சொகோட்டோ கலீபகம்

ஆள்கூறுகள்: 11°04′14″N 7°34′50″E / 11.070603°N 7.580566°E / 11.070603; 7.580566
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொகோட்டோ கலீபகம்
நைஜீரிய மரபுவழி அரசு
சொகோட்டோ கலீபகம்-இன் கொடி
கொடி
நாடு நைஜீரியா
அரசு
 • சுல்தான்சஃது அபூபக்கர்

சொகோட்டோ கலீபகம் நைஜீரியாவிலுள்ள ஆன்மீக சமுதாயத்தின் அடையாளமாக, சொகோட்டோ சுல்தான் சஃது அபூபக்கரால் நிர்வகிக்கப்படுகிறது. 1809 ஆம் ஆண்டு ஃபுலானி ஜிஹாதின் போது இக்கலீபகம் உதுமான் டான் ஃபோடியோ என்பவரால் நிறுவப்பட்டது.[1] ஐரோப்பிய வெற்றிகளுக்கும் கொலனிப்படுத்துதலுக்கும் முன்னர் ஆபிரிக்காவின் சகாரா பிராந்தியத்தில் விளங்கிய மிக வன்மையான போரரசுகளுள் ஒன்றாக அது திகழந்தது. ஐரோப்பிய கொலனிப்படுத்தலின் போதும் அதன் பின்னரும் சொகோட்டோ கலீபகம் தன் அதிகாரம் குறைக்கப்பட்ட நிலையிலும் நிலைத்திருக்கின்றது.

பின்னணி[தொகு]

மேற்காபிரிக்க நகரங்களுக்கிடையில் காணப்படும் புல்வெளிகளில் வாழும் ஃபுலானி இன மக்கள் வழிவழியாக ஆடு, மாடு, செம்மறி போன்றவற்றை மேய்த்து வாழும் ஒரு நாடோடி இனத்தினராவர். அவர்களின் வணிக முயற்சிகள் கூடியதன் பலனாக ஃபுலானி இனத்தவர் சிலர் நகரங்களிலும் குடியேறி அவற்றில் சிறுபான்மையினராக வாழ்கின்றனர்.

ஃபுலானி இன மக்கள் வாழ்ந்த பகுதிகளின் பெரும்பாலான ஆட்சியாளர்கள் முஸ்லிம்களாக இருந்தவாறே அவ்வினத்தவரும் பெரும்பான்மையாக முஸ்லிம்களாக மாறினர். மேற்படி அரசுகளின் ஆட்சியாளர்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றிய முறையில் சில குழப்பங்கள் காணப்பட்டன. தங்களுடைய மூதாதையரின் மதத்தைப் பற்றிய குழப்பங்கள் தோன்றிய போது அவர்கள் அவற்றின் பக்கம் சாயத் தொடங்கியதுடன் அம்மூதாதை மதங்களுக்கு ஆதரவளித்தனர். பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தங்களை அடக்கத் தொடங்கிய ஆட்சியாளருக்கெதிராக ஃபுலானி இன மக்கள் ஆங்காங்கே கிளர்ந்தெழத் தொடங்கினர். அக்கிளர்ச்சிகளின் பின்னர் சாகில் பிராந்தியத்தில் சிறிது காலம் நிலைத்திருந்த சிற்சில சிறிய அமீரகங்கள் உருவாகின.

இப்பிராந்தியத்தின் மிக வன்மையான அரசுகளாக ஹவுசாலாந்து பகுதியின் நகர அரசுகள் விளங்கின. ஏராளமான ஃபுலானி இன மக்களைத் தம்மகத்தே கொண்ட மேற்படி நகர அரசுகள் அம்மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதின. எனினும், பல நூற்றாண்டு காலத் தொடர்புகளின் காரணமாக ஃபுலானி இன மக்களும் ஹவுசா இன மக்களும் ஓரளவு ஒருங்கிணைந்திருந்தனர். ஹவுசாலாந்தில் விளங்கிய நகர அரசுகளில் இனங்களிடையே மிகுந்த வேறுபாடு காட்டியவற்றுள் வலுவிழந்த கோபிர் நகர அரசும் ஒன்றாகும். ஹவுசாலாந்து எல்லையில் விளங்கிய அது முன்னைய சோங்காய் பேரரசின் எச்சமாக இருந்தது. கோபிர் அரசு ஃபுலானி மற்றும் ஹவுசா இன மக்களிடம் காட்டிய வேறுபாடு குறிப்பிடத் தக்கது.

