ஜெ. விஜயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெ. விஜயா
பிறப்பு 1959
பெங்களூர், கருநாடகம்
தேசியம்இந்தியர்
துறைநீர்நில வாழ்வன, ஊர்வன
Alma materஎத்திராஜ் கல்லூரி, சென்னை
அறியப்பட்டதுஇந்திய முதல் நீர்நில வாழ்வன, ஊர்வன பெண் ஆராய்ச்சியாளர்

ஜெகநாநாதன் விஜயா (J. Vijaya)(1959-1987) என்பவர் இந்தியாவின் முதல் பெண் ஊர்வன மற்றும் ஈரிடவாழ்வியலாளர் ஆவார்.[1] இவர் நாடு முழுவதும் ஆமைகளின் நடமாட்டத்தை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் உலக பாதுகாப்பு சங்கத்தின் நன்னீர் செலோனியன் நிபுணர் குழுவின் தலைவரான எட்வர்ட் மோலின் உதவியாளராக பணியாற்றினார்.[2]

வாழ்க்கை[தொகு]

விஜயா பெங்களூரில் பிறந்தார். இவர் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை அங்கேயே முடித்தார். இவரது தந்தையின் பணியிடமாற்றம் காரணமாக உயர்நிலைப் பள்ளிப் படிப்பினை கோயம்புத்தூர் தூய ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாண்டுகள் படித்துவிட்டு, இறுதிப் பள்ளிப் படிப்பிற்காகச் சென்னைக்குச் சென்றார்.

சென்னையிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் 1978ஆம் ஆண்டு விலங்கியல் மாணவியாகத் தனது முதல் ஆண்டிலிருந்தபோது, சென்னைப் பாம்பு பூங்காவில் தன்னார்வலாரகச் சேவையாற்றினார்.[3] இவர் உரோமுலசு விட்டேக்கரின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்றார். 1981-ல் பட்டம் பெற்ற பிறகு சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளையின் முழுநேர பணியினைத் தொடங்கினார்.

தனது 22 வயதில், இந்தியா முழுவதும் ஆமைகள் பற்றிய கணக்கெடுப்புக்காகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் நன்னீர் செலோனியன் நிபுணர் குழுவின் அப்போதைய தலைவரான எட்வர்ட் மோலுக்கு உதவ உரோமுலசு விட்டேக்கரால் பரிந்துரைக்கப்பட்டார். இவர் நாடு முழுவதும் பயணம் செய்து கடல் ஆமை சுரண்டலைக் குறைக்க உதவிய தரவுகளைச் சேகரித்தார்.[4]

ஆலிவ் ரிட்லி ஆமைகள் அழிக்கப்படுவது குறித்த இவரது ஆராய்ச்சி மற்றும் புகைப்படம் தேசிய இதழில் வெளிவந்தது. இது ஆமை வர்த்தகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கடலோர காவல்படைக்கு உத்தரவிட வழிவகுத்தது.

அங்கீகாரம்[தொகு]

விஜயா கொச்சி பிரம்பு ஆமைகளை விரிவாக ஆராய்ந்து ஆவணப்படுத்தினார். மேலும் இவர் கேரளாவின் காடுகளில் பயணம் செய்தார். இவரது உடல் ஏப்ரல் 1987-ல் காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவரது மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை. இவரது பணி மற்றும் தியாகத்தை நினைவுகூரும் வகையில், இவர் இறந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் புதிய இனத்தைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்ட கரும்பு ஆமைக்கு விஜயாசெலிசு என்று பெயரிடப்பட்டது.[5][6] சென்னை முதலைக் காப்பக ஆமைக் குளத்திற்குப் பக்கத்தில் இவருக்கு ஒரு சிறிய நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._விஜயா&oldid=3665693" இருந்து மீள்விக்கப்பட்டது