லூயிசு சலிவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூயிசு என்றி சலிவன்
c.1895
பிறப்புசெப்டெம்பர் 3, 1856
பொசுட்டன், மசச்சூசெட்சு, ஐக்கிய அமெரிக்கா
இறப்புஏப்ரல் 14, 1924(1924-04-14) (அகவை 67)
சிக்காகோ, இலினாய்சு,ஐக்கிய அமெரிக்கா
பணிகட்டிடக்கலைஞர்

லூயிசு சலிவன் எனப் பரவலாக அறியப்படும் லூயிசு என்றி சலிவன் (Louis Henry Sullivan, செப்டெம்பர் 3, 1856 – ஏப்ரல் 14, 1924) ஒரு அமெரிக்கக் கட்டிடக்கலைஞர். இவர் வானளாவியின் தந்தை எனவும்,[1] கட்டிடக்கலையில் நவீனத்துவத்தின் தந்தை எனவும் அறியப்படுகிறார்.[2] இவர் ஒரு செல்வாக்கு மிக்க கட்டிடக்கலைஞர். புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரான பிராங்க் லாயிட் ரைட்டுக்கு வழிகாட்டியாக இருந்ததுடன், பிரைரீ குழு என அழைக்கப்பட்ட சிக்காகோவின் கட்டிடக் கலைஞர் குழுவொன்று இவரிடம் இருந்தே தூண்டுதல் பெற்றனர். என்றி ஆப்சன் ரிச்சார்ட்சன், பிராங்க் லாயிட் ரைட் ஆகியோரும் சலிவனும் அமெரிக்கக் கட்டிடக்கலையின் மும்மூர்த்திகள் எனப்படுகின்றனர். இவர் இறந்த பின்னர், 1944 ஆம் ஆண்டில், அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் சங்கத்தின் தங்கப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.

தொடக்கக் காலமும், தொழிலும்[தொகு]

லூயிசு என்றி சலிவன், அயர்லாந்து நாட்டவரான பட்ரிக் சலிவனுக்கும், சுவிசுக்காரரான அன்ட்ரியேன் லிஸ்ட் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவர்கள் இருவரும் 1840களின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்திருந்தனர். உயர்தரப் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்ட லூயிசு சலிவன், சிறிது காலம் மசச்சூசெட்சு தொழில்நுட்ப நிறுவனத்தில் கட்டிடக்கலை பயின்றார். 16 வயதிலேயே மசச்சூசெட்சு தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்த சலிவன் ஓராண்டு அங்கே படித்த பின்னர், பிலடெல்பியாவுக்குச் சென்றார். அங்கே கட்டிடக்கலைஞர் பிராங்க் பர்னெசு (Frank Furness) என்பவரிடம் பணியில் அமர்ந்தார்.

1873ன் பொருளாதார நெருக்கடியினால், பர்னசின் அலுவலகத்துக்கு வேலைகள் கிடைப்பது அரிதாகியது. இதனால், சலிவன் பணியில் இருந்து நீங்கும்படி ஆயிற்று. இந்நிலையில் சலிவன் சிக்காகோவுக்குச் சென்றார். 1871ல் ஏற்பட்ட பெரும் சிக்காகோ தீ விபத்தைத் தொடர்ந்து அங்கே கட்டிட வேலைகள் பெருமளவில் இருந்தன. சலிவன், சிக்காகோவில், வில்லியம் லெபாரன் ஜென்னி (William LeBaron Jenney) என்பவரிடம் பணியில் அமர்ந்தார். ஜென்னியே, முதல் எஃகுச் சட்டத்தினாலான கட்டிடத்தைக் கட்டியவர் என்ற பெருமையைப் பெற்றவர். ஓராண்டிலும் குறைவாகவே அவரிடம் பணிபுரிந்த சலிவன் பாரிசுக்குச் சென்று, ஓராண்டு இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் கல்வி பயின்றார். பின்னர் சிக்காகோ திரும்பிய அவர், ஜோசெப் எஸ். ஜான்ஸ்டன் & ஜான் ஏடெல்மன் (Joseph S. Johnston & John Edelman) என்னும் நிறுவனத்தில் படவரைஞராக வேலை பெற்றார். 1879ல் டாங்க்மார் அட்லர் (Dankmar Adler) என்பார் சலிவனைப் பணிக்கு அமர்த்தினார். ஓராண்டுக்குப் பின்னர் சலிவன் அந்நிறுவனத்தில் ஒரு பங்குதாரர் ஆனார். இது சலிவனின் மிகவும் பயன் விளைத்த ஆண்டுகளின் தொடக்கத்துக்கு வித்திட்டது.

குறிப்புக்கள்[தொகு]

  1. Kaufman, Mervyn D. (1969). Father of Skyscrapers: A Biography of Louis Sullivan. Boston: Little, Brown and Company.
  2. Chambers Biographical Dictionary. London: Chambers Harrap, 2007. s.v. "Sullivan, Louis Henry," http://www.credoreference.com/entry/chambbd/sullivan_louis_henry (subscription required)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிசு_சலிவன்&oldid=2707728" இலிருந்து மீள்விக்கப்பட்டது