ஃபுலானி ஜிஹாத்[தொகு]

இப்பிராந்தியத்தின் மிகப் பிரபலமான இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரும் நகர வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட ஃபுலானி இனத்தவருமான உதுமான் டான் ஃபோடியோ கோபிர் நகரில் வாழ்ந்தார். கோபிர் நகரின் ஆட்சியாயளரான் பாவாவின் அனுமதியுடன் அவர் டெகெல் பகுதியில் முறையான இஸ்லாமிய சமூகமொன்றைத் தோற்றுவித்தார். அவ்வனுமதிக்கு வெகுமதியாக அவர் பாவாவின் அரசை ஆதரித்ததுடன், பாவாவின் மருமகனும் முடிக்குரிய இளவரசனுமான யுன்ஃபா என்பவனுக்குக் கல்வியறிவு புகட்டினார். எனினும், பிற்காலத்தில் யுன்ஃபா ஆட்சியிலமர்ந்த போது, உதுமான் டான் ஃபோடியோவின் சமுதாயத்தின் மீதான தன்னாட்சி அதிகாரத்தை இழக்கச் செய்து அவரைக் கொலை செய்துவிட நாடினான்.

அப்போது டெகெல் பகுதி இஸ்லாமிய சமுதாயம் தன்னைப் பாதுகாத்துக் கொண்ட போதும் யுன்ஃபாவின் படைகளுக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் உதுமான் டான் ஃபோடியோவும் அவரைப் பின்பற்றியோரும் குடு பகுதிக்குத் தப்பியோடினர். அந்நிலையில் அவர் அடக்குமுறையாளருக்கு எதிராகப் போர் புரியுமாறு ஃபுலானி மக்களிடம் வேண்டினார். அதுவே ஃபுலானி ஜிஹாதாக முடிந்தது. அவரது அழைப்பின் காரணமாக அவருடன் சேர்ந்து கொண்ட ஏராளமான ஃபுலானி மற்றும் ஹவுசா வீரர்கள் ஹவுசாலாந்து பிராந்தியத்தின் பல்வேறு அரசுகளுக்குமெதிராகக் கிளர்ந்தெழுந்து அவற்றை விரைவிலேயே அதிகாரமிழக்கச் செய்தனர். அவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட புதிய கலீபகத்தின் ஆட்சியாளராக உதுமான் டான் ஃபோடியோ பிரகடனப்படுத்தப்பட்டார்.

கலீபகத்தின் வளர்ச்சி[தொகு]

ஹவுசாலாந்தில் நிறுவப்பட்ட இவ்வடித்தளத்திலிருந்து ஃபுலானி இன மக்கள் அப்பிராந்தியம் முழுவதும் பரவத் தொடங்கினர். அவர்களது அரசின் மேற்குப் பகுதியிலிருந்த திறந்த சமவெளிகள் உடனடியாகவே இணைக்கப்பட்டன. தெற்குப் புறம் இருந்த யொருபாலாந்தின் வடக்குப் பகுதியும் வெற்றி கொள்ளப்பட்டது. சொகோட்டோ கலீபகத்துக்குக் கிழக்காயிருந்த போர்னு பேரரசினால் அவர்களது கிழக்குப் புற வெற்றி 1810 ஆம் ஆண்டு தடுக்கப்பட்டது. புரவிகள் காடுகளுக்குள் விரைவாகப் பயணிக்க முடியாதிருந்தமையாலும் தெற்கத்திய நோய்களின் காரணமாகவும், வலிமையான புரவிப் படைமீது இருந்த அவர்களின் வன்மை தெற்கு நோக்கி ஊடுருவுவது கடினமாயிருந்தது. எனினும், சொகோட்டோ கலீபகம் இன்றைய புர்கினா பாசோவிலிருந்து கமரூன் வரையான பகுதிகளை உள்ளடக்கி ஆபிரிக்காவின் மிகப் பெரிய அரசாகத் திகழ்ந்தது.

