ஜோர்ஜ் ஹபாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜோர்ஜ் ஹப்பாஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜோர்ஜ் ஹபாஷ்
George Habash
பிறப்பு: ஆகத்து 2, 1926(1926-08-02)
பிறந்த இடம்: பாலஸ்தீனம்
இறப்பு: சனவரி 26, 2008(2008-01-26) (அகவை 81)
இறந்த இடம்: அம்மான், ஜோர்தான்
இயக்கம்: அரபு தேசியம், மார்க்சியம்-லெனினியம்
முக்கிய அமைப்புகள்: அரபு தேசிய இயக்கம்
பாலஸ்தீன விடுதலைக்கான பிரபல முன்னணி
மதம்: கிரேக்க பழமைவாத கிறிஸ்தவம்
Influences நாசரிசம்

ஜோர்ஜ் ஹபாஷ் (George Habash, அரபு மொழி: جورج حبش, ஆகஸ்ட் 2, 1926ஜனவரி 26, 2008), என்பவர் பாலஸ்தீன அரசியல்வாதி ஆவார். பழமைவாத கிறிஸ்தவரான இவர் பாலஸ்தீன விடுதலைக்கான பிரபல முன்னணி (Popular Front for the Liberation of Palestine, PFLP) என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்து 2000-ம் ஆண்டு வரையில் அதன் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். இஸ்ரேலின் எதிரியாக, மேற்குலக நாடுகளின் பயங்கரவாதத் திருத்தந்தையாக கணிக்கப்பட்ட ஹபாஷ், அதே நேரம் பாலஸ்தீன மக்கள் அனைத்து பிரிவினரும் மதிக்கும் ஒருவராக, சர்வதேச விடுதலை இயக்கங்களின் தோழனாக கருதப்பட்டார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு, பாலஸ்தீன மாநிலத்தில் அமைக்கப்பட்ட பின்னர், ஹபாசின் அரசியல் வாழ்க்கை ஆரம்பமாகியது. கிரேக்க கிறிஸ்தவ மதப்பிரிவை சேர்ந்த, ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்த ஜோர்ஜ் ஹபாஷ், பின்னர் லெபனானில் அகதியாக இருந்த போது, பெய்ரூட் அமெரிக்க பல்கலைகழகத்தில் மருத்துவராக பட்டம் பெற்றாலும், பாலஸ்தீன விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆரம்ப காலத்தில் எகிப்தியத் தலைவர் நாசரின் வழியில், அரபு தேசியவாத இயக்கத்தை உருவாக்கிய ஹப்பாசும் தோழர்களும், பின்னர் மார்க்சிய-லெனினியத் தத்துவங்களால் கவரப்பட்டு, PLFP என்று மாற்றிக்கொண்டனர். அன்றிலிருந்து ஹப்பாசின் தனித்துவ அரசியல் உலகம் முழுக்க பிரபலமானது.

ஹபாஷ் ஆரம்பத்தில் அரபு (சர்வ)தேசியம், பின்னர் மார்க்சிய சர்வதேசியம் போன்றவத்தின் ஓர் அங்கமாக தனது இயக்கத்தை நிறுவினார். இதற்கு அவரது தனிப்பட்ட வரலாறு காரணமாக இருக்கலாம். பலஸ்தீனியர்களில் கணிசமான அளவு தொகையில் உள்ள (கிரேக்க பிரிவு) கிறிஸ்தவர்கள், இஸ்ரேல் என்ற தேசம் ஸ்தாபிக்கப்பட்ட போது, யூதர்கள் வன்முறையைப் பிரயோகித்து இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் பாலஸ்தீனத்தின் பூர்வீககுடிகள் அனைவரையும், இஸ்லாமியர், கிறிஸ்தவர் பேதம் பார்க்காமல் வெளியேற்றினர். ஆகவே அரபு தேசியவாத இயக்கமாக இருந்தாலும், PLFP யாக இருந்தாலும் மதச்சார்பற்ற பாலஸ்தீனம் என்ற நாட்டை உருவாக்க முயன்றது.

