உள்ளடக்கத்துக்குச் செல்

ஜிம் குரோ சட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Cover of music score for "Jim Crow Jubilee," published in Boston in 1847.

ஜிம் குரோ சட்டங்கள் (Jim Crow laws) என்பன 1876க்கும் 1965க்கும் இடையே மாநில மற்றும் கூட்டரசால் இயற்றப்பட்ட சட்டங்களைக் குறிக்கும். இந்தச் சட்டங்கள் முன்னாள் கூட்டமைப்பின் தெற்கு மாநிலங்களில் அனைத்து பொது வசதிகளிலும் சட்டப்படி இனவாரி தனிப்படுத்துகையைக் கட்டாயமாக்கின. 1890 முதல் ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு "தனியான ஆனால் சமமான" நிலை வழங்கப்பட்டது. இந்தப் பிரிப்பினைச் செயற்படுத்துகையில் வெள்ளை அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டதை விட மோசமான நிலைக்கு ஆபிரிக்க அமெரிக்கர்கள் தள்ளப்பட்டனர். பல பொருளியல், கல்வி, மற்றும் சமூகப் பின்னடைவுகளுக்கு இவை வழிவகுத்தன. சட்டப்படியானப் பிரிப்பு தெற்கத்திய ஐக்கிய அமெரிக்காவில் மட்டுமே முதன்மையாக இருந்தது. வட மாநிலங்களில் இத்தகையப் பிரிப்பு பொதுவாக நடைமுறைப்படி இருந்தது. காட்டாக குடியிருப்புகளில் பிரிப்புகள் வரைமொழி உடன்பாடுகளாலும், வங்கி கடன் கொடுத்தல்களிலும் பணி அமர்த்தல் செய்முறைகளிலும் தனிப்படுத்துதல் இருந்தன. தவிர தொழிற்சங்கங்களும் வேறுபாட்டை நிலைநிறுத்துமாறு செயல்பட்டன.

ஜிம் குரோ சட்டங்களின்படி அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பொதுவிடங்கள், பொதுப் போக்குவரத்து வசதிகளில் தனிப்படுத்துகை இருந்தது. இங்கெல்லாம் ஓய்விடங்கள், உணவகங்கள், குடிநீர் ஊற்றுகள் போன்ற வசதிகள் வெள்ளையருக்கும் கறுப்பினத்தவருக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தன. ஐக்கிய அமெரிக்க படைத்துறையும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தது.[1][2][3]

இந்தச் சட்டங்கள் முன்னதாக 1800-1866களில் நிலவிவந்த, ஆபிரிக்க அமெரிக்கருக்கு எவ்வித உரிமைகளையும் வழங்காத, கருப்புச் சட்டங்களை ஒட்டி இயற்றப்பட்டன. 1954ஆம் ஆண்டில் பிரவுன் எதிர் கல்வி வாரியம் வழக்கில் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் அரசுப் பள்ளிகளில் தனிப்படுத்துகையை அரசியலமைப்பிற்கு முரணானதாக தீர்ப்பளித்தது. கறுப்பினர் முன்னேற்றத்திற்கான தேசியக் கழகம் (NAACP) இந்தச் சட்டங்களை நீக்கப் போராடி வந்தது. அனைத்து ஜிம் குரோ சட்டங்களும் குடிசார் உரிமைகள் சட்டம், 1964 மற்றும் வாக்களிப்பு உரிமைகள் சட்டம் 1965 ஆகியவற்றால் ஒழிக்கப்பட்டன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Fremon, David (2000). The Jim Crow Laws and Racism in American History. Enslow. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0766012972.
  2. Schmermund, Elizabeth (2016). Reading and Interpreting the Works of Harper Lee. Enslow Publishing, LLC. pp. 27–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7660-7914-4.
  3. Bubar, Joe (March 9, 2020). "The Jim Crow North", Upfront Magazine - Scholastic. Retrieved June 7, 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்_குரோ_சட்டங்கள்&oldid=4163188" இலிருந்து மீள்விக்கப்பட்டது