அவர்கள் உருவாக்கிய பேரரசு பல் சிறிய அமீரகங்களாக ஆங்காங்கே பிரிக்கப்பட்டு நிருவகிக்கப்பட்டது. உதுமான் டான் ஃபோடியோவின் கீழ் அவரது ஆட்சி இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றிலொன்று அவரது சகோதரராலும் மற்றொன்று அவரது மகனாலும் நிருவகிக்கப்பட்டு வந்தது. 1815 ஆம் ஆண்டு உதுமான் டான் ஃபோடியோ ஆட்சியிலிருந்து ஒதுங்கிக் கொண்டதும் பேரரசின் அதிகாரம் அவரது மகன் முகம்மது பெல்லோவிடம் போய்ச் சேர்ந்தது. முகம்மது பெல்லோ சொகோட்டோ நகரத்தை உருவாக்கி அதைத் தன் தலைநகராக மாற்றினார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர்களது பேரரசு பொதுவாக சொகோட்டோ கலீபகம் என்று அழைக்கப்பட்டது. உதுமான் டான் ஃபோடியோவின் சகோதரர் அப்துல்லாஹ் டான் ஃபோடியோவால் நிருவகிக்கப்பட்ட குவாண்டு அமீரகம் என அழைக்கப்பட்ட மேற்குப் பகுதி அவரது பரம்பரையினராலேயே தொடர்ந்தும் ஆளப்பட்டதெனினும் அது சொகோட்டோ கலீபகத்தின் இணைந்த பகுதியாகவே விளங்கியது.

தன் இராணுவ வெற்றிகளுக்கு மேலதிகமாக இப்பேரரசு கல்வி சார் பங்களிப்புகள் தொடர்பில் மிகப் பிரபலமடைந்தது. உதுமான், அப்துல்லாஹ், முகம்மது பெல்லோ போன்ற அனைவரும் சிறந்த அறிஞர்களாகக் கருதப்பட்டனர். அத்துடன் அவர்கள் மூவருமே பிரமாண்டமான பேரரசை நிருவகிப்போராயிருந்தும் இஸ்லாம், அரசியல், வரலாறு போன்ற விடயங்களில் ஏராளமான கவிதைகளையும் எழுத்துப் பணிகளையும் வெளியிட்டனர். முகம்மது பெல்லோவின் இறப்பின் பின்னரும் கல்வி சார் பங்களிப்புக் காணப்பட்ட போதும் இப்பேரரசு அரசியல் செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. ஹவுசா மக்களை உள்ளடக்கிய இப்பேரரசு காலஞ் செல்லச் செல்ல ஹவுசா இன அரசுகளின் அடையாளங்களைத் தன்னகத்தே பெற்றுக் கொண்டதுடன் அதன் அலுவல் மொழியாக ஹவுசா மொழியைக் கொண்டிருந்தது.

இப்பேரரசு தொடர்ச்சியாக பொருளாதாரத் துறையில் வெற்றி கண்டது. சொகோட்டோ கலீபகத்தினால் ஒன்றுபடுத்தப்பட்ட ஹவுசாலாந்து பிராந்தியம் எதிர்பாராத அளவு வளம் பெறத் தொடங்கியது. அத்துடன் அப்பகுதி சகாரா பகுதி நாடோடிக் குழுக்களினால் கொள்ளையிடப்படுவதிலிருந்தும் பாதுகாப்பாக விளங்கியது.

சொகோட்டோ சுல்தான் அதிகாரம் மிக்கவராகக் காணப்பட்ட போதும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் கானோ போன்ற பகுதிகளை ஆண்ட அமீர்கள் தங்களது அதிகாரத்தைப் படிப்படியாக நிலை நிறுத்திக்கொண்டனர். 1893 ஆம் ஆண்டு கானோ அரச பொறுப்பைப் பெறுவது தொடர்பில் ஏற்பட்ட குழப்பம் அவர்களது முக்கியத்துவத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.