அரபு சர்வதேசிய ஒற்றுமையின் முதற்படியாக, எகிப்தும், சிரியாவும் ஒன்று சேர்ந்த போது வரவேற்ற ஜோர்ஜ் ஹபாஷ், பின்னர் அந்த "அரபு ஒன்றியம்" சுயநல அரசியலால் சீர்குலைந்த போது விரக்தியுற்று இருந்த வேளையில், அவர் ஸ்தாபித்த PLFP முற்றிலும் வேறுவிதமான நிலைப்பாட்டை எடுத்தது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் விமானங்களை வெற்றிகரமாக கடத்தி, பின்னர் பிரயாணிகளை விடுவித்து விட்டு, குண்டு வைத்து தகர்த்தத்தின் மூலம், பலஸ்தீன பிரச்சினையை சர்வதேச அரங்கிற்கு எடுத்து சென்றனர். அப்படியான நடவடிக்கை ஒன்றில் பங்கு பற்றிய உலகப்புகழ் பெற்ற இளம் பெண் போராளி லைலா காலித், இன்று PLFP யின் தலைவர்களில் ஒருவராக ஜோர்தானில் வசிக்கிறார்.

PLFP யின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பன்னாட்டு ஆர்வலர்களின் உதவி கிடைத்தது. இலத்தீன் அமெரிக்கத் தோழர்கள் சிலர் விமானக்கடத்தல்களின் போது பங்குபற்றி இருக்கின்றனர். திட்டம் தோல்வியடையும் பட்சத்தில் சிறை சென்றுள்ளனர். இஸ்ரேல், டெல் அவிவ் விமான நிலையத்தில் துப்பாக்கிப்பிரயோகத்தில் ஈடுபட்ட ஜப்பானியர்கள், பலஸ்தீன போராட்டத்தில் தமதுயிரையும் கொடுக்க தயாராக இருந்தனர். எழுபதுகளில் இடம்பெற்ற இது போன்ற தாக்குதல்கள் சர்வதேச ஒற்றுமைக்கு செயல் வடிவம் கொடுத்தன.

அன்று எதிரணியில் இருந்த சோவியத் ஒன்றியம், பாலஸ்தீன போராட்டத்தை அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராக கணித்திருந்தது. அன்றைய சோவியத் ஒன்றியத்திலும், சோசலிச கிழக்கு ஐரோப்பாவிலும் கல்வி கற்ற பாலஸ்தீன மாணவர்கள், வீதிகளில் பிரச்சாரம் செய்யவும், போராட்டத்திற்கு பணம் சேர்க்கவும் அனுமதிக்கப்பட்டனர். அதன்போது அங்கு படித்த சில பிற நாட்டு மாணவர்களும் பலஸ்தீன பிரச்சினை பற்றி தெரிந்து கொண்டு, ஆதரவளிக்க முன்வந்தனர். அப்படி வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர், வெனிசுவேலாவை சேர்ந்த கார்லோஸ் என்ற இளைஞர் பின்னர் உலகப்புகழ் பெற்ற "சர்வதேச பயங்கரவாதியாகி", தற்போது பிரெஞ்சு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இத்தகைய பிறநாட்டு ஆர்வலர்கள், PLFP இனால் தெரிவு செய்யப்பட்டு, ஆயுதப்பயிற்சிக்காக ஜோர்தான் அனுப்பப்பட்டனர். பயிற்சி முடிந்த பின்னர் ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல்களுக்கான உத்தரவு வரும் வரை தங்கவைக்கப்பட்டனர்.

கல்கீலியா நகரில் PFLP மாவீரர் நினைவுத் தூபி

1967 ம் ஆண்டு, PLFP ஸ்தாபிக்கபட்ட அதே ஆண்டு, ஐரோப்பாவில் மாணவர்கள் கிளர்ச்சி செய்தனர். பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் மாணவர்கள் புரட்சியை முன்னெடுத்து, ஆட்சியை கைப்பற்றும் சாத்தியக்கூறுகள் இருந்தன. இருப்பினும் சமயோசிதமாக நடந்து கொண்ட அரசாங்கங்கள், திரிபுவாத கம்யூனிஸ்ட் கட்சிகளின் துணையுடன், கிளர்ச்சிகளை அடக்கின. இதனால் சில மாணவர்கள் ஆயுதப்போராட்ட வழியை நாடினர். ஜெர்மனியில் RAF, இத்தாலியில் Red Birigade, பிரான்சில் Action Directe போன்றன அரசியல் படுகொலைகள், குண்டு வைப்புகள் மூலம் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். இவர்களுக்கு தேவையான ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் PLFP விநியோகித்தது. அத்தோடு நிற்காது, அந்த அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்தது. சோவியத் ஒன்றியம் வேண்டிய அளவு நிதி உதவி செய்ததால், உலகின் எந்த நாட்டில் இருந்து போவோருகெல்லாம், இராணுவப்பயிற்சி தாராளமாக கிடைத்தது.

