாக இருந்தார். பண்டை நூல்களில் நுண்மான் நுழைபுலமும் அரிய இலக்கியத் திறமையும் பெற்றிருந்த இவர், அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்கும் பரிவுகாட்டும் மனப்பாங்குடையவராக விளங்கினார். பேக்கன் ஆழ்ந்த நாட்டுப்பற்று மிக்க ஓர் ஆங்கிலேயராகத் திகழ்ந்தார். எனினும், அவர் தம் நாட்டுக்கு அப்பாலும் செல்லும் தொலைநோக்குடையவராக இருந்தார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிஸ்_பேக்கன்&oldid=2955131" இலிருந்து மீள்விக்கப்பட்டது