வீழ்ச்சி[தொகு]

மரபு வழி வணிக முயற்சிகளை அழித்து அருகாமையிலிருந்த அரசுகளுக்கு ஆயுதங்களை வழங்கிய ஐரோப்பிய கொலனிய ஆதிக்கம் காரணமாக இப்பேரரசு சிதைவடையத் தொடங்கியது. பிரெஞ்சு நாடுகாண் பயணி பார்பைத் லூயி மொண்டைல் என்பவர் 1891 ஆம் ஆண்டு சொகோட்டோவுக்கு வருகை தந்த போது, அதன் கலீபா அர்குங்கு அமீருடன் போர் புரிந்த வண்ணமிருந்தார். எனினும், அடுத்த ஆண்டே கலீபா அதில் வெற்றி பெற்றார். அப்போது ஃபுலானி அதிகாரம் குறைவடையத் தொடங்கியதாகக் கூறும் அவர் கலீபகத்தில் அண்மையில் பதவியேற்றிருந்த கலீபா அப்துல் ரஹ்மான் என்பவர் மீது வெறுப்புற்ற மக்கள் எழுச்சியையும் குறிப்பிடுகிறார்.[2] எனினும், சொகோட்டோ மற்றும் கானோ அரச பீடங்கள் வெற்றி கொள்ளப்பட்டமையால், இப்பேரரசு சிதைவுற்று பிரெஞ்சு மற்றும் பிரித்தானியரிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

கொலனிப்படுத்தலும் நவீன கலீபகமும்[தொகு]

பிரித்தானியரால் உள்நாட்டு ஆட்சியாளர்கள் குறிப்பிடத்தக்க அளவு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டவாறே ஃபுலானி அமீரக முறைமையை அவர்கள் பாதுகாத்தனர். சொகோட்டோ சுல்தான் இக்காலத்தில் நைஜீரிய முஸ்லிம்கள் அனைவரினதும் ஆன்மீகத் தலைவராக விளங்குகிறார். அவ்வாறே சுல்தான் பதவி உதுமான் டான் ஃபோடியோவின் வழிவந்தோரால் வகிக்கப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. McKay, Hill, Buckler, Ebrey, Beck, Crowston, Weisner-Hanks. உலக மக்கள் சமூகங்களின் வரலாறு. 8 ஆம் பதிப்பு. பாகம் C - 1775 முதல் இற்றை வரை. 2009 by Bedford/St. Martin's. ISBM-13: 978-0-312-68298-9. "இப்போட்டி அரசுகளின் விடயத்தில் மிக முக்கியமானது என்னவெனில் சொகோட்டோ கலீபகம் பொதுவான ஏனைய அரசுகளின் தன்மையைக் கொண்டுள்ளது. வட நைஜீரியாவின் முஸ்லிம் அரசான கோபிரில் வாழ்ந்த ஃபுலானி இனத்து இடையரிடமும் ஹவுசா இனத்து விவசாயிகளிடமும் பிரச்சாரம் செய்து சிறந்த முறையில் பின்பற்றுவோர் பலரைப் பெற்றுக் கொண்ட இஸ்லாமியப் போதகரான உதுமான் டான் போடியோ (1754-1817) என்பவரால் இக்கலீபகம் தோற்றுவிக்கப்பட்டது." p. 736.
  2. Claire Hirshfield (1979). பிரிவினை இராசதந்திரம்: பிரித்தானியா, பிரான்சு மற்றும் நைஜீரிய உருவாக்கம், 1890-1898. Springer. பக். 37ff. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9024720990. http://books.google.ca/books?id=vDGCuqGon0gC&pg=PA37. பார்த்த நாள்: 2010-10-10. 

மேற்கோள்கள்[தொகு]

  • Johnston, Hugh A.S. Fulani Empire of Sokoto. London: Oxford University Press, 1967. ISBN 019-215428-1.
  • Stilwell, Sean. Paradoxes of Power: The Kano "Mamluks" and Male Royal Slavery in the Sokoto Caliphate, 1804-1903. Portsmouth: Heinemann, 2004. ISBN 0-325-07041-5.

வெளித் தொடுப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சொகோட்டோ_கலீபகம்&oldid=3246504" இலிருந்து மீள்விக்கப்பட்டது