உள்ளடக்கத்துக்குச் செல்

செயற்பாட்டியம் (கட்டிடக்கலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டிடக்கலையில் செயற்பாட்டியம் (functionalism) என்பது, கட்டிட வடிவமைப்பு அதன் செயற்பாட்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்னும் கொள்கையாகும். இக்கூற்றுத் தன்விளக்கம் கொண்டிருப்பதுபோல் தோன்றினாலும், கட்டிடக்கலைத் துறையில், குறிப்பாக நவீன கட்டிடக்கலை தொடர்பில், இது சர்ச்சைக்குரிய ஒன்றாகவே உள்ளது. செருமனி, செக்கோசிலவாக்கியா, சோவியத் ஒன்றியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் செயற்பாட்டியக் கொள்கையின் செல்வாக்குக் கூடிய அளவில் காணப்படுகிறது.

இக்கருத்துருவின் அடிப்படைகளை, கட்டிடங்களுக்கு இருக்க வேண்டியவையாக விட்ருவியசு கூறிய மூன்று விடயங்களில் ஒன்றான "பயன்பாடு" என்பதில் காண முடியும். "அழகு", "உறுதி" என்பன ஏனைய இரண்டும் ஆகும். கட்டிடத்தின் செயற்பாட்டுக்குத் தேவையில்லாத அழகூட்டல் அம்சங்களை அழகியலுக்காக மட்டும் புகுத்துவதைச் செயற்பாட்டியக் கொள்கையை வலியுறுத்துபவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. கோதிக் மீளுயிர்ப்புக் கட்டிடக்கலைஞரான அகசுத்தசு வெல்பி பூகின் (Augustus Welby Pugin) என்பார், வசதி, கட்டுமானம், பொருத்தப்பாடு என்பவை தொடர்பில் தேவையற்ற எந்த ஒரு அம்சமும் கட்டிடத்தில் இருக்கக்கூடாது என்றும், கட்டிடத்தின் எல்லா அணிகளும் அதன் அவசியமான அமைப்பை மேம்படுத்துவதாக இருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.[1] இதனால், சில வேளைகளில், செயற்பட்டியமும், அழகியலும் ஒன்றுக்கொன்று எதிரானவை போல் விவாதிக்கப்பட்டாலும், இவை ஒன்றையொன்று குறை நிரப்பும் வகையில் அமையக்கூடியவை.

செயற்பாட்டியத்தின் வரலாறு

[தொகு]

1896ல், சிக்காகோவைச் சேர்ந்த கட்டிடக்கலைஞரான லூயிசு சலிவன், "வடிவம் எப்போதும் செயற்பாட்டைத் தொடர்ந்து வரும்" என்னும் கருத்தை முன்வைத்தார். ஒரு கட்டிடத்தின் அளவு, அமைப்பு, வெளிகளுக்கு இடையிலான தொடர்புகள், பிற இயல்புகள் என்பன அக்கட்டிடத்தின் செயற்பாட்டினாலேயே தீர்மானிக்கப்படவேண்டும் என்பதே இதன் பொருள். அழகூட்டற் கூறுகள் செயற்பாடுகளோடு தொடர்பற்றைவை எனக் கருதப்பட்டதால், அழகூட்டற் கூறுகளைத் தாராளமாகப் பயன்படுத்துபவரான சலிவனின் கூற்று முரண்பட்டதாகவே தோன்றியது. அத்துடன் அவரது கூற்றில் குறிப்பிடப்பட்ட செயற்பாடு யார் தொடர்பானது என்பதும் தெளிவில்லை. எடுத்துக்காட்டாக, வாடகைக்கு விடுவதற்காகக் கட்டப்படும் தொடர்மாடி வீடுகளில் உரிமையாளர் சார்ந்த செயற்பாட்டுத் தேவைகளும், குடியிருப்பவர்கள் சார்ந்த செயற்பாட்டுத் தேவைகளும் முரண்படக்கூடும். எனினும் "வடிவம் செயற்பாட்டைத் தொடர்வது" என்னும் கூற்று, குறிப்பிடத்தக்கதும் நீண்டகாலம் நிலைத்ததுமான ஒரு எண்ணக்கருவை வெளிப்படுத்தியது.

குறிப்புக்கள்

[தொகு]
  1. A.W.N.Pugin, The true principles of pointed or Christian architecture : set forth in two lectures delivered at St. Marie's, Oscott.