ஈழ விடுதலை போராளிகளும் இந்த சந்தர்ப்பத்தை தாராளமாக பயன்படுத்திக் கொண்டனர். வெளிநாட்டு பயிற்சி பெறுவதற்காக என்று, இலங்கையில் இருந்து தெரிவான பல தமிழ் இளைஞர்கள், லெபனானில் இருந்த PLFP முகாம்களில் வந்து குவிந்தனர். அப்போது நடந்து கொண்டிருந்த லெபனான் உள்நாட்டுப் போர், அந்த நாட்டில் பன்முகத்தன்மையிலான அரசியல்/இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களை ஏற்படுத்தியிருந்தது. தெற்கு லெபனான் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது போல, மேற்கு லெபனான் சிரியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பெகா பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் அந்தப்பகுதியில், PLFP உட்பட அனைத்து பலஸ்தீன அமைப்புகளும் சுதந்திரமாக இயங்கின. இதனால் உலகின் எல்லப்பகுதகளில் இருந்தும் வந்த தீவிரவாத இளைஞர்கள் அங்கே புகலிடம் பெற முடிந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு, லெபனான் அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால், சிரியா பின்வாங்கிய பின்னர் தான், அந்த புகலிடம் பறிபோனது.

அந்த சமயம் தான் யாசர் அரபாத்தின் தேசியவாத பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO), இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பலஸ்தீன அதிகார சபை என்ற சமரசத்திற்கு இணங்கியது. ஜோர்ஜ் ஹப்பாஜ், இந்த சமரசத்திற்கு கடைசி வரை உடன்படாமல், தனது தோழர்களுடன் சிரியாவில் தஞ்சமடைந்தார். அவரது விட்டுக்கொடா தன்மை, அனைத்து பாலஸ்தீன மக்களிடமும் நன்மதிப்பை பெற்றுக்கொடுத்தது. ஹப்பாசின் இறுதிக்காலத்தில் PLFP மார்க்சிய-லெனினிசத்தை நடைமுறையில் கைவிட்டு விட்டு, இடதுசாரி தேசியவாத அமைப்பாக தன்னை மாற்றிக்கொண்டது. ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் போன்ற மதவாத அமைப்புகளுடன், பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்தது. மதச்சார்பற்ற PLFP யும், மதவாத ஹமாசும் ஒன்றாக வேலைசெய்வது, பலருக்கு நம்பமுடியாமல் இருந்தாலும், நிகழ்கால பலஸ்தீன யதார்த்தம் அத்தகைய கூட்டணிக்கு நிர்ப்பந்தித்து உள்ளது. அண்மையில் கூட PLFP யும், இஸ்லாமிய ஜிஹாத்தும் சேர்ந்து இஸ்ரேலிய எண்ணெய்க்குதங்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. முற்றுகையின் கீழ் உள்ள காசா பகுதிக்கு எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் இடைநிறுத்திய நேரத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மறைவு[தொகு]

ஜோர்ஜ் ஹபாஷ் தனது 81வது அகவையில் ஜோர்தான் தலைநகர் அம்மானில் இறந்தார். ஹபாஷ், மாரடைப்பு காரணமாகவே, மரணத்தைத் தழுவியதாக அவரின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர்[1]. ஹபாசிற்கு ஹில்டா என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் காலமானார் 3 நாள் துக்க தினம் பிரகடனம்". http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1201444427&archive=&start_from=&ucat=1&. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜ்_ஹபாஷ்&oldid=3573446" இருந்து மீள்விக்கப்பட்டது